25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
101p3
சிற்றுண்டி வகைகள்

30 வகை நட்ஸ் ரெசிப்பி!

சத்தும் சுவையும் நிறைந்த உணவு வகைகளில் தனியிடம் வகிப்பது நட்ஸ். பார்க்கும்போதே எடுத்துச் சுவைக்கத்தூண்டும் நட்ஸ் வகைகளைப் பயன்படுத்தி அல்வா, ஸ்நாக்ஸ், தோசை, புட்டு, ஸ்ட்யூ என்று சமைத்து, சுவைப்பதை நினைத்தாலே நாவூறும். இந்தச் சுவை அனுபவத்தை உங்கள் இல்லங்களில் அரங்கேற்ற உதவிக்கரம் நீட்டு கிறார், சமையல்கலை நிபுணர் லக்ஷ்மி ஸ்ரீநிவாசன். அவர் அளிக்கும் ரெசிப்பிகளை செய்து பாருங்கள்… குடும்பத்தினரைக் குஷிப்படுத்துங்கள்!

101p3

காஜு ஸ்வீட் பிரெட்

தேவையானவை: இரண்டாக உடைத்த முந்திரி – 25 கிராம், சர்க்கரைத்தூள் – ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, இனிப்பு பிரெட் துண்டுகள் – ஒரு கப் (ஓரம் நீக்கி, சிறிய சதுரங்களாக நறுக்கியது), நெய் – 50 கிராம், தேன், உலர் திராட்சை – சிறிதளவு.

செய்முறை: வாணலியில் நெய்யைச் சூடாக்கி… முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்து தனியே எடுத்து வைக்கவும். அதே நெய்யில் பிரெட் துண்டுகளைச் சிறிது சிறிதாகப் போட்டு மொறுமொறுப்பாக வறுத்து எடுக்கவும். ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் வறுத்த பிரெட் துண்டுகள், முந்திரி, திராட்சை, சர்க்கரைத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். மேலே ஏலக்காய்த்தூள், தேன் சேர்த்து பிரெட்டின் மொறுமொறுப்புடன் பரிமாறவும்.

இதைக் குழந்தைகள் மிகவும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

101p4

முந்திரி – வெந்தயக்கீரை மசாலா

தேவையானவை: வறுத்த முந்திரி (இரண்டாக உடைத்தது) – 50 கிராம், பொடியாக நறுக்கிய வெந்தயக்கீரை – 2 கப், தக்காளி – 2 (பொடியாக நறுக்கவும்), பெரிய வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), பூண்டு – 2 பல், தோல் சீவித் துருவிய இஞ்சி – ஒரு டீஸ்பூன், கசகசா – ஒரு டீஸ்பூன், பட்டை – சிறிய துண்டு, லவங்கம் – 2, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் – தலா அரை டீஸ்பூன், சர்க்கரை – ஒரு சிட்டிகை, சீரகம் – அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: சின்ன குக்கரில் சிறிதளவு எண்ணெய் விட்டு சீரகம், பட்டை, லவங்கம், கசகசா, தக்காளி, வெங்காயம், பூண்டு, இஞ்சி சேர்த்து வதக்கவும். இதனுடன் கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், சர்க்கரை சேர்த்துக் கிளறி இறக்கவும். ஆறியபின் விழுதாக அரைக்கவும். பிறகு, அதே குக்கரில் சிறிதளவு எண்ணெய் விட்டு, சுத்தம் செய்த வெந்தயக்கீரையைப் போட்டு வதக்கவும். பாதி வதங்கிய பின் உப்பு, மஞ்சள்தூள், அரைத்த விழுது சேர்த்து குக்கரை மூடி, ஒரு விசில் விட்டு இறக்கவும். மேலே முந்திரி சேர்த்துப் பரிமாறவும்.

101p5

கேஷ்யூ – பெப்பர் ஃப்ரை

தேவையானவை: முழு முந்திரி – (பூச்சி, வண்டுகள் இல்லாததாக பார்த்து வாங்கவும்) – 50 கிராம், நெய் – 2 டீஸ்பூன், மிளகுத்தூள் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, தூள் உப்பு – கால் டீஸ்பூன்.

செய்முறை: நெய்யைச் சூடாக்கி முழு முந்திரியைக் கருகாதவாறு பொன்னிறமாகப் பொரித்து எடுத்து அடுப்பை அணைக்கவும். சூடான நெய்யில் உப்பு, மிளகுத் தூள், கறிவேப்பிலை சேர்க்கவும். இப்போது வறுத்த முந்திரி சேர்க்கவும். நெய் சூடு ஆறிய உடன் மிளகுத்தூளும், உப்பும், முந்திரியும் நன்கு ஒட்டிக்கொள்ளும்.

