எந்தவொரு காரியத்தையும் அரைகுறையாக விட்டுவிடாமல் தொடர்ந்து அதில் கவனம் பதித்து முழுமையாக செய்து முடிப்பதை வழக்கமாக கொள்ள வேண்டும்.
சிந்தனைகளை செதுக்குங்கள்… வெற்றி நிச்சயம்
எந்தவொரு காரியத்தை செய்ய தொடங்கினாலும் அதன் மீது முழு ஈடுபாடு கொண்டிருக்க வேண்டும். ஒரு சிலரிடம் திறமை இருந்தாலும் எடுத்த காரியத்தை கச்சிதமாக செய்து முடிக்க முடியாத தடுமாற்றம் ஏற்படும். தன்னிடம் இருக்கும் திறமையை தவறாக மதிப்பீடு செய்வதுதான் அதற்கு காரணம். ‘நமக்குத்தான் எப்படி செயல்பட வேண்டும் என்று தெரியுமே? என்ற அசட்டு தைரியத்துடன் அகலக்கால் வைப்பார்கள்.
ஒரே நேரத்தில் பல வேலைகளை கையில் எடுத்துக்கொண்டு பம்பரமாக சுழல்வார்கள். அவர்களை பார்த்தால் சுறுசுறுப்புடன் வேலைகளை விரைவாக செய்து கொண்டிருப்பது போல் தோன்றும். ஆனால் எந்தவொரு வேலையிலும் முழுமையாக கவனத்தை செலுத்த முடியாமல் தடுமாறுவார்கள். ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் அவர்களின் சிந்தனை சிதறும். மன குழப்பத்துக்கு ஆளாகி, ஒரு வேலையை கூட சிறப்பாக செய்து முடிக்க முடியாமல் தவிக்கக்கூடிய நிலை ஏற்படும்.
ஒரு நேரத்தில் ஒரு வேலையை செய்து முடிப்பதுதான் புத்திசாலித்தனம். அந்த வேலையை பற்றிய சிந்தனையே செயல் வடிவமாக மாறும். முழு கவனமும் அந்த ஒரு வேலையின் மீதே செலுத்தப்படும்போது அந்த வேலையை சிறப்பாக செய்து முடிக்கும் சூழல் நிலவும். அது மன மகிழ்ச்சியை அதிகப்படுத்தும். அந்த பூரிப்பே வேலையை விரைவாக செய்து முடிக்க வைத்துவிடும். அது தரும் மன நிறைவு அடுத்த வேலையை தொடங்குவதற்கு ஊக்கப்படுத்துவதாக அமையும்.
எந்தவொரு காரியத்தையும் அரைகுறையாக விட்டுவிடாமல் தொடர்ந்து அதில் கவனம் பதித்து முழுமையாக செய்து முடிப்பதை வழக்கமாக கொள்ள வேண்டும். அதற்கும் கால நிர்ணயம் வரையறை செய்து திட்டமிட்ட காலகட்டத்துக்குள் முடித்துவிட வேண்டும். வேறு ஏதேனும் சிந்தனை தோன்றினால் அதனை தவிர்க்க வேண்டும். அதுவே காலப்போக்கில் எடுத்த காரியத்தின் மீது மட்டுமே முழு கவனத்தையும் பதிக்கும் மன பக்குவத்தை ஏற்படுத்தும். அது அந்த காரியத்தோடு முடிந்துவிடுவதில்லை. வாழ்க்கையை நல்வழியில் நடத்தி செல்லும் வழிகாட்டியாகவும் அது அமையும். மற்றவர்கள் மத்தியில் உங்கள் மதிப்பு உயரும். அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாவீர்கள். ‘இவனை நம்பினால் நிச்சயம் சொன்ன வாக்கை காப்பாற்றுவான்’ என்ற நல்ல இமேஜ் வளரும்.