24.8 C
Chennai
Monday, Dec 23, 2024
maxresdefault 1
ஃபேஷன்

மெஹந்தி என்ற பெயரில் வடமொழி சொல்லில் அழைக்கப்படும் மருதாணி

”அழகியல் தொடர்பான தேடல் எப்போதும் நமக்குள்ளே இருக்க வேண்டும். அப்போதுதான் அதுதொடர்பான அத்தனை நுணுக்கங்களையும் உள்வாங்க முடியும். அப்படிப்பட்ட உந்துதலுடன் இந்தத் தொழிலில் எனக்கு முன்னோடியாக செயல்பட்டவர்களை எல்லாம் மிகவும் நுட்பமாக கவனித்து அவர்களின் திறனை உள்வாங்கிக் கொண்டால்தான் மெஹந்தி தொழிலில் நிலைக்க முடியும். இந்தக் கலைதான் என்னை இப்போது வாழவைக்கிறது” என பேசத் தொடங்கினார் அழகுக்கலை நிபுணர் யாஸ்மின்.

மெஹந்தி என்ற பெயரில் வடமொழி சொல்லில் அழைக்கப்படும் மருதாணி, மூலிகையில் மிகவும் முக்கியமானது. நம் கைகளில் மெஹந்தியினை இட்டுக் கொண்டால் மன அழுத்தம் கண்டிப்பாகக் குறையும். தலையில் ஏற்படும் பொடுகுத் தொல்லை, முடிகொட்டுதல், வெள்ளை முடி வளர்ச்சியினை சரிசெய்தல், உடல் சூட்டைக் குறைக்க, பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு பிரச்சனை போன்றவைகளுக்கு ஒரு சிறந்த மூலிகை மருந்தாகவும் திகழ்கிறது.

ஆழமான தீப்புண் காயங்களுக்கு மருதாணி பயன்படுத்தினால் மிக விரைவில் புண் ஆறும். முகத்தில் பரு, கட்டி இருந்தால் ரோஸ் வாட்டர் கலந்து போட்டால் முகத்திற்கு குளிர்ச்சி தருவதுடன், கண்ணிற்கும் குளிர்ச்சியினை தரும். ஆதிகால மனிதர்கள் தனது உடலில் பல குறியீடுகளை வரைந்து அதன் மூலம் ஒவ்வொரு குறியீட்டிற்கும் ஓர் அர்த்தம் கற்பித்து, உடல்வழி மருதாணி மூலிகை கொண்டு வெளிப்படுத்தினான். இந்தவகையில், ஆண்கள்தான் முதலில் மெஹந்தியினை பயன்படுத்தி வந்தார்கள்.

அதன்பிறகுதான் அழகியல் சார்ந்த ஒன்றாக மாறி பெண்களை தொற்றிக்கொண்டது. இப்போது இளைஞர்கள் போட்டுக்கொள்ளும் டாட்டூஸ் இதிலிருந்து தோன்றியதுதான். மிகவும் நைசாக அரைக்கப்பட்ட மருதாணி பவுடருடன், எலுமிச்சை அல்லது புளித் தண்ணீர், தேநீர் டிக்கா ஷன் இவற்றை கலந்து நன்றாக கூழ் வடிவத்தில் குழைத்து கிண்ணத்தில் ஒட்டாத பக்குவத்தில் தயார் செய்துகொள்ள வேண்டும். மெஹந்தியினை தயார் செய்த பிறகு அதை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கக் கூடாது.

மெஹந்தியைப் போடுவதற்கு முன்பு கைகளில் நீலகிரி தைலத்தை தடவிக்கொள்ள வேண்டும். அதன்பிறகு விருப்பத்திற்கு ஏற்ப வேண்டிய டிசைன்களில் நமது கற்பனைக்கேற்ற வடிவங்களை, இரண்டு கை மற்றும் கால்களில் வரையலாம். இப்போது மணப் பெண்கள் கழுத்தினை சுற்றியும் மெஹந்தி போட்டுக்கொள்ளத் துவங்கியுள்ளனர். மெஹந்தி போடும்போதே ஷுகர் சிரப் புடன் எலுமிச்சைச் சாறு கலந்து அதை மெஹந்தி டிசைன் மீது போட்டுக்கொண்டே வரவேண்டும்.

அப்போதுதான் மெஹந்தி வடிவம் நம் கையினை விட்டு உதிராமல் அப்படியே பிடித்துக்கொள்ளும். மேலும் மெஹந்தியின் நிறம் கையில் கூடுதல் சிவப்பு நிறத்தைக் கூட்டித் தரும். மெஹந்தி போட்ட பிறகு 4 முதல் 6 மணி நேரம் வரை அதை எடுக்காமல் அப்படியே வைத்திருக்க வேண்டும்.

கையிலிருந்து நீக்கிய பிறகு லவங்கத்தை வாணலியில் இட்டு புகை வர வைத்து அந்தப் புகையின் மீது நம் கைகளை காட்டினால் இன்னும் கூடுதலாக அடர்சிவப்பு நிற வண்ணம் கொடுக்கும். மேலும் மருதாணியினை நீக்கிய பிறகு ஏதாவது ஒரு எண்ணெயை கைகளில் தடவிக்கொள்ள வேண்டும். அன்றைய நாள் முழுவதும் கைகளை தண்ணீரில் நனைக்காமல் வைத்துக்கொண்டால் மேலும் கூடுதலாக சில நாட்களுக்கு அந்த வண்ணம் நம் கைகளை விட்டு அகலாமல் தங்கியிருக்கும்.