சூப்பரான டீ டைம் ஸ்நாக்ஸ் இது.

101p6

காஜு – கோகனட் பொடி

தேவையானவை: உடைத்த முந்திரி – 50 கிராம், துருவிய கொப்பரை/ தேங்காய்த் துருவல் – கால் கப், எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

வறுத்துப் பொடிக்க: கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 8 (அல்லது காரத்துக் கேற்ப), பெருங்காயம் – ஒரு சிறுகட்டி.

செய்முறை: முந்திரி, துருவிய கொப்பரை/தேங்காய்த் துருவலைத் தனித்தனியே சிவக்க வறுக்கவும் (எண்ணெய் விட வேண்டாம்).

கடாயில் எண்ணெய்விட்டு, வறுக்கக் கொடுத்துள்ளவற்றை சிவக்க வறுத்து ஆறவிட்டு, முந்திரி, துருவிய கொப்பரை/ தேங்காய்த் துருவல், உப்பு சேர்த்துப் பொடிக்கவும்.

101p7
காஜு ஈஸி பேல்

தேவையானவை: உடைத்து, வறுத்த முந்திரி – 50 கிராம், பொரித்த அவல் – ஒரு கப், எலுமிச்சை – அரை மூடி (சாறு பிழியவும்), நறுக்கிய வெங்காயம், தக்காளி – தலா ஒன்று, நறுக்கிய கொத்தமல்லித் தழை – சிறிதளவு, மிளகாய்த்தூள் – ஒரு சிட்டிகை, கேரட் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கொத்த மல்லித்தழை தவிர மற்ற பொருள்களை ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கலந்து, கொத்தமல்லித்தழைத் தூவிப் பரிமாறவும்.

101p8

காஜு சப்ஜி

தேவையானவை: வறுத்த முழு முந்திரி – 50 கிராம், பூண்டுப் பல் – 2, தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், பொட்டுக்கடலை – ஒரு டீஸ்பூன், சோம்பு – அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்), நெய் – 2 டீஸ்பூன், தக்காளி, வெங்காயம் – தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்), பட்டை – சிறிய துண்டு, ஏலக்காய் – 2, பிரியாணி இலை – சிறிதளவு, கிராம்பு – 2, கொத்தமல்லித்தழை – சிறிதளவு, மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: தேங்காய்த் துருவலுடன் பூண்டு, பொட்டுக்கடலை, சோம்பு, பச்சை மிளகாய் சேர்த்து தண்ணீர்விட்டு விழுதாக அரைக்கவும். வாணலியில் நெய்விட்டு பட்டை, ஏலக்காய், பிரியாணி இலை, கிராம்பு தாளித்து… வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் அரைத்த விழுது, உப்பு, மஞ்சள்தூள், முந்திரி சேர்த்து, தேவையான அளவு தண்ணீர்விட்டு ஒரு கொதிவிட்டு இறக்கவும். கொத்தமல்லித்தழைத் தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.

101p9
முந்திரி – கத்திரி துவட்டல்

தேவையானவை: உடைத்த முந்திரி – 25 கிராம், பிஞ்சு நாட்டுக் கத்திரிக்காய் – கால் கிலோ, சின்ன வெங்காயம் 10 (பொடியாக நறுக்கவும்), தக்காளி 2 (பொடியாக நறுக்கவும்), மல்லி (தனியா) – 2 டீஸ்பூன், சோம்பு – ஒரு டீஸ்பூன், மிளகு – அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், கடுகு, சீரகம் – தலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு, நெய் – ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை: கத்திரிக்காயை நான்காகப் பிளந்து நறுக்கவும். வாணலியில் நெய் விட்டு முந்திரி சேர்த்து வறுத்து தனியே எடுத்து வைக்கவும் பிறகு, அதே வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு… தனியா, சோம்பு, மிளகு, காய்ந்த மிளகாய், தேங்காய்த் துருவல் சேர்த்து சிவக்க வறுக்கவும். ஆறியபின் தண்ணீர்விடாமல் மிக்ஸியில் பொடிக்கவும். மீண்டும் அதே வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு கடுகு, சீரகம் தாளித்து, சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். இதனுடன் கத்திரிக்காய், வறுத்து அரைத்த பொடி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும். மேலே முந்திரி, கொத்தமல்லித்தழைச் சேர்த்து அலங்கரித்துப் பரிமாறவும்.

