ராஜஸ்தானில் இந்த தால் டோக்ளி மிகவும் பிரபலம். நம்ம ஊர் மினி சாம்பார் இட்லி போல் தான் இந்த தால் டோக்ளி. இதை மாலையில் டிபன் போல் செய்து சாப்பிடலாம்.
ராஜஸ்தான் ஸ்பெஷல் தால் டோக்ளி
தேவையான பொருட்கள் :
மேல் மாவிற்கு…
கோதுமை மாவு – 1/2 கப்,
கடலை மாவு – 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
நெய் – 1 டீஸ்பூன்,
ஓமம் – 1/2 டீஸ்பூன் சிறிது கசக்கியது,
சீரகம் – 3/4 டீஸ்பூன்
தால் …
துவரம் பருப்பு அல்லது பாசிப் பருப்பு ஏதாவது ஒன்று.
துவரம் பருப்பு – 1/2 கப்,
தண்ணீர் – 2 கப்.
தாளிக்க…
நெய் – 2 டீஸ்பூன்,
சீரகம் – 1 டீஸ்பூன்,
பெருங்காயம் – சிறிது,
பச்சை மிளகாய் – 1,
காய்ந்த மிளகாய் – 1,
கறிவேப்பிலை – 8,
தக்காளி – 1,
மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்,
தனியாத் தூள் – 1 1/2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு.
செய்முறை :
* கொத்தமல்லி, தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* மாவிற்கு கொடுத்த அனைத்தையும் தேவையான தண்ணீர் விட்டு மெதுவாக ரொட்டி மாவாக பிசைந்து, 30 நிமிடம் மூடி வைக்கவும்.
* பருப்பை நன்றாக கழுவி, தண்ணீர் 2 கப் சேர்த்து ஊற வைத்து, குக்கரில் போட்டு நன்றாக வேக வைத்து இறக்கவும். விசில் போனவுடன் கடைந்து கொள்ளவும்.
* ஒரு தவாவை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் சீரகம், பெருங்காயம், ப.மிளகாய், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
* தக்காளி நன்றாக வதங்கி வரும் போது மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
* அடுத்து அதில் உப்பு, வெந்தப் பருப்பை சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விட்டு அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.
* பிசைந்து மூடி வைத்துள்ள டோக்ளி மாவை எடுத்து கையில் 1 டீஸ்பூன் நெய் தடவிக் கொண்டு, ஒரு பெரிய (Roti) ரொட்டியாக தேய்த்து விருப்பமான வடிவத்தில் சதுரமாகவோ, வட்டமாகவோ 1/2 இஞ்ச் நீளத்தில் வெட்டி வைத்துக் கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் தண்ணீர் 2 கப் ஊற்றி நன்கு கொதிக்கும் போது அதில் நெய் 1 டீஸ்பூன் விட்டு, இப்போது டோக்ளியை ஒவ்வொன்றாக அதில் போட்டு கொதிக்க விடவும். வெந்தவுடன் அனைத்தும் மேலே எழும்பி வரும்.
* வெந்தவற்றை தயாராக வைத்துள்ள பருப்பு தாலில் போட்டு 5 நிமிடம் கொதிக்கவிட்டு, கொத்தமல்லித்தழை, நெய் 1 டீஸ்பூன் சேர்த்து இறக்கி பரிமாறவும்.
குறிப்பு: நம் மினி இட்லி சாம்பார் போல் தால் டோக்ளி.