பெண்களுக்கு மாரடைப்பும் இதயக் கோளாறுகளும் ஏற்படும் வாய்ப்புகள் குறைவு என்பது அந்தக் காலம். இளவயது மெனோபாஸ், அதீத மன அழுத்தம் போன்றவற்றின் காரணமாக பெண்களுக்கும் அதிலும் இள வயதிலேயே மாரடைப்பும் இதயக் கோளாறுகளும் ஏற்படுகின்றன.மாரடைப்பு என்பது நேரடியாக நெஞ்சில் வலியாகவோ, மூச்சு விடுவதில் சிரமமாகவோதான் அறிகுறியைக் காட்டும் என்றில்லை. மறைமுகமான அறிகுறிகளையும் காட்டலாம். நீங்கள்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்கிறார் மருத்துவர் நிவேதிதா. அப்படிச் சில மறைமுக அறிகுறிகளையும் பட்டியலிடுகிறார்.வீடு, வேலை என பெரும்பாலான பெண்கள் இரட்டைச் சுமை சுமக்கிறார்கள். சக்திக்கு மீறி உழைக்கிறார்கள். வீட்டிலுள்ள எல்லோர் ஆரோக்கியத்திலும் அக்கறை காட்டுகிறார்கள். வேலையிடத்தில் நல்ல பெயரை வாங்க உழைக்கிறார்கள். உடலும் மனமும் சேர்ந்து களைத்துப் போவதில் அடிக்கடி பலவீனமாக உணர்கிறார்கள்.
களைப்பு என்பது அவர்களது அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க முடியாத விஷயம் என நினைக்கிறார்கள். ஆனால், இந்தக் காரணம் தவிர்த்து வேறு சில காரணங்களாலும் அப்படி அதீத களைப்பு தோன்றலாம்.
1. சின்னச்சின்ன வேலைகளால்கூட களைப்படைகிறீர்களா? உதாரணத்துக்கு காய்கறி நறுக்குவது, துணிகளை மடிப்பது போன்ற அதிக உடலுழைப்பு தேவைப்படாத வேலைகளால்கூட களைப்படைகிறீர்களா?எப்போதும் செய்கிற உடற்பயிற்சிகள்தான்… ஆனாலும் திடீரென ஒருநாள் அது உங்களுக்கு ஒருவித அசவுகரியத்தைக் கொடுக்கிறதா?திடீரென நெஞ்சு பாரமாக அழுத்துவது போல உணர்கிறீர்களா? அதீத களைப்பு மட்டுமின்றி, தூக்கமின்மையாலும் சேர்ந்து அவதிப்படுகிறீர்களா?
2. வயதான காரணத்தினாலும் உடற்பயிற்சியோ உடலுழைப்போ இல்லாத காரணத்தினாலும் பெண்களுக்கு வியர்வை அதிகம் வெளிப்படலாம். மாதவிடாய் நின்றுபோகும் மெனோபாஸ் காலத்திலும் இப்படி வியர்க்கலாம்.55
ஆனால், இப்படி எந்தக் காரணங்களுமே இல்லாமல் திடீரென வியர்ப்பது. கடினமான வேலைகளைச் செய்த பிறகு மூச்சு வாங்குவது தாண்டி, நீண்ட நேரத்துக்கு அது தொடர்வது. படுத்துக்கொண்டிருக்கும்போது மூச்சு முட்டுகிற மாதிரி உணர்வது. திடீரென அதிகம் வியர்ப்பது, கூடவே மூச்சுத் திணறல், நெஞ்சு பாரமாக அழுத்துவது போன்ற உணர்வுகளும் சேர்ந்து கொள்வது.
3. உடலில் ஏற்படுகிற அசாதாரண வலியையும் பெரும்பாலான பெண்கள் உழைப்பு மற்றும் ஓய்வின்மையின் விளைவுகளாவே நினைத்து அலட்சியப்படுத்துவார்கள். அதைத் தாண்டி, ஒரு கையிலோ, இரண்டு கைகளிலுமோ திடீரென காரணமே இல்லாமல் ஒருவித வலியை உணர்வது. குறிப்பாக தோள்பட்டையின் அருகில் உணர்கிற வலி.
அடி மற்றும் மேல் முதுகுப் பகுதியில் வலி ஏற்பட்டு, அது கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி நெஞ்சுப் பகுதிக்குப் பரவுவது. களைப்பு அல்லது அதிகம் வேலை பார்த்ததன் விளைவாக இல்லாமல் திடீரெனக் கடுமையாக தாக்கும் வலி. குறிப்பாக இரவில் பாதித்தூக்கத்தில் ஏற்படுகிற இப்படிப்பட்ட வலி. தாடைப் பகுதியில் உணர்கிற வலி. அதன் பின்னணியில் வாய் மற்றும் பல் பிரச்னைகள் எதுவும் இருக்கத் தேவையில்லை.மேலே குறிப்பிட்ட இந்த மூன்று முக்கிய அறிகுறிகளையும் அடிக்கடி உணர்கிற பெண்கள், உடனடியாக இதயப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது முக்கியம்.
உங்களுடைய உடலில் ஏற்படுகிற அசவுகரியங்களையும் திடீர் மாறுதல்களையும் உங்களால் மட்டுமே பிரித்துப் பார்த்து உணர முடியும். அவை பிரச்னைக்குரியதாக இருக்க வாய்ப்பில்லை என நீங்கள் அலட்சியம் செய்யலாம். ஆனால், அதை முடிவு செய்ய வேண்டியவர் மருத்துவர். எனவே, இந்த மறைமுக அறிகுறிகள் உங்களுக்கு ஏதோ ஆபத்து வரப் போவதை முன்கூட்டியே உணர்த்துகின்றன என்பதைப் புரிந்துகொண்டு கவனமாக இருங்கள்!