குறிப்பு: இதற்கு தண்ணீர் சேர்க்க வேண்டாம்.

101p10
முந்திரி கீர்

தேவையானவை: முந்திரி – 15, கசகசா – ஒரு டீஸ்பூன், பனை வெல்லம் – 100 கிராம், தேங்காய்ப்பால் – ஒரு கப், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, பால் – சிறிதளவு (காய்ச்சி ஆறவைத்தது).

செய்முறை: முந்திரியைப் பாலில் அரை மணி நேரம் ஊறவைக்கவும். இதனுடன் கசகசா சேர்த்து விழுதாக அரைக்கவும். பாத்திரத்தில் பனை வெல்லம் சேர்த்து, அது மூழ்கும்வரை தண்ணீர் ஊற்றி, ஒரு கொதிவிட்டு இறக்கி வடிகட்டவும். அடிகனமான பாத்திரத்தில் பனை வெல்லக் கரைசல், முந்திரி – கசகசா விழுது சேர்த்து கைவிடாமல் கிளறி, நன்கு கொதிக்கவிட்டு இறக்கவும். இதனுடன் தேங்காய்ப்பால், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். இளம் சூடாகவோ அல்லது குளிரவைத்தோ பரிமாறலாம்.

101p11

பாதாம் ரோல்ஸ்

தேவையானவை: பாதாம் பருப்பு – 20, இனிப்பு பால் கோவா – 100 கிராம், நெய் – சிறிதளவு, பாதாம் எசன்ஸ், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, பொட்டுக்கடலை – ஒரு டீஸ்பூன் (பொடிக்கவும்), கலர் கொப்பரைத் தேங்காய்த் துருவல் – 2 டீஸ்பூன்.

செய்முறை: பாதாம் பருப்பை சுடுநீரில் அரை மணி நேரம் ஊறவிட்டு, தோல் உரிக்கவும். பிறகு, பாதாம் பருப்புகளைத் துடைத்து மிக்ஸியில் பொடிக்கவும். பாத்திரத்தில் பால் கோவா, பொட்டுக்கடலைப் பொடி, பாதாம் பருப்பு பொடி, ஏலக்காய்த்தூள், பாதாம் எசன்ஸ் சேர்த்து நன்கு உதிர்த்து கட்டியில்லாமல் பிசையவும். கையில் நெய் தடவிக்கொண்டு மாவை எலுமிச்சை அளவு உருண்டைகளாக்கி, உருளை (சிலிண்டர்) வடிவில் உருட்டி, கலர் கொப்பரைத் துருவலில் புரட்டி எடுத்துப் பரிமாறவும்.

குறிப்பு: இதை இரண்டு நாள்கள் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.

101p12

வெள்ளரி விதை ஸ்வீட் டிலைட்

தேவையானவை: வெள்ளரி விதை – 20 கிராம், கொப்பரைத் துண்டுகள் – ஒரு டீஸ்பூன், கலர் சீரக மிட்டாய் – 2 டீஸ்பூன், வறுத்த வேர்க்கடலை – சிறிதளவு, எள் – ஒரு டீஸ்பூன், சர்க்கரைத்தூள் – ஒரு டீஸ்பூன், நெய் – ஒரு டீஸ்பூன்.

செய்முறை: வெறும் வாணலியில் வெள்ளரி விதை சேர்த்து வறுத்து தனியே எடுத்து வைக்கவும். பிறகு, அதே வாணலியில் எள் சேர்த்து வெடிக்கவிட்டுப் பொடிக்கவும். பாத்திரத்தில் வெள்ளரி விதை, கொப்பரைத் துண்டுகள், கலர் சீரக மிட்டாய், வறுத்த வேர்க்கடலை, பொடித்த எள், சர்க்கரைத்தூள், நெய் சேர்த்துக் கலந்துப்பரிமாறவும்.

101p13
வெள்ளரி விதை – பிஸ்தா லட்டு

தேவையானவை: வெள்ளரி விதை – 50 கிராம் (சிறிதளவு நெய்யில் வறுக்கவும்), பிஸ்தா (தோல் நீக்கியது) – 50 கிராம், துருவிய வெல்லம் – 100 கிராம், ஜாதிக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை, நெய் – 5 டீஸ்பூன், லவங்கம் – 5 (பொரிக்கவும்).

