மன அழுத்தம் மண்டையை பாதிக்கும். ஸ்ட்ரெஸ் எனப்படும் மன அழுத்தம் அதிகமாக இருந்தால் முடி உதிரும். கூந்தல் உதிர்வை கட்டுப்படுத்த இயற்கை வழிகள் உள்ளன.
கூந்தல் உதிர்வுக்கு காரணமும் – வீட்டு சிகிச்சையும்
மன அழுத்தம் மண்டையை பாதிக்கும். ஸ்ட்ரெஸ் எனப்படும் மன அழுத்தம் அதிகமாக இருந்தால் முடி உதிரும். மன அழுத்தத்துக்கும் முடி உதிர்வுக்கும் என்ன சம்பந்தம் என நினைக்கலாம். மன அழுத்தம் அதிகமாக இருக்கும் போது நமது எண்ணெய் சுரப்பிகள் சீபம் என்கிற எண்ணெயை அதிகமாகச் சுரக்கும்.
அதே போல மன அழுத்தமும் கோபமும் அதிகமாக இருக்கும் போது ரத்த நாளங்கள் சுருங்கி விடும். அப்போது முடியின் வேர்களுக்குப் போகிற ரத்த ஓட்டம் தடைப்படும். வெறும் 5, 10 நிமிடங்கள் தடைப்பட்டாலே அது முடி உதிர்வுக்குக் காரணமாகும். முதல்நாள் அளவுக்கதிக மன அழுத்தத்தில் இருந்து விட்டு, மறுநாள் தலை வாரும் போது முடி கொட்டலாம்.
* முடி உதிர்வுக்கு முக்கிய காரணம் முறையான பராமரிப்பின்மை. தினசரி தலைக்குக் குளிப்பது மிக முக்கியம். இன்று சுற்றுப்புற சூழல் மாசு எக்கச்சக்கம். வீட்டை விட்டு வெளியே போகிற எல்லோரும் தினசரி தலைக்குக் குளித்தாக வேண்டும்.
வீட்டுக்குள்ளேயே இருப்பவர்கள் ஒருநாள் விட்டு ஒருநாள் தலை குளித்தால் போதுமானது. வேலைச் சுமை, டென்ஷன் காரணமாக தலையில் எண்ணெய் சுரப்பிகள் அதிகமாக வேலை செய்யும். தூசும் மாசும் அத்துடன் சேர்ந்து கொள்ள இரண்டும் கலந்து மண்டையின் துவாரங்களை அடைத்துக் கொள்ளும். காலையில் குளிக்க நேரமில்லாவிட்டாலும், இரவிலாவது குளிக்க வேண்டும்.
* நீளமான கூந்தல் அழகுதான். ஆனால், அதைப் பராமரிக்க நேரமும் பொறுமையும் இல்லாதவர்களுக்கு அது அனாவசியமானது. பரபரப்பான லைஃப் ஸ்டைலில் இருப்பவர்கள் நீளமான கூந்தலைத் தவிர்த்து, அளவோடு வெட்டிக் கொள்வதே சிறந்தது.
நீளக் கூந்தலைப் பராமரிக்க முடியாமல் அப்படியே கட்டிக் கொண்டோ, கொண்டை போட்டுக் கொண்டோ போவார்கள். உள்ளே சிடுக்கு அப்படியே நிற்கும். ஒரு முடியில் உள்ள ஒரு சிடுக்கானது நல்லவிதமாக இருக்கும் பத்து முடிகளை சேர்த்து இழுத்துக் கொண்டு வரும். வீட்டில் வந்து தலையை வாரும் போது பார்த்தால் கொத்துக் கொத்தாக முடி கொட்டுவதைப் பார்க்கலாம்.
* எண்ணெய் பசையான மண்டைப் பகுதியைக் கொண்டவர்கள் தினசரி தலைக் குளிக்க கெமிக்கல் தவிர்த்து சீயக்காய் அல்லது முட்டை கலந்த ஷாம்பு உகந்தது. வறண்ட மண்டைப் பகுதி உடையவர்கள் மாயிச்சரைசிங் ஷாம்பு உபயோகிக்கலாம். எடுக்கவே கூடாத ஷாம்பு என்றால் கூந்தலை அடர்த்தியாகக் காட்டக் கூடிய வால்யூமைசர் ஷாம்பு.
* தினசரி குளிக்கும் தண்ணீரில் 3 சொட்டு லேவண்டர் ஆயிலும், 3 சொட்டு லெமன் கிராஸ் ஆயிலும் கலந்து தலைக்குக் குளித்தால் உங்கள் கூந்தலில் சிடுக்கு உண்டாகாது. இயற்கையான பளபளப்பு வரும்.
* 100 மி.லி. ஆலிவ் ஆயில், 100 மி.லி. விளக்கெண்ணெய், 100 மி.லி. பாதாம் எண்ணெய் மூன்றையும் கலந்து கொள்ளவும். இதில் 50 சொட்டு ரோஸ்மெர்ரி ஆயில், 50 சொட்டு லேவண்டர் ஆயில், 25 சொட்டு பே ஆயில் (பிரிஞ்சி இலையில் இருந்து எடுக்கப்படுகிற எண்ணெய்), 50 சொட்டு சிடர்வுட் ஆயில் ஆகியவற்றைக் கலக்கவும். 1 வாரம் இந்தக் கலவையை அப்படியே வைக்கவும்.
1வாரம் கழித்து இந்தக் கலவை எண்ணெயை தினமும் இரவில் தடவிக் கொண்டு மறுநாள் காலையில் தலைக்குக் குளிக்கவும். இப்படிச் செய்தால் முடி உதிர்வது உடனடியாக நிற்கும். 1 மாதம் தினம் இப்படிச் செய்தால் கூந்தல் நன்கு வளர ஆரம்பிக்கும்.
* மருந்துக் கடைகளில் ஈவினிங் ப்ரிம்ரோஸ் ஆயில் எனக் கிடைக்கும். 50 மி.லி. கெட்டியான தேங்காய் பாலில், 3 ஈவினிங் ப்ரிம்ரோஸ் ஆயில் கேப்ஸ்யூலை உடைத்துக் கலக்கவும். நாட்டு மருந்துக் கடைகளில் பொடுதலைப் பொடி மற்றும் வில்வம் பொடி எனக் கிடைக்கும். இது இரண்டையும் அந்தக் கலவையில் சேர்த்துக் குழைக்கவும். முதல் நாள் இரவே தலையில் எண்ணெய் தேய்த்திருக்கிறீர்கள்.
மறுநாள் காலையில் இந்தக் கலவையை தலையில் தடவி பெரிய பல் கொண்ட சீப்பால் நன்கு வாரி விடவும். 1 முதல் ஒன்றரை மணி நேரம் வைத்திருந்து, நீர்க்கச் செய்த மைல்டான ஷாம்பு கொண்டு அலசவும். தினமும் தலைக்கு எண்ணெய் தடவவும். இந்த பேக் தடவுவதை மட்டும் வாரத்தில் 2 நாட்களுக்குச் செய்யவும்.
இது முடி உதிர்வைக் கட்டுப்படுத்தி ஆரோக்கியமாக வளரச் செய்யும். தினசரி குளிக்கும் தண்ணீரில் 3 சொட்டு லேவண்டர் ஆயிலும் 3 சொட்டு லெமன் கிராஸ் ஆயிலும் கலந்து தலைக்குக் குளித்தால் உங்கள் கூந்தலில் சிடுக்கு உண்டாகாது. இயற்கையான பளபளப்பு வரும்!