குறைகள் இல்லாத குழந்தைகளைப் பெற்றெடுப்பதே எல்லா பெற்றோரின் விருப்பமும். ஆனாலும், பிறப்பதற்கு முன்பே குழந்தைக்கு ஏதேனும் குறைகள் இருக்குமா என்பதைத் தெரிந்து கொள்ள எளிமையான வழிகள் இருந்தாலும் அவற்றை அலட்சியப்படுத்துகிறவர்களில் படித்தவர்கள், படிக்காதவர்கள் என பாரபட்சமே இருப்பதில்லை. ’30 வயதுக்கு மேல் கருத்தரிப்பவர்களுக்கும், முதல் முறை கருத்தரிப்பவர்களுக்கும் இது பற்றிய விழிப்புணர்வு மிக மிக அவசியம்’ என்கிறார் மகப்பேறு மருத்துவர் கவிதா கவுதம்.
”30 வயதுக்கு மேல் குழந்தை பெறுகிற பெண்களின் எண்ணிக்கை இன்று அதிகரித்து வருகிறது. தாமதமான குழந்தைப் பேறு தருகிற சிக்கல்கள் ஒரு பக்கம் என்றால், குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவது அதைவிட சிக்கல். முதல் முறை கர்ப்பம் தரிக்கிறவர்களும், 30 வயதுக்கு மேல் கர்ப்பமாகிறவர்களும் கர்ப்பத்தின் 3வது மாதத்தில் என்.டி. ஸ்கேன் (Nuchal Translucency scan) செய்வதன் மூலம் கருவிலுள்ள குழந்தைக்கு டவுன் சிண்ட்ரோம் உள்ளிட்ட பிறவிக் கோளாறுகள் உள்ளனவா என்பதைக் கண்டுபிடிக்கலாம்.
குணப்படுத்தவே முடியாத பிரச்னைகள் என்றால் முன்கூட்டியே தெரிந்து கொண்டு அந்தக் கருவைக் கலைத்து விடுவார்கள் மருத்துவர்கள். மாதங்கள் கடந்துவிட்டால், கருவைக் கலைப்பதும் சிரமம். குறையுள்ள குழந்தையைப் பெற்றெடுத்து வளர்ப்பதும் பிரச்னை. இந்த என்.டி. ஸ்கேனை யார் வேண்டுமா னாலும் செய்துவிட முடியாது. அதில் திறமை உள்ள சிறப்பு மருத்துவர்கள் மட்டுமே செய்ய வேண்டும். இதைத் தொடர்ந்து மீண்டும் 5வது மாதம் ‘டார்கெட்’ என்கிற இன்னொரு சோதனையையும் கர்ப்பிணிகள் மேற்கொள்ள வேண்டும்.
5வது மாதத்துக்குள் குழந்தையின் எல்லா உறுப்புகளும் உருவாகி முடிந்திருக்கும். குறிப்பாக சிறுநீர் பை. இந்த டார்கெட் சோதனையின் மூலம் அதை உறுதிப்படுத்திக் கொள்வதுடன், அனைத்து உறுப்புகளும் சரியாக இயங்குகின்றனவா என்பதையும் அறிந்து கொள்ளலாம். சில குழந்தைகளுக்குக் கால்கள் நேராக இல்லாமல் வளைந்திருக்கலாம். ஒரு கையே இல்லாமலிருக்கலாம். இதயத்தில் ஓட்டை இருக்கலாம். குடலில் ஏதேனும் பாதிப்பு இருக்கலாம். இந்தப் பிரச்னைகளை முன்கூட்டியே தெரிந்து கொண்டால், சிலவற்றுக்கு குழந்தை பிறந்த உடனேயே அறுவை சிகிச்சை செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் மருத்துவக் குழு.
உதாரணத்துக்கு பாத வளைவுப் பிரச்னையான சிஜிணிக்ஷிக்கு குழந்தை பிறந்ததும் ஆபரேஷன் செய்தோ, மாவுக்கட்டு போட்டோ சரி செய்யப்படும். இந்தப் பிரச்னைக்காக கருவைக் கலைக்க வேண்டியிருக்காது. இதயத்தில் சின்ன துளை இருந்தால், அதையும் குழந்தை பிறந்த ஒரு வருடத்துக்குள் ஆபரேஷன் மூலம் அடைக்க முடியும். முதுகுத்தண்டு வளைந்தோ, சரியாக உருவாகாமலோ இருப்பது, மெனிங்கோசீல் எனப்படுகிற முதுகுத்தண்டு பிரச்னை, கிட்னி இல்லாத நிலை, நுரையீரல் சரியாக உருவாகாதது, வயிறு ஊதி இருத்தல், மூளையில் நீர் கோர்த்திருப்பது போன்ற பிரச்னைகள் இருந்தால் அந்தக் குழந்தையைப் பிழைக்க வைப்பது சிரமம். அந்த நிலையில் கருவைக் கலைப்பதுதான் தீர்வு…”