செய்முறை: வறுத்த வெள்ளரி விதை, பிஸ்தா வைத் தனித்தனியாக பொடிக்கவும். பாத்திரத்தில் இதனுடன் நெய் தவிர, மற்ற பொருள் களை நன்கு கலந்து, உருக்கிய நெய்விட்டு சிறிய உருண்டைகளாகப் பிடிக்கவும்.

101p14
மல்டி நட்ஸ் வடை

தேவையானவை: கடலை மாவு – 50 கிராம், அரிசி மாவு – ஒரு டீஸ்பூன், வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கவும்), பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்), சீரகம் – அரை டீஸ்பூன், வறுத்து உடைத்த முந்திரி, வேர்க்கடலை, பாதாம் – சிறிதளவு (வறுக்கவும்), பெருங்காயத்தூள் – சிறிதளவு, எண்ணெய், உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – தேவையான அளவு.

செய்முறை: பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, வெங்காயம், பச்சை மிளகாய், சீரகம், முந்திரி, வேர்க்கடலை, பாதாம், பெருங்காயத்தூள், உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலந்து நீர் தெளித்துப் பிசிறவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, மாவைச் சிறிய வடைகளாகத் தட்டிப்போட்டு சிவக்கப் பொரித்து எடுக்கவும்.

101p15

பிஸ்தா மில்க்

தேவையானவை: ஓடு, தோல் நீக்கிய பிஸ்தா – 10, சர்க்கரை – 2 டீஸ்பூன், ஃபுல் கிரீம் பால் – ஒரு கப் (காய்ச்சி ஆறவைத்தது), பிஸ்தா எசன்ஸ் – 2 சொட்டு.

செய்முறை: சிறிதளவு பாலில் பிஸ்தாவை அரை மணி நேரம் ஊறவிட்டு, சர்க்கரைச் சேர்த்து நைஸாக அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் அரைத்த விழுது, காய்ச்சி ஆறவைத்த பால், பிஸ்தா எசன்ஸ் ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கவும். இதை நுரை வரும்வரை மிக்ஸியில் அடித்து, ஃப்ரீசரில் வைத்து குளிர்ந்தப் பின்பு பரிமாறவும்.

101p16
பூசணி விதை – குடமிளகாய் பொரியல்

தேவையானவை: கலர் குடமிளகாய் (சிவப்பு, மஞ்சள், பச்சை) – தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்), கேரட் – ஒன்று (சதுரமாக நறுக்கவும்), சிவப்பு பூசணி விதை – 25 கிராம், தக்காளி, வெங்காயம் – தலா 2 (சதுரமாக நறுக்கவும்), பச்சை மிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), சாம்பார் பொடி – 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், கொத்தமல்லித்தழை – சிறிதளவு, கடுகு, சீரகம் – தலா அரை டீஸ்பூன், நெய் – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் நெய்விட்டு பூசணி விதைகளைச் சேர்த்து சிவக்க வறுத்து எடுக்கவும். பிறகு, அதே வாணலியில் எண்ணெய்விட்டு… கடுகு, சீரகம் தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும். இதனுடன் குடமிளகாய், கேரட், உப்பு, மஞ்சள்தூள், சிறிதளவு தண்ணீர், சாம்பார் பொடி சேர்த்து நன்கு வேகும்வரை வதக்கி இறக்கவும். மேலே பூசணி விதைகள், கொத்தமல்லித்தழைத் தூவிப் பரிமாறவும்.

101p17

சிவப்பு பூசணி விதை அல்வா

தேவையானவை: சிவப்பு பூசணி விதை – 50 கிராம், சர்க்கரை – 100 கிராம், நெய் – 50 கிராம், ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை, பாதாம் துருவல் – ஒரு டீஸ்பூன், குங்குமப்பூ – சிறிதளவு, மஞ்சள் அல்லது ஆரஞ்சு ஃபுட் கலர் – ஒரு சிட்டிகை.

செய்முறை: சுடுநீரில் பூசணி விதைகளை ஒரு மணி நேரம் ஊறவைத்து, நீரை வடித்து நைஸாக அரைக்கவும். பாத்திரத்தில் சர்க்கரை, ஃபுட் கலர், சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். நுரைவரும்போது அரைத்த பூசணி விழுது, நெய் சேர்த்துக் கிளறி சுருண்டு வரும்போது இறக்கவும். பிறகு ஏலக்காய்த்தூள் சேர்த்து, பாதாம் துருவல், குங்குமப்பூ கொண்டு அலங்கரித்துப் பரிமாறவும்.

