சச்சரவுகளையெல்லாம் பெரிதுபடுத்தி, விவாகரத்து என்று போய் நிற்காமல் சிலகாலம் பிரிந்து தனிமையில் வாழ்ந்து தவறுகளை திருத்திக்கொள்வது வாழ்க்கையை வசந்தமாக்கும்.
தனிமையில் வாழ்ந்தால் தவறுகள் புரியும்
விவாகரத்து என்பது கணவன்-மனைவி இருவரை பிரிக்கும் விஷயமாக இருந்தாலும் அதில் பெண்ணுக்கே பாதிப்பு அதிகம். ஒரு பெண் திருமண பந்தத்தில் இணையும்போது தாய் வீட்டில் இருந்து முதல் பிரிவை சந்திக்கிறாள். அதன்பிறகு கணவன் வீடு தான் அவளது உலகம். அங்கிருந்து வெளியேற்றப்படும்போது சமூகத்தில் தனிமைப்படுத்தப்படுகிறாள்.
வாழ்வாதாரம் இன்றி தனியே வாழும் நிலைக்கு ஆளாகுகிறாள். அப்போது அவள் அனுபவிக்கும் துயரங்கள் மிக கொடுமையானவை. இன்றும் நம் சமூகத்தில் தனித்து வாழும் ஆண்களை பற்றி யாரும் கேள்வி கேட்பதில்லை. ஆனால் தனிமையில் வசிக்கும் பெண்கள் பல சோதனைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
எல்லா பிரச்சினைகளுக்கும், விவாகரத்து தீர்வு அல்ல என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஆனாலும் நிலைமை கைமீறி போய், வேறு வழியே இல்லை என்ற இக்கட்டான நிலைக்கு ஆளாகும்போதுதான் பிரிவை நாடுகிறார்கள். கற்பனையில் நினைத்து பார்த்த வாழ்க்கை நிஜத்தில் கிடைக்காதபோது மனம் சோர்ந்துபோய் விடுகிறார்கள். நிறைய பேருக்கு வாழ்வின் யதார்த்தங்கள் பிடிப்பதில்லை. அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வரும்போது, வாழ்க்கை வெகுதூரம் போய்விடுகிறது. நிஜங்களை ஏற்றுக் கொண்டால் வாழ்க்கை வசந்தமாகும் என்பதை தாமதமாகத்தான் புரிந்து கொள்கிறார்கள்.
கடந்தகால வாழ்க்கையை காரணம் காட்டி விவாகரத்து வழக்குகள் வரிசை கட்டி நிற்கின்றன. உங்களை கடந்து போனவற்றை விட்டு விடுங்கள். அதற்கு ஜீவன் கொடுத்துவிட்டு நீங்கள் உயிரை இழக்காதீர்கள். மனிதன் நிர்ணயித்தபடியெல்லாம் வாழ்க்கை இயங்காது. இருவர் சேர்ந்து வாழ இதுதான் நீதி, தர்மம் என்று யாராலும் தீர்மானிக்க முடியாது. இருளும்-ஒளியும் ஒன்று கலந்தது தான் வாழ்க்கை.
ஒரு ஆண், மனைவியோடு வாழும்போது சந்தித்த கஷ்டங்களை தனித்து வாழும் போதும் அனுபவிக்க வேண்டியிருக்கும். திருமணத்திற்கு முன்பும், பின்பும் என கஷ்டங்களை ஒப்பிட்டுப்பார்க்கும்போதுதான் உண்மை நிலவரம் புரியும். மனைவியோடு வாழும்போது இருந்த நிதி நிலைமை, பிரிந்தபோது ஏற்பட்ட நஷ்டங்கள் இரண்டையும் இணைத்துப் பார்த்தால் விவாகரத்திற்கு பிறகு ஆண்களுக்கு இழப்பீடு அதிகமாக இருக்கும். அதற்காக மனதிற்கு பிடிக்காத இரண்டுபேர் ஒரே வீட்டில் வசிப்பது சாத்தியமா? என்ற கேள்வி எழலாம். பிரியவும் கூடாது. சேர்ந்து வாழவும் முடியாது என்ற பட்சத்தில் நீதிமன்றம் சிறந்த வழியை சொல்லி இருக்கிறது.
சேர்ந்து வாழ முடியாமல் விவாகரத்து வரை வந்துவிட்ட தம்பதிகள் பிரிந்து தனித் தனியாக வாழலாம். அதற்கு கோர்ட்டு உதவி தேவையில்லை. எந்த மனஉளைச்சலும் இல்லாமல், ஒருவரை ஒருவர் வருத்திக் கொள்ளாமல் தனித்து வாழலாம். தனித்தனி வீட்டில் வசித்துக் கொள்ளலாம்.
வார்த்தைகளால் ரணமாகிப் போன மனதிற்கு தனிமையும், அமைதியும் நல்ல பக்குவத்தை தரும். நாம் செய்த தவறுகள் என்ன? என்பதை நிதானமாக சிந்திக்க வேண்டும். எப்போதுமே மற்றவர்கள் தவறு செய்து கொண்டிருக்க மாட்டார்கள். நாமும் பல தவறுகளை செய்திருப்போம். அது என்ன? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
விவாகரத்து கேட்டு நீதிமன்ற படியேறும்போது, உண்மையோடு சேர்ந்து பல பொய்களும், அவதூறுகளும் கூடவே படியேறும். அது நிலைமையை மேலும் சிக்கலாக்கி விடும். பலர் முன்னால் அவதூறுகளை அள்ளி வீசும்போது, அது மனதை ஆழமாக காயப்படுத்தி இருவரையும் மனதளவில் பிரித்துவிடும். அதற்கு இடம்கொடுக்கக்கூடாது. மனதிற்கு பிடிக்காவிட்டால் தனித்து வாழலாம்.
அப்போது பல விஷயங்கள் புரியவரும். மற்றவர் களால் புரியவைக்க முடியாத வாழ்க்கை அப்போது புரியும். தனிமை என்பது மனிதர்களை சிந்திக்க வைக்கும் நல்ல மருந்து. கருத்து வேற்றுமையால் தனியாக வாழ்ந்துக் கொள்கிறார்கள் என்ற நிலை விவாகரத்தை விட சற்று மேலானது. சுற்றி இருப்பவர்களால் ஏற்படும் மனஉளைச்சல் பெருமளவு குறையும்.
தனித்து வாழ்ந்தால் என்றாவது ஒருநாள் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு சேர்ந்து வாழும் வாய்ப்பு உருவாகும். அதனால் சிறிய சச்சரவுகளையெல்லாம் பெரிதுபடுத்தி, விவாகரத்து என்று போய் நிற்காமல் சிலகாலம் பிரிந்து தனிமையில் வாழ்ந்து தவறுகளை திருத்திக்கொள்வது வாழ்க்கையை வசந்தமாக்கும்.