40 வயது என்பது பெண்களுக்கு கொஞ்சம் சிக்கலான பருவம்தான். 40 என்கிற அந்த எண் ஏதோ ஒரு விதத்தில் ஆண்களையும் பெண்களையும் கலவரத்துக்கு உள்ளாக்குகிறது. இனி வாழ்நாள் கொஞ்சம்தான் என்கிற எண்ணமும், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் என்று ஏதாவது வந்துவிடுமோ என்கிற கவலையும், பெண்களாக இருந்தாலும் மெனோபாஸ் வந்துவிடுமோ என்கிற சிந்தனையும் பிடித்து ஆட்டும் காலம் இது.40 வயதைத் தொடும்போது எந்தெந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என விளக்குகிறார் மனநல மருத்துவர் மீனாட்சி, ”திருமணத்துக்கு பின்னர் பெண்களுக்கு குடும்பப் பொறுப்புகள் கூடுகின்றன. வேலையிடத்தில் இன்றைய பெண்கள் 10 மணி நேரத்துக்கும் மேல் பணியாற்றுகின்றனர். வீட்டில் நேரம் செலவழிப்பது குறைகிறது. இதுவும் அவர்களுக்குள் மன அழுத்தத்தை உருவாக்குகிறது. மிச்சம் உள்ள ேநரத்தையும் ஸ்மார்ட் ஃபோனும், தொலைக்காட்சியும் ஆக்கிரமிக்கிறது.
ஐ.டி. நிறுவனங்களில் தொடர்ந்து வேலை, இரவில் வேலை என பெண்கள் பல்வேறு ஹார்மோன் மாற்றங்களுக்கு ஆளாகின்றனர். 35 வயதில் ஐ.டி. நிறுவனங்கள் வேலையாட்களை வெளியில் அனுப்புவதால் குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளிப் போடுகின்றனர். இதனால் திருமண உறவிலும் பெண்கள் சிக்கல்களை சந்திக்கின்றனர். அதிக வேலை அழுத்தத்தால் அடிப்படைத் திறன்களும் மந்தம் அடைகின்றன.35 வயது முதல் 40 வயதை எட்டும்போது இயல்பாக ஈஸ்ட்ரோஜென் அளவு குறையும். இதனால் சோர்வு உள்ளிட்ட உடல் நலக் குறைபாடுகளும் எட்டிப் பார்க்கும். இந்தக் காலகட்டத்தில் பெண்கள் தனக்கான அடையாளத்தை உருவாக்க தீவிரமாக உழைக்கும்போது தனது நலனிலும் அக்கறை செலுத்த வேண்டும். இயல்பில் சிறிய சந்ேதாஷங்களும், உறவுகளின் அன்பும் உற்சாகப்படுத்தும்.
அப்படி அவை கிடைக்காவிட்டாலும் அதைப்பற்றி பெரிதாகக் கவலைப்படாமல் தனது பாசிட்டிவ் எனர்ஜியை அதிகரிக்க வேண்டும். ஈஸ்ட்ரோஜென் குறைபாட்டின் காரணமாக இந்தக் காலகட்டத்தில் பல்வேறு மனக்குழப்பங்கள் வந்து படுத்தியெடுக்கும். மன உளைச்சலை அதிகரிக்கும். எளிய மூச்சுப் பயிற்சி, அதிகாலை வாக்கிங் மனதையும், உடலையும் ரிலாக்ஸ் செய்யும். தெளிவான மனநிலையை பெண்களுக்குத் தரும்.அதன் பின் எந்தப் பிரச்னை வந்தாலும் குழப்பம் இன்றி தெளிவாக முடிவெடுக்க முடியும். மனம் லேசாகும். நிறைய தண்ணீர் குடிப்பது, சரிவிகித சத்துணவு, தனது தோற்றத்தை பிடித்த மாதிரி பராமரிப்பது, தனக்கு பிடித்தமாதிரி இருப்பது, பாசிட்டிவாக சிந்திப்பது என பெண் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும். வேலைக்கே செல்லாமல் குடும்பத்தை மட்டுமே பராமரித்துக் கொண்டிருக்கும் பெண்ணுக்கும் 40 வயதை எட்டும்போது எதையாவது செய்திருக்கலாமோ என்ற தாழ்வு மனப்பான்மை எட்டிப் பார்க்கும். அப்போது தனக்கு தெரிந்த விஷயத்தை சிறிய அளவில் துவங்கினால் கூட தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
இன்றைய அடித்தட்டு மற்றும் மேல்தட்டு பெண்கள் இந்தக் காலகட்டத்தில் ரிலாக்ஸ் செய்து கொள்ள மது போதை பழக்கங்களுக்கு அடிமையாகின்றனர். நிம்மதியற்ற மனநிலையால் தூக்கத்தை இழக்கும் நடுத்தர குடும்பங்களை சேர்ந்த பெண்கள் ெமல்ல தூக்க மாத்திரைகளுக்கு அடிமையாகி வருகின்றனர். இது திட்டமிட்டு நடக்காவிட்டாலும் இதுவே நாளடைவில் தேவையான ஒன்றாக மாறுகிறது. இது பெண்களது உடல் நிலையில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். மனநலப் பயிற்சிகள் மூலம் தூக்கமின்மை பிரச்னைக்கு தீர்வு காணலாம்.வேலைச்சுமை தாளாமல், மனதையும் ரிலாக்ஸ் செய்து கொள்ளாமல் தற்கொலை வரை சில பெண்கள் செல்லுகின்றனர். எவ்வளவு சம்பாதித்துக் கொடுத்தும், எவ்வளவு உழைத்தும் குடும்பம் நம்மை மதிக்கவில்லையே என்ற அழுத்தம் வாழும் நாட்களையே கசப்பாக மாற்றும். அப்படியான மதிப்போ, மரியாதையோ 90 சதவீதம் பெண்களுக்கு கிடைப்பதில்லை என்பது ஒப்புக் கொள்ள வேண்டிய உண்மை. தன்னையே பெண் மறுபரிசீலனைக்கு உட்படுத்தலாம். சவால்களைத் தாண்டி சாதிப்பதற்கான வாய்ப்புகளை, பாசிட்டிவான விஷயங்களைப் பட்டியலிட்டு தனக்கான பயணத்தை நம்பிக்கையோடு நாற்பதிலும் துவங்கலாம், சாதிக்கலாம்” என்கிறார் மீனாட்சி.