நாம் சமயங்களில், வாகனங்களில் கிராமங்களை ஒட்டிய நெடுஞ்சாலைகளை கடக்க நேர்கையில், சாலையோரங்களில் அல்லது வயலோரங்களில், நம் கவனத்தை ஈர்க்கும் வெண்ணிற மலர்களின் செழுமையில் பரவலாக காணப்படும் ஒரு செடி வகைதான், ஊமத்தை. சில ஊமத்தையின் மலர்கள் மஞ்சள் வண்ணத்தில் அல்லது இளஞ்சிவப்பு வண்ணத்திலும் காணப்படுகிறது.
முள்ளை முள்ளால் எடுப்பது போல, விஷத்தை, விஷத்தால் முறிக்கும் தன்மையுள்ள ஒரு விஷச்செடியான ஊமத்தைச்செடி, வெற்றிலை போன்ற சற்றே பெரிய இலைகளுடன், இதன் காய்களின் வெளிப்பரப்பில், முட்கள் அதிகம்கொண்டு காணப்படும்.
ஊமத்தை என்பதற்கு உன்மத்தம், என வேறு பெயரும் உண்டு, உன்மத்தம் என்றால் ஆவேசமான மனநிலை, பைத்தியம் எனப் பொருள்படும். உன்மத்தம் கொண்ட மனிதர்களுக்கு நிவாரணம் தரவும், உடல் வேதனைகளில் வாடும் மனிதர்களுக்கு நல்லுதவி செய்யவும் ஊமத்தை செடி, ஒரு அற்புத கொடை என்பதில் ஐயமில்லை. ஆயினும், ஊமத்தை செடியின் விஷத்தன்மை காரணமாக, அதை கவனமுடன் கையாள வேண்டும்.
மற்ற பயன் தரும் மூலிகைகள் போலவே, ஊமத்தையின் வேர், இலை மலர்கள், விதை உள்ளிட்ட முழு செடியும் மனிதர்க்கு நன்மைகள் தரும் வகையில், தனிப்பட்ட சிறப்புகள் உடையவை. ஊமத்தையின் பொதுவான பயன்கள், மனிதர்களின் உடல் வியாதிகளை சரி செய்யக் கூடியதாகவும், உடல் விஷத்தை போக்குவதாகவும், மனிதர்களின் சித்த பிரமைக் கோளாறுகளை தீர்க்கக் கூடியதாகவும் உள்ளது.
நவீன மேலை மருத்துவ முறைகளில், பல்வேறு கண் வியாதிகளை சரிசெய்யும் கண் மருந்துகளின் மூலப் பொருளாக பயனாகிறது. மேலை மருத்துவ அறுவை சிகிச்சை முறைகளில், தாய்மார்களின் பிரசவ காலங்களில் அவர்களுக்கு அளிக்கப்படும் மயக்க மருந்துகளில், மூலப் பொருளாகவும் பயன் தருகிறது.
மனிதரின் பல்வேறு பட்ட வியாதிகளை தணிப்பதில், ஊமத்தை இலைகளுக்கு பெரும் பங்கு உண்டு, சொல்லப் போனால், உடலின் பல்வேறு வகை வியாதிகளுக்கும் ஒரே தீர்வாக ஊமத்தை இலை அமைகிறது என்பதே உண்மை என்பதை, பின்வரும் குறிப்புகளின் மூலம் அறிய முடியும்.
ஊமத்தை இலை பயன்கள் உடலில் வரும் கைகால் மூட்டு வலிகள், மூட்டு வீக்கம், உடல் கட்டிகள் மற்றும் வீக்கம் இவற்றை குணமாக்க, ஊமத்தை இலைகளை அடுப்பில் இட்டு, விளக்கெண்ணை அல்லது நல்லெண்ணையை சற்றே தடவி, வதக்கி, வலியால் அவதிப்படும் பாகங்களில் கட்டிவர, விரைவில் குணம் தெரியும். வலி அதிகமாக இருக்கும் சமயங்களில், இந்த முறையில் ஒத்தடம் கொடுத்து அதன் பின், கட்டி வரலாம். இந்த எண்ணையில் வாட்டிய ஊமத்தை இலைகளே, தாய்மார்களின் தாய்ப்பால் கட்டிக் கொண்டு வலிப்பதற்கும், உடலில் அடிபடுவதால் உண்டாகும் நெறி கட்டுதல் எனும் வலிக்கும் தீர்வாகும். ஊமத்தை இலைப் பொடியை சிறிது தேனில் கலந்து பருகிவர, மூச்சு விடுதலில் உள்ள சிரமங்கள் குறையும்.
