நாம் என்ன பேசுகிறோமோ, அதுவே அவர்களின் மனதில் எண்ணங்களாகப் பதியும். குழந்தைகளிடம் பேசக்கூடாத நெகடிவ் வார்த்தைகள் பற்றி இப்போது பார்க்கலாம்.
குழந்தைகளிடம் சொல்லக்கூடாத நெகடிவ் வார்த்தைகள்
குழந்தை வளர்ப்பில் ஒவ்வொரு நாளும் நாம் கற்றுக்கொள்ளவும் கற்றுக்கொடுக்கவும் ஏராளமான விஷயங்கள் உள்ளன. நாம் என்ன பேசுகிறோமோ, அதுவே அவர்களின் மனதில் எண்ணங்களாகப் பதியும். குழந்தைகளிடம் பேசக்கூடாத 10 நெகடிவ் வார்த்தைகள் பற்றி இப்போது பார்க்கலாம்.
1. எந்தச் சூழ்நிலையிலும் ‘நீ ஒரு கெட்ட பையன் (பெண்)’ என்ற வார்த்தையைப் பயன்படுத்த கூடாது. குழந்தைகள் எதையும் முழுமையாக நம்பும் மனநிலைகொண்டவர்கள். அவர்கள் தவறே செய்துவிட்டாலும், குற்றவாளியாக்கும் வார்த்தைகளைச் சொல்லக் கூடாது. அதற்கு மாறாக, ”நீ ரொம்ப நல்ல பையனாச்சே. இப்படி நடந்துக்கலாமா? இதனால் மற்றவர்கள் என்ன நினைப்பாங்க தெரியுமா?” என பக்குவமாகப் பேசி நல்லது, கெட்டதைப் புரியவைக்க வேண்டும்.
2. ‘நீ உன் சகோதரன் / சகோதரி மாதிரி இல்லை’ என்ற ஒப்பீடும் வேண்டாம். உலகில் யாருமே பயனற்றவர்கள் கிடையாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும். மற்றவர்களோடு ஒப்பீடு செய்யும்போது, சகோதர, சகோதரிகளின் மீது வெறுப்பும் பொறாமையும் ஏற்படும். வாழ்வில் பெரிதாக தோல்வி அடைந்ததாக நினைப்பார்கள். இது, சக குழந்தைகளிடையே பிரச்னையை ஏற்படுத்தும்.
3. எதற்கெடுத்தாலும் ‘நோ’ சொல்லாதீர்கள். ஒரு விஷயத்தைக் கேட்கும்போது, ‘இல்லே, முடியாது, நோ’ போன்ற வர்த்தைகளை சட்டெனப் பயன்படுத்தாதீர்கள். இந்த வார்த்தைகள் பெற்றோர் மீதான நம்பிக்கையைக் குறைக்கும். குழந்தை கேட்கும் விஷயத்தில் உடன்பாடு இல்லை என்றால், ‘அப்புறம் பார்க்கலாம், இது ஏன் தேவையற்றது’ என விளக்குங்கள்.
4. ‘என்னோடு பேசாதே’ என்ற வார்த்தை வேண்டாம். பேசுதல், அரவணைத்தல் மூலமே பெற்றோர் – குழந்தைகள் பிணைப்பு பலப்படுகிறது. எனவே, ”என்னோடு பேசாதே” என முகத்தில் அடிப்பது போல பேச்சைத் துண்டிக்காதீர்கள். குழந்தைகள் மனதில் உள்ள விஷயங்களைத் தயக்கமின்றி பகிர்ந்துகொள்ளவும் விவாதிக்கவும் அனுமதியுங்கள்.
அதில் உடன்பாடில்லாத விஷயங்களை உங்கள் பேச்சு, வார்த்தை, முகபாகங்களால் வெளிப்படுத்துங்கள். பெற்றோர்களை முழுமையாகப் புரிந்துகொள்ளும் வரை குழந்தைகளிடம் பேசுங்கள். குழந்தைகள் பேசுவதை கவனியுங்கள். குழந்தைகளுடன் கோபமாக பேசுவது, விவாதிப்பதைத் தவிர்த்து, ‘உன் வார்த்தைகளால் ‘அப்செட்’ ஆகிவிட்டேன்’ என சொல்லுங்கள். இதன் மூலம், உங்களுடன் எப்படிப் பேச வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வார்கள்.
5. பையன்கள் இதைச் செய்ய கூடாது? பெண்கள் அதைச் செய்ய கூடாது என சொல்லக் கூடாது. குழந்தைகள் பாலின வேறுபாடின்றி வளர்வது பல சமூகப் பிரச்னைகளை குறைக்கும். வளரும் பருவத்தில் பாலின ரீதியான விதிமுறைகளை வகுக்கக் கூடாது. இருபாலின குழந்தைகளையும் சமமாக பாவிக்க வேண்டும். இது, பெண்களுக்கான வேலை, இது பையன்களுக்கான வேலை எனப் பிரிக்க கூடாது. வீட்டு வேலையில் ஆரம்பித்து அனைத்தையும் இருபாலினத்தவரும் கற்றுக்கொள்ள, தெரிந்துகொள்ள வாய்ப்பளியுங்கள்.
6. ‘அப்பா வரட்டும் உனக்கு இருக்கு, உங்க மிஸ்கிட்டே சொல்லிடறேன்’ போன்ற வார்த்தைகள் கூடாது. குறிப்பாக, அம்மாக்கள் அடிக்கடி இப்படிச் சொல்வார்கள். இது தாயின் இயலாமையின் வெளிப்பாடே. ஆசிரியரையும் அப்பாவையும் பயமுறுத்தும் பிம்பமாக உருவாக்குவது அவர்கள் மீது பயத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தும். ஒவ்வொரு நாளும் பயத்துடன் கழிக்கும் சூழலை குழந்தைகளுக்கு உருவாக்காதீர்கள். குழந்தைகள் தவறு செய்யும்போது, அந்த விஷயத்தை அப்பாவிடம் அவர்களே தெரியப்படுத்தி திருத்திக்கொள்ள அனுமதியுங்கள்.
7. ‘உன்னை மாதிரி ஒரு பிள்ளையை யாருக்குமே பிடிக்காது. யாருமே உன்னை வெச்சுக்க மாட்டங்க’ போன்ற வார்த்தைகள் கூடவே கூடாது. எடுத்துக்காட்டாக, குழந்தைகள் வீட்டில் விளையாடும்போது அதிக சத்தத்தை ஏற்படுத்தினால், ‘கத்தாதே… வெளியே போ!’ என்று நாமும் கத்தாமல், ‘மெதுவாகப் பேசுங்கள். அல்லது வெளியே விளையாடுங்கள்’ என்று கூறலாம். உங்கள் குழந்தை சரியாக நடந்துகொள்ளவில்லை என்றால், எதனால் என்பதை ஆராய்ந்து சரிசெய்யுங்கள்.