இந்தியாவில் கிடைக்கும் பாரம்பரிய மூலிகைப் பொருட்கள் அழகை அதிகரித்து இளமையை தக்கவைக்கும் என்று சித்தர்களும், அறிவியல் அறிஞர்களும் நிரூபித்துள்ளனர். நம் நாட்டில் கிடைக்கும், வேம்பும் துளசியும், மஞ்சளும்தான் இன்றைக்கும் பெரும்பாலான அழகு சாதனப் பொருட்களில் இடம் பெறுகின்றன. அவற்றை பயன்படுத்தி இயற்கையான முறையில் அழகுபடுத்தலாம் என்பதை தெரிந்துகொள்ளலாம்.
இயற்கையின் கொடை வேம்பு
இந்தியா முழுவதும் வேப்பமரங்கள் நிறைந்து காணப்படுகின்றன. எண்ணற்ற நோய் எதிர்ப்பு சக்தி இதில் உள்ளதால் இயற்கை மருத்துவர் என்றே அழைப்படுகிறது. அழகு சாதன கிரீம்களிலும், பருவை போக்கும் கிரீம்களிலும் பயன்படுத்தப்படுகிறது. வேப்ப எண்ணெய் முகத்தின் ஈரப்பதத்தை தக்கவைக்கும் மிகச்சிறந்த பொருளாக திகழ்கிறது.
தெய்வீக மூலிகை துளசி பெரும்பாலான வீடுகளின் கொல்லைப்புறங்களில் துளசிச் செடியை வைத்திருப்பார்கள். இது இயற்கையான அழகு சாதனப் பொருளாகவும் பயன்படுகிறது. சில துளசி இலைகளை பறித்து அதனுடன் சில துளிகள் பால் விட்டு அரைத்து முகத்தில் பரு உள்ள இடங்களில் அப்ளை செய்தால் பரு இருந்த இடம் காணாமல் போய்விடும் வடுக்களும் மறைந்து விடும்.
மஞ்சளும், சந்தனமும் மஞ்சள் இந்திய சமையலில் மட்டும் பயன்படுத்தப்படுவதில்லை. அது மிகச்சிறந்த அழகு சாதனப் பொருளாகவும் பயன்படுகிறது. மணநாளில் பெண்ணின் கண்ணக் கதுப்பிலும், கைகளிலும் தோளிலும் மஞ்சளை பூசி குளிக்கவைப்பார்கள். இதனால் பெண்ணின் முகம் மெருகேறும்.
அதேபோல் கண்ணிற்கு கீழே ஏற்படும் கருவளையத்தையும், சுருக்கத்தையும் மஞ்சள் போக்கிவிடும் என்கின்றனர் நிபுணர்கள். ஒரு சிட்டிகை மஞ்சளுடன் சில துளிகள் பால் சேர்த்து கண்ணின் கருவளையம் உள்ள பகுதிகளில் பூசினால் கருவளையத்திற்கு பை சொல்லிவிடலாம். முகத்தில் சந்தனம் பூசுவதன் மூலம் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இது அலர்ஜி, தோல் நோய்களைப் போக்கும் அருமருந்தாக செயல்படுகிறது.
குங்குமப்பூவும் தேனும் குங்குமப்பூ சிறந்த அழகு சாதனப் பொருளாகத் திகழ்கிறது. சருமத்தின் நிறத்தையே மாற்றும் சர்வ வல்லமை படைத்தது. சருமத்தில் பாக்டீரியா நோய் தாக்குதல் இருந்தாலும் இதனை போக்கிவிடும். தேன் சருமத்தின் அழகை தக்கவைக்கும். இது இனிப்பான உணவுப் பொருளாக இருந்தாலும் பேஸ்பேக் போடுவதில் பயன்படுகிறது. பாலுடன் தேன் கலந்து பேக் போடுவதன் மூலம் சருமம் பொலிவுறும். இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ஸ் சரும அழகை பாதுகாக்கிறது. அழகு சாதனப் பொருட்களில் தேன் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும்.
சிகைக்காய், நெல்லிக்காய் கூந்தல் அழகை பராமரிப்பதில் சிகைக்காய்க்கு முக்கிய பங்குண்டு. இதில் உள்ள இயற்கை பொருட்கள் கூந்தலின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது. நெல்லிக்காய் இயற்கை மருந்துப் பொருளாகப் பயன்படுகிறது. இதில் உள்ள வைட்டமின் சி கூந்தலின் வேர்களை வலுவாக்குகிறது. நெல்லிக்காய், சிகைக்காய், வேப்பிலை கலந்த பொடி கூந்தல் வளர்ச்சிக்கும், அழகிற்கும் சிறந்த பொருளாக உள்ளது.
முல்தானி மெட்டி பூமியில் கிடைக்கும் இயற்கை கிளன்சர் முல்தானி மெட்டி. சிறந்த ஸ்கிரப்பராக பயன்படுகிறது. சருமத்தை பாதுகாக்க தக்காளிசாறுடன் முல்தானி மெட்டியை கலந்து பேஸ்பேக் ஆக போடலாம். இந்திய உணவுப் பொருளில் தயிர் தினசரி பயன்படுகிறது. இது இளமையை தக்கவைக்கும் இயற்கை அழகு சாதனப் பொருளாகும். கடலைமாவு இந்திய சமையலறையில் கிடைக்கும் முக்கிய பொருள். இது பாரம்பரியமாக குளியல் பொருளாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இன்றைக்கும் பெரும்பாலானோர் சரும பாதுகாப்பிற்காக கடலைமாவினை பயன்படுத்துகின்றனர்.