அக்கி கட்டிகள் : குழந்தைகளுக்கு கோடைக் காலங்களில் உடலில் அக்கி எனும் கட்டிகள் தோன்றும், அவற்றை குணமாக்க, ஊமத்தை இலைகளை சிறிது வெண்ணை கலந்து அரைத்து, அந்தக் கட்டிகளின் மீது தடவி வர, அவை யாவும் விரைவில் சரியாகி, மறைந்து விடும்.
நாய்க்கடிக்கு : விஷ நாய்க் கடிகளுக்கும் தீர்வாகும் ஊமத்தை இலைகள். ஊமத்தை இலைகளை வெறுமனே அரைத்து, ஒரு சட்டியில் சிறிது நல்லெண்ணை இட்டு, அதில் வதக்கி நாய் கடித்த காயத்தில் கட்டி வர, காயங்கள் ஆறி விடும். ஊமத்தை இலைச் சாறு இரண்டு துளிகள் எடுத்து அதை, பனை வெல்லத்துடன் கலந்து தினமும் இரு வேளை, மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, நாய்க் கடி நஞ்சு நீங்கி விடும். இந்த மருந்து சாப்பிடும் காலங்களில், உப்பில்லாமல் பகலில் தயிர் சேர்த்தும் இரவில் பால் சேர்த்து மட்டும் சாப்பிட வேண்டும்.
தலையில் பேன் தொல்லை நீங்க.. ஊமத்தை இலைப் பொடியை நல்லெண்ணையில் இட்டு காய்ச்சி, குளிக்கு முன், தலையில் நன்கு அழுத்தி தேய்த்து சற்றுநேரம் ஊற வைத்து, அதன் பின் குளித்து வர, தலையில் இருந்து அரிப்பு, சொறியை கொடுத்து வந்த பேன் ஈறு மற்றும் பொடுகு தொல்லை தீரும்.
புழு வெட்டினால் உண்டான சொட்டைக்கு : தலையில் ஏற்பட்ட புழு வெட்டு அல்லது பூச்சிக் கடியால், அவ்விடங்களில் முடிகள் வளராமல், தலையில் ஆங்காங்கே முடியின்றி, சொட்டை போல காணப்படுவதை தடுக்க, ஊமத்தம் பிஞ்சை நம் உமிழ் நீரினைக் கலந்து அரைத்து, முடி கொட்டிய பாகங்களில் தினமும் தடவி வர, பாதிப்புகள் யாவும் அடியோடு நீங்கி, அவ்விடங்களில் முடிகள் நன்கு வளர, ஆரம்பிக்கும்.
மூல நோய்க்கு : ஊமத்தங்காயை அனலில் இட்டு வாட்டி, அதை அரைத்து, புண்கள் மற்றும் காயங்களில் தடவி வர, உடலில் நீண்ட நாட்களாக ஆறாமல் வேதனை அளித்து வரும் புண்களை, காயங்களை விரைவில் ஆற்றி விடும் வல்லமை படைத்தது. மூல வியாதி குணமடைய, ஊமத்தை விதைகளை பொடியாக்கி, நெய்யில் நன்கு கலந்து, மூலத்தின் நுனியில் தடவிவர, மூல வியாதிகள் குணமாகும்.
சிறு நீர்கடுப்பிற்கு : ஊமத்தை விதைகளை நல்லெண்ணையில் இட்டு வெயிலில் சில நாட்கள் வைத்திருந்து அதை வயிற்றில் தடவி வர, உடல் சூட்டினால் உண்டான வலி, சிறுநீர்த் தாரை எரிச்சல் போன்றவை குணமாகும். முகத்தில், உடலில் குடைச்சல் போல வலி ஏற்படும் சமயங்களில், அந்த இடங்களில் இந்த எண்ணையைத் தடவி வர, அவை யாவும், விரைவில் சரியாகி விடும்.
சரும வியாதிக்கு : ஊமத்தை விதையுடன் சாமந்திப் பூவை சேர்த்து அரைத்து, உடலில் ஒவ்வாமையால் ஏற்பட்ட தடிப்பு, சொறி சிரங்கு போன்ற சரும வியாதிகளின் மீது தடவி வர, அவை விரைவில் குணமாகி விடும்.