மெஹந்தியில் நார்மல் மெஹந்தி, அரபிக் மெஹந்தி, ராஜஸ்தான் மெஹந்தி, பாகிஸ்தானி மெஹந்தி, மணப்பெண் மெஹந்தி, ஷர்தோஷி மெஹந்தி என பல வகைகள் உள்ளன. அரபிக் மெஹந்தியில் அடர்த்தியான அவுட் லைன் இருக்கும். சிங்கிள் லைனாக அவர்களின் மெஹந்தி வேலைப்பாடு இருக்கும். ஒரு விரலில் மட்டும் ஒன் லைனாக வரும்.

ராஜஸ்தானி மெஹந்தியில் நுணுக்கமான வேலைப்பாடுகள் நிறைய இருக்கும். பெரும்பாலும், அவர்களின் பழக்க வழக்கங்களை மெஹந்தி வேலைப்பாட்டிலே வடிவங்களாகக் கொண்டு வந்துவிடுவார்கள். ராஜஸ்தானி பெண்கள் வளையலை தோள்பட்டையிலிருந்து போடுவதால் மெஹந்தி டிசைனையும் தோள்பட்டையிலிருந்தே கொண்டுவந்து விடுவார்கள்.

பாகிஸ்தானி மெஹந்தி என்பது அரபிக் மற்றும் ராஜஸ்தான் மெஹந்தியின் கலவையாக இருக்கும். பிரைடல் ஷர்தோஷி என்பது திருமண நாள் அன்று மட்டும் ஐந்து மணி நேரம் வரை இருப்பது மாதிரி மணமகளின் உடைக்கு ஏற்ப வண்ணத்தில் அதே கலரில் ஜிகு ஜிகு என்ற கிளிட்டரில் அவுட் லைன் கொடுக்கப்படும். அதில் மிரர் ஒர்க் எல்லாம் இப்போது வந்துவிட்டது.

மெஹந்தியில் பிளாக் மெஹந்தியும் உண்டு. அரேபியன்ஸ் இந்த வகை அடர்த்தியான டார்க் வண்ண மெஹந்தியினையே பயன்படுத்துவார்கள். இது விரைவில் அழியாது. ஆனால் நம் இந்தியர்களின் ஸ்கின் டோனிற்கு சாதாரண மெஹந்தியே போதுமானது. கோன் பிடித்து மெஹந்தி டிசைன் வரைவது அவ்வளவு சுலபமில்லை. நிறைய பயிற்சி வேண்டும். பென்சிலை பிடித்து டிராயிங் வரைவது மாதிரி.

அவரவர் கிரியேட்டிவிட்டியினைப் பொருத்தது. ஒரு மணப்பெண்ணிற்கு இரண்டு கைகள் மற்றும் இரண்டு கால்களில் மெஹந்தி போட குறைந்தது 5 மணி நேரம் எடுக்கும். தொடர்ந்து 5 மணி நேரம் அமர்ந்து வரைவது இயலாத காரியம். இடையிடையே சற்று ஓய்வு என டிசைனைப் பொருத்து 7 மணி நேரங்களைக் கூட கடக்கலாம். ஒரு மணப் பெண்ணிற்கான முழு மெஹந்தி டிசைனுக்கும் ஐந்தாயிரம் ரூபாய் வரை கட்டணம் நிர்ணயம் செய்கிறோம்.

மெஹந்தி போட்டுக்கொள்வது என்பது இப்போதெல்லாம் இளம் பெண்களிடையே மிகப் பெரிய டிரண்டாக மாறி விட்டது. திருமணம் என்றில்லை, குடும்ப நிகழ்ச்சி, பெண் பருவம் அடைதல், வளைகாப்பு, பள்ளி, கல்லூரி விழா என எல்லாவற்றிற்கும் பெண்கள் மெஹந்தியிட்டுக் கொள்கிறார்கள்.

வட இந்திய பெண்கள் கணவனை இழந்தபின்னரான 16 நாட்களும் அலங்கரிக்கப்பட்டு, கைகளில் மெஹந்தி இட்டு, வளையல் போட்டுக்கொள்ளும் கலாசாரம் உள்ளது. மெஹந்தி வரைய வேண்டும் என ஆசைப்படுபவர்கள், முதலில் பென்சிலில் சிறுசிறு அடிப்படை டிசைன்களை வரைந்து அதன் மேல் மெஹந்தி கோனை வைத்து கொஞ்சம் கொஞ்சமாக வரையப் பழக வேண்டும். ‘சித்திரமும் கை பழக்கம்’ ” என்கிறார் அழகுக்கு அழகு சேர்க்கும் அழகுக்கலை நிபுணர்.

Related posts

எப்போதும் மவுசு குறையாத காட்டன் சர்ட்டுகள்

nathan

விருப்பம் போல் அணிய ஏற்ற விதவிதமான யுவதியர் பேண்ட்கள்

nathan

இந்த தீபாவளிக்கு இந்த டிரஸ் தான் பெஷன்…..

sangika

புடவைக்கான சிறந்த ஹேர் ஸ்டைல் எது?

nathan

பெண்களுக்கு அழகு சேர்க்கும் தாவணி

nathan

நளினமான விரல்களுக்கேற்ப ஜொலிக்கும் வைர மோதிரங்கள்

nathan

வசீகரிக்கும் வைரம்!

nathan

பட்டுச்சேலை இவற்றின் காரணமாகவே விரைவில் பழுதடைந்து விடுகின்றன!…

sangika

இந்தியாவின் ஃபேஷன் ராணி!

nathan