பெண்கள் வேலை நிமித்தமாக வெளிநாட்டிற்கு செல்வது அதிகரித்து வருகிறது. வெளிநாடு செல்லும்போது என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது? என்று பார்க்கலாம்.
பெண்களே வெளிநாடு செல்லும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை
பெண்கள் தற்போது வேலை நிமித்தமாக வெளிநாட்டிற்கு செல்வது அதிகரித்து வருகிறது. விமான நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு குறைக்கும் பயணக் கட்டணங்களும் மக்களின் வெளிநாட்டுப் பயண ஆசையைத் தூண்டுகின்றன. சரி, வெளிநாடு செல்லும்போது என்னவெல்லாம் செய்ய வேண்டும், என்னவெல்லாம் செய்யக்கூடாது?
இதோ… செய்யவேண்டியவை :
* வெளிநாடு செல்லும்போது நீங்கள் கொண்டு செல்லும் உடமைகள், ஆவணங்களுக்கு உரிய காப்பீட்டுப் பாதுகாப்புப் பெறுவது நல்லது.
* பாஸ்போர்ட்டில் உங்கள் புகைப்படம், முகவரி உள்ள பக்கங்களை ‘ஜெராக்ஸ்’ எடுத்துக்கொள்ளுங்கள். உங்களின் ‘விசா’வுக்கும் இது பொருந்தும். வெளிநாட்டில் உங்கள் பாஸ்போர்ட் தொலைந்து போக நேர்ந்தால், அங்குள்ள இந்திய தூதரகத்தை அணுகி ‘எமர்ஜென்சி பாஸ்போர்ட்’ பெற இது உதவும்.
* அவசியமான பொருட்களை தவறாமல் எடுத்துச் செல்லுங்கள். உதாரணத்துக்கு, அவசர உதவி மருந்துப் பொருட்கள், சாதனங்கள் அடங்கிய ‘கிட்’. மருந்துகள், பயண ஆவணங்கள், விலைமதிப்புமிக்க பொருட்கள், பயணத்தின்போது தேவைப்படக் கூடிய, குழந்தைக்கான உணவு போன்றவற்றை ‘ஹேண்ட் லக்கேஜில்’ எடுத்துக்கொள்ளுங்கள்.
* நீங்கள் வெளிநாட்டில் ஓட்டலில் தங்கப் போகிறீர்கள் என்றால், டவல், ஹேர் டிரையர் போன்றவற்றை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை.
* கைவசம் உள்ள பணத்தையெல்லாம் ஒரே இடத்தில் வைக்காமல், பல்வேறு இடங்களில் பிரித்து வையுங்கள்.
செய்யக்கூடாதவை :
* வெளிநாட்டுக்குச் செல்லும்போது அதிகமான பணத்தை எடுத்துச் செல்ல வேண்டாம். ‘பாரக்ஸ் கார்டு’ போன்றவை எல்லா இடங்களிலும் ஏற்றுக்கொள்ளப் படும், செலவு பிரச்சினையைத் தீர்க்கும்.
* வெளிநாடுகளில் சில வங்கிகள் மட்டுமே ‘டிராவலர்ஸ் செக்’குகளை ஏற்கின்றன என்பதால் அவற்றால் பெரிதாகப் பயனில்லை. தவிர, அவை தொலைந்தாலோ அல்லது திருடப்பட்டாலோ அவதிதான்.
* வெளிநாட்டுப் பயணத்தில் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் நுணுக்கமாகத் திட்டமிட வேண்டாம். ‘சும்மா’ கொஞ்ச நேரத்தை விட்டுவையுங்கள். எதிர்பாராத சுவாரசிய நிகழ்வுகள், அனுபவங்களை எப்போது எதிர்கொள்வோம், அவற்றுக்கு எவ்வளவு நேரத்தை ஒதுக்க வேண்டியிருக்கும் என்று யாருக்குத் தெரியும்?
* சரியாக விவரம் தெரியாமல் ‘இன்டர்நேஷனல் ரோமிங்’கை ஆக்டிவேட் செய்யாதீர்கள். ஒரு பெரிய செல்போன் பில்லுடன் வெளிநாட்டில் இருந்து திரும்புவதைப் போல மோசம் எதுவுமில்லை. உங்கள் செல்போன் சேவை நிறுவனத்துடன் தொடர்புகொண்டு, வெளிநாடுகளுக்கு என பிரத்தியேகத் திட்டம் இருக்கிறதா என்று விசாரியுங்கள் அல்லது இலவசமாக வழங்கப்படும் ‘வை-பை’ வசதியைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
* அதிகமான சுமையை சுமந்துசெல்லாதீர்கள். அது உங்கள் பயணத்தை கஷ்டமாக்கும். தவிர, நீங்கள் வெளிநாடுகளில் பொருட்கள் வாங்கக்கூடும் என்பதால் திரும்புகையில் சுமை அதிகரிக்கும் என்பதை ஞாபகத்தில் வையுங்கள்.
* விலை உயர்ந்த நகைகளை அணிந்துசெல்வதையோ, எடுத்துச்செல்வதையோ தவிர்க்க வேண்டும். அவை தொலைந்துபோனாலோ, திருட்டுப் போனாலோ பிரச்சினைதான்.