101p17
நட்ஸ் – ஃப்ரூட் மிக்ஸ்

தேவையானவை: வறுத்து உடைத்த பிஸ்தா, பாதாம், வேர்க்கடலை, வால்நட், அக்ரூட், முந்திரி கலவை – ஒரு கப், பேரீச்சைத் துண்டுகள் – 2 டீஸ்பூன், கர்ஜூர் காய் (உலர்ந்த பேரீச்சம்பழம்) – 2, பச்சை திராட்சை – 50 கிராம், பனங்கற்கண்டு – 50 கிராம், தேன் – சிறிதளவு.

செய்முறை: பாத்திரத்தில் பிஸ்தா, பாதாம், வேர்க்கடலை, வால்நட், அக்ரூட், முந்திரி, பேரீச்சைத் துண்டுகள், கர்ஜூர் காய் துண்டுகள், பச்சை திராட்சை, பனங்கற்கண்டு, தேன் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.
விருப்பப்பட்டால், நறுக்கிய ஆப்பிள் துண்டுகள் சேர்த்துக் கொள்ளலாம்.

101p19

காரமலைஸ்டு வால்நட்

தேவையானவை: வால்நட் – 50 கிராம் (உடைக்கவும்), சர்க்கரை – 25 கிராம், நெய் – ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – 2 சொட்டு.

செய்முறை: வெறும் வாணலியில் சர்க்கரை சேர்த்து கருகும் வரை சூடாக்கவும். இதனுடன் வால்நட், நெய், எலுமிச் சைச் சாறு சேர்த்துக் கலக் கவும். சிறிது நேரத்தில் வால்நட் மீது சர்க்கரை படிந்து மொறுமொறுவென ஆகிவிடும். பின்னர் இறக்கிப் பரிமாறவும்.

101p20
வால்நட் பால்ஸ்

தேவையானவை: வால் நட் – 50 கிராம் (ஒன்றிரண்டாக பொடிக்கவும்), பால் பவுடர் – 25 கிராம், சர்க்கரைத்தூள் – 4 டீஸ்பூன், பொட்டுக்கடலை – 2 டீஸ்பூன் (பொடிக்கவும்), ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, நெய் – 50 கிராம்.

செய்முறை: பாத்திரத்தில் பொடித்த வால்நட், சர்க்கரைத்தூள், பொட்டுக் கடலைப் பொடி, பால் பவுடர், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். இதனுடன் உருக்கிய சூடான நெய்விட்டு கலந்து, சிறிய உருண்டைகளாக உருட்டிப் பரிமாறவும்.

101p21

பிஸ்தா – பொட்டேட்டோ ஸ்நாக்

தேவையானவை: பிஸ்தா பருப்பு – 20, உருளைக்கிழங்கு – கால் கிலோ (தோல் சீவி, சதுர துண்டுகளாக நறுக்கவும்), நெய் – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு உருளைக் கிழங்கு துண்டுகளைப் போட்டு சிவக்கப் பொரித்து எடுத்து எண்ணெய் வடிக்கவும். மற்றொரு வாணலியில் நெய்விட்டு பிஸ்தா சேர்த்து வறுக்கவும். பாத்திரத்தில் உருளைக்கிழங்கு துண்டுகள், பிஸ்தா, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துக் குலுக்கிப் பரிமாறவும்.

101p22
கோகனட் – சேமியா புட்டு

தேவையானவை: தேங்காய்த் துருவல் – 3 டீஸ்பூன், சேமியா – அரை கப், சர்க்கரை – 3 டீஸ்பூன், கேசரி கலர் – சிறிதளவு, ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை, பால் – கால் கப் (காய்ச்சி ஆறவைத்தது), உப்பு – ஒரு சிட்டிகை, நெய் – சிறிதளவு.

செய்முறை: பாத்திரத்தில் பாலுடன் சர்க்கரை, கேசரி கலர், ஏலக்காய்த்தூள், சேமியா, உப்பு சேர்த்துக் கலந்து பத்து நிமிடங்கள் ஊறவைக்கவும். புட்டுக் குழாயில் சிறிதளவு நெய் தடவி… சிறிதளவு சேமியா கலவை, தேங்காய்த் துருவல் என மாற்றி மாற்றிப் போடவும். ஆவியில் ஐந்து நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும். ஆறியபின் கவிழ்த்து உதிர்த்துப் பரிமாறவும்.

