மதுரை;’அதிக கவலைப்படும் மற்றும் 40 வயதை கடந்த பெண்களுக்கும் மூட்டுவலி, எலும்பு தேய்மான பிரச்னைகள் வரலாம்,’ என, டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.குடும்பம், குழந்தைகள் என கவலைப்பட்டு, தங்களை கவனிக்காத பெண்களுக்கு மூட்டுவலி வரலாம். கவலைகள் அதிகமாகும் போது ரத்த அழுத்தம் அதிகரிக்கும்; சிறுநீரகம் பாதிக்கப்படும். இதற்கு மனதை தளர்வாக வைத்துக் கொள்வது அவசியம் என்கிறார், மதுரை சமயநல்லுார் ஆரம்ப சுகாதார நிலைய சித்தா டாக்டர் சுப்ரமணியன்.
அவர் மேலும் கூறியதாவது: உணவில் உப்பு, புளிப்புத் தன்மை அதிகம் பயன்படுத்தினால் கை, கால் கணுப் பகுதிகளில் வீக்கமும், வலியும் ஏற்படும். புளிக்காத தயிர் சாப்பிடலாம். மற்ற புளிப்பு உணவுகளை சேர்க்கக் கூடாது. நீண்டநாட்களாக வலியிருந்தால் பாக்டீரியா, வைரஸ்கள் மூலம் நோய்கள் பரவியிருக்கலாம். மூட்டில் அடிபடுவதால் கூட தொற்று ஏற்பட்டிருந்தாலும் வலி வரலாம்.
கை, கால் பெரிய மூட்டுகளில் மட்டும் வலி வருவது ஒரு வகை. இருதயத்துடன் தொடர்புடைய
மூட்டுவாதத்தில் நெஞ்சுவலி வரும். இருதயதுடிப்பு அதிகம் காணப்படும். மூட்டில் காசநோய் இருந்தால் பாதிப்பை உண்டாக்கும்.நாற்பது வயதை கடந்த ‘மெனோபாஸ்’ நிலையில் உள்ள பெண்களுக்கு எலும்பு தேய்மானம் வரும். மூட்டுவாதம், வலிக்கு அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலைய சித்தா துறையில் நல்ல மருந்துகள், உள்ளன. நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்க காலை, இரவு வெறும் வயிற்றில் தலா 2 கிராம் சீந்தில் சூரணத்தை வெந்நீரில் கலந்து அருந்தலாம். இம்மருந்து அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் கிடைக்கிறது. சீரகத்தை வறுத்து கொதிக்க வைத்த குடிநீரில் சேர்த்து குடிக்க வேண்டும், என்றார்.