மூளை… மனிதனுக்குக் கிடைத்த அன்லிமிட்டெட் நினைவகம். ஒவ்வொரு வினாடியும் ஒரு லட்சம் அமில மாற்றங்கள் நடைபெறும் ஓர் இடம். புதிய சிந்தனைகளுக்கும் முயற்சிகளுக்கும் பிறப்பிடம். இப்படியான மூளையின் செயல்பாட்டை அதிகரித்திட சில செயல்களைப் பின்பற்றினால் நீங்கள்தான் மாஸ்டர் மைண்ட்…
1. காலை உணவைத் தவிர்க்காதீர்!
காலை உணவே நம்மை நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும். காலை உணவைத் தவிர்ப்பதால் ரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்கவோ, குறையவோ வாய்ப்புள்ளது. இரவு உணவுக்குப்பின் நாம் எடுத்துக்கொள்ளும் நீண்டநேர உறக்கத்துக்கு அடுத்து எடுத்துக்கொள்ளக்கூடிய முதல் உணவு காலை உணவே. ஆகவே, முக்கியத்துவம் வாய்ந்த அந்தக் காலை உணவைத் தவிர்த்தால், மூளையின் செல்களை இழக்க நேர்வதோடு நினைவாற்றலில் குறைவு ஏற்படும்.
காலை உணவைத் தவிர்க்காதீர்
2. இரவு உறக்கம் அவசியம்!
தினமும் சராசரியாக 6 முதல் 8 மணி நேரம் வரை தூங்க வேண்டும். அதிக நேரம் தூங்காமல் கண் விழித்திருப்பது நம்முடைய ஆரோக்கியத்தை நாமே அசைத்துப் பார்க்கக்கூடியதாகும். அதிக நேரம் விழித்திருப்பதால் மூளையில் உள்ள செல்களின் திறன் மற்றும் செயல்பாட்டில் குறைபாடு ஏற்படும். நாம் தூங்கும்போதுதான் உடலில் வளர்சிதை மாற்றம் ஏற்படும். தூங்கும்போதே மன அழுத்தம் குறையும்; மூளையின் செல்களும் புத்துயிர் பெறும். ஆக, அடுத்த நாளை எதிர்கொள்ள மூளை புத்துணர்வுடன் காத்திருக்கும்.
இறவு உறக்கம் அவசியம்
3. அதிக சர்க்கரையும் ஆபத்தே!
நாம் உண்ணும் அனைத்து உணவிலும் சர்க்கரை உள்ளது. ஆகவே, அதிகமாக இனிப்பு சாப்பிடும் பழக்கம் இருப்பவர்கள் அதைக் குறைத்துக்கொள்ள வேண்டும். இனிப்பை உண்பதன் மூலம் உடலுக்குத் தேவையான எனர்ஜி கிடைக்கிறது, செல்கள் புத்துணர்வு பெறுகின்றன என்பதெல்லாம் ஒரு புறம் இருக்க… அதிக இனிப்பால் ரத்தச் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதோடு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் கணையப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். மேலும், முன்கோப சுபாவத்தை ஏற்படுத்தும். அதிக அளவு இனிப்பு உட்கொள்வதால் அதீத நியூட்ரியன்கள் மூளைக்குக் கிடைக்கும்; இதனால், கவனமின்மை உண்டாகும்.
அதிக சர்க்கரையும் ஆபத்தே
4. அதீத உணவு வேண்டாம்!
அதிகமாக உண்ணுதல் ‘உணவு வேட்கை’ எனப்படும் ஈட்டிங் டிஸார்டருக்கு வழிவகுக்கும். இது உடல் பருமனை அதிகரிக்கச் செய்வதோடு, இதய நோய்களை ஏற்படுத்த அதிக வாய்ப்புண்டு. மேலும், மூளையில் உள்ள தண்டுகளில் பாதிப்புகளை உண்டாக்கும்; கவனச்சிதறலை உண்டாக்கும்.
அதீத உணவு வேண்டாம்
5. புகை எப்போதும் பகையே!
புகைபிடித்தல் ஒரு கெட்ட பழக்கம். புகைபிடித்தல் பல்வேறு நோய்களை உண்டாக்கும். மூளைப் பாதிப்புக்கு முக்கியக் காரணி புகைபிடித்தலே. புகையில் உள்ள நிகோடின் நுரையீரல் மற்றும் மூளையின் செயல்பாட்டைப் பாதிக்கிறது. நினைவாற்றலைக் குறைத்து மூளையில் செல் இழப்பை ஏற்படுத்தும். முதியோரைப் பாதிக்கும் `அல்சைமர்’ எனப்படும் நினைவு இழப்பு நோய்க்கும் வழிவகுக்கும்.
புகை எப்போதும் பகையே
6. தலையைப் போர்த்திப் படுக்கக்கூடாது!
