சமுதாயம் என்னும் வண்டியின் இருசக்கரங்கள் ஆணும், பெண்ணும் என்னும் உண்மையை புரிந்து, மகளிர் முன்னேற்றத்தில் யாவரும் பங்கு கொள்ள வேண்டும்.
மகளிர் முன்னேற்றத்தில் பங்கு கொள்வோம்
மாதர் போற்றும் மாந்தர்க்கு மாலைகள் தரவேண்டும் என்று பாடினர் கவிஞர் பெருமக்கள். மங்கையராய் பிறப்பதற்கு நல் மாதவம் செய்திடல் வேண்டும் என்றார் கவிமணி. பெண்ணை தாயாகக் கருதி வந்த பாரத நாட்டில் பெண்கள் அடிமைப்பட்டும் கொடுமைப்படுத்தப்பட்டும் வருகிறார்கள் என்பது உண்மை. பெண்களை, பெண்களே அழிக்கவும் முற்படுகிறார்கள் என்பது வேதனை.
புராதனக் காலத்தில் பெண்ணிற்கென பெருமை இருந்தது. அதனால்தான் தாய்நாட்டை, நதிகளையெல்லாம் பெண்ணின் பெயர் கொண்டு அழைத்தார்கள். சங்க காலத்தில் பல பெண் புலவர்கள் வாழ்ந்தனர் என்பதிலிருந்தும், ஜான்சிராணி, ராணி மங்கம்மாள் போன்ற மகளிரின் வீர வாழ்க்கையிலிருந்தும், பெண்கள் எல்லாத் துறையிலும் சிறந்து விளங்கினர் என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.
ஆனால் காலப்போக்கில் இது மாறியது. பெண்களின் மீதான அடக்குமுறை வளரத்தொடங்கியது. அடுப்பூதும் பெண்ணிற்கு படிப்பெதற்கு என்ற கேள்வி வளர்ந்தது. பெண்கள் அடிமைப்படுத்தப்படத் தொடங்கினார்கள். கணவன் இறந்தால் அவன் மனைவியானவள் அவனோடு தீயில் குதித்து இறக்க வேண்டும் என்ற வழக்கம் இருந்து வந்தது. ராஜாராம் மோகன்ராய் போன்ற சீர்திருத்தவாதிகள் அதை அரும்பாடுபட்டு அகற்றினார்கள்.
ஒரு குடும்பத்தில் ஆண் வகிக்கும் பொறுப்பை இன்று பெண்களும் வகிக்கிறார்கள். பல குடும்பங்கள் பெண்ணை நம்பியே நடக்கின்றன. ஆனால் இன்றளவும் வரதட்சணை என்ற பெயரால் பெண்ணையும் கொடுத்து பொன்னையும் கொடுக்கிறார்கள். மனைவி இறந்தால் மணமகன் வேறு திருமணம் செய்து கொள்ளும் அதே வேளையில், பெண்களுக்கு மட்டும் விதவைத் திருமணம் மறுக்கப்படுகிறது.
இன்றளவும் சமுதாயத்தில் பெண்களுக்கு இரண்டாம் இடமே தரப்படுகிறது. நடுஇரவில் ஒரு இளம்பெண் தனித்து வீதியில் நடந்தால் நாட்டில் அமைதி நிலவுகிறது என்று ஏற்றுக் கொள்வதாக காந்தியடிகள் கூறினார். ஆனால் பட்டப்பகலிலேயே பெண்களைச் சீரழிக்கும் ஆண்களைப் பற்றிய செய்திகள் வந்த வண்ணமே இருக்கிறது.
பல குடும்பங்களில் இன்றளவும் பெண் சிசுக்கொலை நடந்த வண்ணம் உள்ளன. பெண்களுக்கு போதிய கல்வியறிவையும் குடும்பத்தினர் தருவதில்லை. அதுபோல திரைப்படங்களிலும், விளம்பரங்களிலும் பெண்களை வெறும் போகப்பொருளாகவே சித்தரிப்பதும் வேதனைக்குரியதே. எத்துறையிலும் எங்களால் சாதிக்க முடியும் என்று பெண்கள் இன்று நிரூபித்தும் வருகிறார்கள்.
இருப்பினும் இன்றளவும் பெண்ணின் மீதான கொடுமைகள் நடந்த வண்ணமே உள்ளன. இதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால், பல மகளிர் அமைப்புகள் தோன்றி இக்கொடுமைகளை கேட்டும் அகற்றியும் வருகின்றன என்பதே ஆறுதலுக்குரிய செய்தி.
அரசும் பல சட்ட திட்டங்களை கொண்டு வந்து மகளிர் முன்னேற்றத்தில் அக்கறை காட்டியுள்ளது வரவேற்கத்தக்கது. மாநில அரசும், மத்திய அரசும் வரதட்சணை எதிர்ப்பு சட்டம், மகப்பேறு கால உதவிச் சட்டம், தொழிற்சாலை விதிகள், சாரதா சட்டம், சம ஊதிய சட்டம் போன்ற சட்டங்களை உருவாக்கி மகளிர் முன்னேற்றத்தினை ஊக்குவித்து வருகிறது.
அரசுத் துறைகளிலும் பாராளுமன்றத்திலும் மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு தரவும் ஏற்பாடுகள் நடந்த வண்ணம் உள்ளன. அரசோடு சேர்ந்து பொது மக்களும் மகளிர்க்கு கல்வி, சமஉரிமை போன்றவற்றை அளித்து மகளிர் உரிமையைக் காப்பாற்ற வேண்டும். ஆணும், பெண்ணும் சமம் என்ற கருத்தை கொள்ள வேண்டும்.
ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்தான், இவ்வையகம் ஓங்கித் தழைக்கும் என்ற பாரதியின் கனவை நனவாக்குவோம். சமுதாயம் என்னும் வண்டியின் இருசக்கரங்கள் ஆணும், பெண்ணும் என்னும் உண்மையை புரிந்து, மகளிர் முன்னேற்றத்தில் யாவரும் பங்கு கொள்ள வேண்டும்.