மன நல பாதிப்பிற்கு : ஊமத்தை இலை, காய்கள் மற்றும் மலர்களைப் போலவே, இதன் வேரும் மருந்தாகிறது. உடலில் காய்ச்சல், வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும் வியாதி பாதிப்புகளை அகற்றி, காய்ச்சல், வயிற்றுப் போக்கை சரி செய்கிறது. உடலில் சருமத்தில் தோன்றும் பாதிப்புகளை நீக்கி, சருமத்தை காக்கிறது. மனநிலை பாதிப்படைந்தோரை சரியாக்குகிறது.
விபத்து போல தோன்றிய அதிர்ச்சியினாலோ அல்லது வேறு ஏதேனும் காரணத்தாலோ தமது இயல்பான நிலையை மறந்து, நிகழ்கால வாழ்க்கையின் பாதிப்புகள் எதுவும் அறியாமல், கற்பனை உலகில் சஞ்சரித்து, ஒரு ஜடம் போல வாழும் எண்ணற்றோருக்கு ஈடு இணையற்ற மருத்துவ மாமணியாகத் திகழ்கிறது, இந்த ஊமத்தை.
சிறிது, ஊமத்தை மலர்களை இரவில், ஒரு அண்டா அல்லது குளிக்கும் தண்ணீர் நிரம்பிய பாத்திரத்தில் இட்டு வைத்து, காலையில் தலையில் இந்த மலர்களை நன்கு தலையில் தேய்த்து, குளிக்கச் செய்ய வேண்டும்.
இது போல, தொடர்ந்து ஒரு வாரம் குளித்து வரச் செய்ய, அவர்களின் மன நிலையைப் பாதித்த, சித்த பிரமை மற்றும் உன்மத்தம் எனும் பைத்திய நிலை நீங்கி, அவர்களும் இயல்பு வாழ்க்கைக்கு, சுலபமாகத் திரும்புவர்.
முன்னெச்சரிக்கை : ஊமத்தை விஷத்தால், அடிக்கடி மயக்கமடையும் நிலை ஏற்பட்டால், அந்த விஷம் உடலில் இருந்து வெளியேற, தாமரைத் தண்டுகளின் அடியில் கிடைக்கும் தாமரைக் கிழங்கை அரைத்து, பாலில் கலந்து தினமும் இரு வேளை வீதம் மூன்று அல்லது நான்கு நாட்கள் கொடுத்து வர, உடலில் பரவிய ஊமத்தை விஷங்கள் யாவும் முறிந்து, உடல் நலமாகும்.
இறுதியாக ஒன்று, இந்தச் செடியைப் பயன்படுத்தி, மருந்துகள் மூலம் உடல் நலனை சரி செய்து கொண்டாலும், ஊமத்தை முழுச் செடியும் மிக்க விஷத் தன்மை உடையதாகையால், அதன் பின் கைகளை நன்கு சுத்தமாக கழுவிய பின்னரே, சாப்பிடவோ அல்லது குழந்தைகளுடன் விளையாடவோ செய்ய வேண்டும்
இதில் அலட்சியம் காட்டினால், நமக்கு பல நாள் சிரமங்கள் ஏற்படலாம். எச்சரிக்கை தேவை. மேலும், ஊமத்தை மலர்கள் நம் மனநிலையை, அவற்றின் பால் வெகுவாக ஈர்க்கக் கூடியவை, எனவே, இந்த மலர்களைப் பயன்படுத்தி, நாம் மருந்துகளை உண்டாக்கும்போது மிக அதிக மன உறுதி தேவை, இல்லை எனில் எதிர்பாராத விளைவுகள் ஏற்படலாம்.
இந்தத் தகவல்கள் யாவும், வாசகர்களை பயமுறுத்த சொல்லப்படவில்லை, மாறாக, இந்த மூலிகைச் செடியில் அரிய நற் பலன்கள் நமக்கு ஏராளம் கிடைத்தாலும், ஊமத்தை செடியின் விஷத் தன்மை காரணமாக, அவை யாவும் மிகுந்த கவனத்துடன் கையாளப்பட வேண்டியவை என்ற அடிப்படையில், ஒரு முன்னெச்சரிக்கையாக, இங்கே மீண்டும் ஒரு முறை பகிரப் படுகிறது.