நாம் பகல் நேரங்களைவிட இரவிலேயே அதிகமாகச் சுவாசிக்கிறோம். ஆக, காலை நேரங்களைவிட இரவில் தூங்கும்போதுதான் நம் உடலுக்கு அதிக ஆக்சிஜன் தேவைப்படுகிறது. அதேபோல் நாம் வெளியிடும் கார்பன்-டை ஆக்சைடின் அளவும் இரவில்தான் அதிகமாக இருக்கும். இதனால் மூளைக்குச் செல்லும் ஆக்சிஜனின் அளவு குறைந்து மூளையின் செயல்பாட்டில் தடை ஏற்படும். செல்கள் சீராக இயங்காமல் போகும். உடல் அசதியாக உள்ள உணர்வு உண்டாகும். மேலும், நாள் முழுவதும் சோர்வு, இடையறாத தூக்கம், வேலையில் நாட்டமின்மை போன்றவை ஏற்படும்.
மாசடைந்த காற்று
7. அசுத்தமான காற்றிடம் இருந்து தள்ளியிருங்கள்!
வெளியில் செல்லும்போது மாஸ்க் பயன்படுத்தலாம். மாசுபட்ட காற்றைச் சுவாசிக்கும்போது மூளையில் செல் இழப்பு ஏற்படும். மூளைக்குத் தேவையான அளவு ஆக்சிஜன் கிடைக்காமல் போகும். உயர் மற்றும் குறைந்த ரத்த அழுத்தத்தை உண்டாக்கும். மூச்சுத்திணறல் ஏற்படும். உடல் உள்ளுறுப்புகளின் செயல்பாடுகள் தடைப்படும். இதயத்துடிப்பு அதிகரிக்கும்.
உடல் நிலை சரியில்லாதபோது வேலை வேண்டாம்
8. உடல்நிலை சரியில்லாதபோது வேலை வேண்டாம்!
இன்றைய அவசர யுகத்தில் நாம் ஆரோக்கியமாக இருக்கிறோமோ, இல்லையோ வேலை நடக்க வேண்டும் என்பதற்காக ஓடிக்கொண்டே இருக்கிறோம். பலர் ஒரே நேரத்தில் வேலையை முடிக்கவேண்டும் என்ற கட்டாயத்திலும் மெனக்கெடலிலும் இருக்கிறோம். உடல்நிலை சரியில்லாதபோது உடலுக்குத் தேவையான எனர்ஜி இருக்காது. இப்படியான சூழலில் நம் உடலும் மனமும் நாடுவது ஓய்வு ஒன்றை மட்டும்தான். ஓய்வை ஒதுக்கிவைத்தால், எண்ணற்ற உடல் பாதிப்புகள் வந்து சேரும் சூழல் உண்டாகும்.
குறைவாகப் பேசுவதும் குறைபாடு
9. குறைவாகப் பேசுவதும் குறைபாடே!
பேச்சு உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் ஒரு ரகசிய மந்திரம். பேசுவதன் மூலம் மூளையின் செயல்பாடு அதிகரிக்கும். அறிவு சார்ந்த உரையாடல்கள் மூளையின் செயல்பாட்டை அதிகப்படுத்தும். மேலும், மூளை தடையில்லாமல் தொடர்ந்து இயங்க வழிவகுக்கும். மூளைக்கு ஒருவிதப் புத்துணர்வை ஏற்படுத்தும். மேலும், ஒரு பிரச்னையை அணுகும்முறையில் குழப்பம், சரியான வாக்கிய அமைப்பு இல்லாதிருத்தல், நினைக்கும் அல்லது தேவைப்படும்போது வார்த்தை நினைவில் வராமல் போதல் போன்ற பிரச்னைகள் குறைவாகப் பேசுவதால் உண்டாகக்கூடியவையாகும்.
நல்லதையே நினையுங்கள்
10. நல்லதையே நினையுங்கள் நன்மையே நடக்கும்!
தொடர்ந்து சிந்தித்தல் மூளைக்குச் சிறந்த பயிற்சி. இது புதிய முயற்சிகள், சிந்தனைகள் மற்றும் புத்துணர்வுக்கு வழிவகுக்கும். இப்படியான சிந்திக்கும் தன்மை மூளையின் அனைத்துப் பகுதிகளும் சீராக இயங்க உதவுகிறது. சிந்திக்கும் தன்மை இல்லையென்றால் மூளையில் சுருக்கம் ஏற்பட்டு, சேதமடையும் நிலை ஏற்படுகிறது. உங்களுக்குப் பிடித்த சிறப்பான துறைகளில் வேலை செய்யுங்கள். அது உங்களுக்கு உற்சாகத்தையும் புத்துணர்வையும் தரும். இவை மூளைப் பக்கவாதம், `அல்சைமர்’ நோய் போன்றவற்றிலிருந்து நம்மைக் காக்கின்றன.