ஒருசிலர் தயக்கம் காட்டியே நேரத்தையும், காலத்தையும் வீணடித்துக்கொண்டிருப்பார்கள். தயக்கமும், பயமும் செய்யும் காரியத்துக்கு முட்டுக்கட்டை போட்டுவிடும்.
முட்டுக்கட்டை போட்டும் தயக்கமும், பயமும்
எந்தவொரு காரியத்தை செய்ய தொடங்கும்போதும் ‘நம்மால் செய்து முடிக்க முடியும்’ என்ற நம்பிக்கை உணர்வுடன் களம் இறங்க வேண்டும். ஒருசிலர் தயக்கம் காட்டியே நேரத்தையும், காலத்தையும் வீணடித்துக்கொண்டிருப்பார்கள். தயக்கமும், பயமும் செய்யும் காரியத்துக்கு முட்டுக்கட்டை போட்டுவிடும். தயக்கத்தை தகர்த் தெறிந்து விட்டு துணிவுடன் செயல்பட வேண்டும்.
அந்த துணிவுடன் பொறுமையும், நிதானமும் கலந்திருக்க வேண்டும். பொறுமையுடன் எந்த விஷயத்தையும் கையாள்பவர்களிடத்தில் பதற்றம் எட்டிப்பார்க்காது. நிதான முடனும், அதே சமயத்தில் விவேகமுடனும் செயல்படுவதற்கு உந்து சக்தியாக விளங்கும். பின்னடைவை சந்தித்தாலும் தொடர்ந்து முயன்று கொண்டே இருப்பதற்கு வழிகாட்டும். அத்தகைய தொடர் முயற்சிக்கும், உழைப்புக்கும் தக்க பலன் கிடைத்தே தீரும். ஆதலால் ஒருபோதும் உழைப்பதற்கும், முயற்சிப்பதற்கும் தயங்கக்கூடாது.
ஒரு காரியத்தை செய்து கொண்டிருக்கும்போது தவறு நேர்ந்தால் அதனை ஒப்புக்கொள்ளும் மனோபாவம் இருக்க வேண்டும். தவறுகளை திருத்திக்கொள்வதற்கு தயக்கம் காட்டக்கூடாது. தவறுகளை ஒப்புக்கொள்ளும் பக்குவமும், அதனை திருத்திக்கொள்ளும் பண்பும்தான் வெற்றிக்கு முதல்படி. மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று தன்னுடைய நிலைப்பாட்டை நியாயப்படுத்த முயற்சிக்கக்கூடாது.
ஈகோ பிரச்சினை தோன்றுவதற்கும் இடம் கொடுத்துவிடக்கூடாது. ஒருசிலர் எடுத்த காரியத்தை நிறைவேற்ற முடியாமல் தடுமாறுவார்கள். குழப்பமான மனநிலையும், தயக்கமும்தான் அவர்களின் முயற்சிக்கு இடையூறாக இருந்து கொண்டிருக்கும். மனத்தெளிவுடன், துணிச்சலுடன் களம் இறங்குபவர்கள் நிச்சயம் வெற்றிக்கொடி நாட்டுவார்கள் என்பதில் ஐயமில்லை.