தினமும் காலையில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறேன் என்று பழச்சாறுகளை பருகுபவரா பழச்சாறுகள் உடல் எடையை அதிகரிக்காது என்று நினைப்பவரா காலையில் காபி, டீக்கு பதிலாக, பழச்சாறுகளை பருகுபவர்கள் தான் அதிகப்படியான கலோரிகளை உட்கொள்கின்றனர் என்று தெரியவந்துள்ளது.
நீங்கள் உங்கள் உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள நினைத்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள பானங்களை காலையில் பருகுவதைத் தவிர்த்திடுங்கள்.
லஸ்ஸி மிகவும் பிரபலமான ஓர் பானம். இந்த பானமானது தயிர், சர்க்கரை, தண்ணீர் சேர்த்து செய்யப்படுவது. இந்த பானத்தில் கொழுப்புக்களும், சர்க்கரையும் உடல் எடையை மிகவும் வேகமாக அதிகரிக்கும் அளவில் நிறைந்துள்ளது. அதிலும் ஒரு டம்ளர் லஸ்ஸியில் 159 கலோரிகள் இருக்கும்.
தற்போது பாதாம் பால் அல்லது சாக்லேட் பாலைப் பருகுவோரின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. ஆனால் கடைகளில் விற்கப்படும் பாதாம் பவுடர் மற்றும் சாக்லேட் பவுடரை பாலில் சேர்த்து கலந்து பருகினால், அதில் சேர்க்கப்பட்டுள்ள செயற்கை சுவையூட்டிகளால் உடல் பருமனைத் தான் சந்திக்கக்கூடும். ஒரு டம்ளர் சாக்லேட் அல்லது பாதாம் பாலில் 158 கலோரிகள் இருக்கும்.
நீங்கள் உடல் எடை அதிகரிக்க வேண்டாம் என நினைத்தால், வாழைப்பழத்தையும், பாலையும் ஒன்றாகப் பருகாதீர்கள். ஏனெனில் ஒரு வாழைப்பழத்தில் மட்டும் 108 கலோரிகள் உள்ளது. அப்படியெனில் ஒரு டம்ளர் வாழைப்பழ மில்க் ஷேக்கில் எவ்வளவு கலோரிகள் இருக்கும் என்று சற்று யோசித்துப் பாருங்கள்.
பழங்களை எப்போதும் அப்படியே சாப்பிட்டால் தான் அதன் முழுமையான பலனைப் பெற முடியும். அதனை ஜூஸ் வடிவில் தயாரித்துப் பருகும் போது, அதில் சுவைக்காக சர்க்கரையை சேர்க்க நேரிடும். இதனால் அந்த பழச்சாறு உடலுக்கு நன்மையைக் கொடுப்பதற்கு பதிலாக, தீமையைத் தான் விளைவிக்கும். அதிலும் ஒரு டம்ளர் ஆரஞ்சு ஜூஸில் 220-க்கும் அதிகமான அளவில் கலோரிகள் இருக்கும். எனவே எப்போது பழங்களை சாறு வடிவில் அதிகாலையில் குடிப்பதைத் தவிர்த்திடுங்கள்.

Related posts
Click to comment