குறிப்பு: புட்டுக்குழாய் இல்லாதவர்கள் இட்லித்தட்டில் வேகவிட்டு செய்யலாம்.

101p23

மல்டி நட்ஸ் ரவா தோசை

தேவையானவை: ரவை – 50 கிராம், அரிசி மாவு – 100 கிராம், சீரகம் – சிறிதளவு, மைதா மாவு – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, நெய் – 50 கிராம், சர்க்கரை – ஒரு சிட்டிகை, துருவிய பாதாம், முந்திரி, வால்நட், பிஸ்தா – தலா ஒரு டீஸ்பூன், உலர் திராட்சை – 20, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பாத்திரத்தில் ரவை, அரிசி மாவு, மைதா மாவு, சீரகம், உப்பு, பெருங்காயத்தூள், சர்க்கரை சேர்த்துக் கலக்கவும். இதனுடன் தண்ணீர்விட்டு நீர்க்கக் கரைத்து 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கலக்கவும். தவாவைக் காய விட்டு மாவை மெல்லிய தோசைகளாக வார்த்து, துருவிய நட்ஸ், உலர் திராட்சை தூவி, சுற்றிலும் நெய்விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும். சட்னி அல்லது சாஸுடன் பரிமாறவும்.

101p24

பாதாம் – ஆனியன் ஃப்ரை

தேவையானவை: பாதாம் – அரை கப் (தோல் சீவி, நீளவாக்கில் நறுக்கவும்), நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் – அரை கப், இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – ஒன்று (பொடி யாக நறுக்கவும்), கடலை மாவு, அரிசி மாவு கலவை – கால் கப், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பாத்திரத்தில் பாதாம், வெங்காயம், இஞ்சி – பூண்டு விழுது, பச்சை மிளகாய், கடலை மாவு, அரிசி மாவு, உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்துப் பிசிறவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, பிசிறிய கலவையைக் கிள்ளிப் போட்டு பொன்னிறமாகப் பொரித் தெடுக்கவும்.

101p25
வேர்க்கடலை – வெள்ளரி பச்சடி

தேவையானவை: வறுத்த வேர்க்கடலை – கால் கப், புளிப்பில்லாத தயிர் – ஒரு கப் (கடையவும்), வெள்ளரிக்காய் – ஒன்று (தோல் சீவி துருவவும்), கொத்தமல்லித்தழை – சிறிதளவு, சீரகத்தூள், மிளகாய்த்தூள் – தலா சிட்டிகை, கடுகு, நெய் – தலா அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வேர்க்கடலையை மிக்ஸியில் ஒன்றிரண்டாகப் பொடிக்கவும். பாத்திரத்தில் தயிருடன் வெள்ளரித் துருவல், பொடித்த வேர்க்கடலை, உப்பு, சீரகத்தூள், மிளகாய்த்தூள், கொத்த மல்லித்தழைச் சேர்த்துக் கலக்கவும். வாணலியில் நெய்விட்டுச் சூடாக்கி, கடுகு தாளித்து பச்சடியில் சேர்த்துப் பரிமாறவும். சப்பாத்தி, நாண் உடன் சாப்பிட ஏற்ற சைட் டிஷ் இது.

101p26
கிரவுண்ட்நட் குருமா

தேவையானவை: வறுத்த வேர்க்கடலை – அரை கப் (தோல் நீக்கவும்), வெங்காயம், தக்காளி – தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்), பட்டை – ஒன்று, லவங்கம், ஏலக்காய் – தலா 2, நெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

அரைக்க: சோம்பு – அரை டீஸ்பூன், இஞ்சி – சிறிய துண்டு (தோல் சீவி பொடியாக நறுக்கவும்), பூண்டுப் பல் – 2, தேங்காய்த் துருவல் – 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, கசகசா – ஒரு டீஸ்பூன்.

செய்முறை: அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை மிக்ஸியில் சேர்த்து, தண் ணீர் விட்டு விழுதாக அரைக்கவும். வாணலியில் நெய்விட்டு, காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து வறுக்கவும். இதனுடன் வெங்காயம், தக்காளி, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு அரைத்த விழுது, வேர்க்கடலை சேர்த்து, அரை கப் தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்கவிட்டு இறக்கவும்.

101p27
வேர்க்கடலை – முள்ளங்கி கறி

தேவையானவை: பச்சை வேர்க்கடலை – அரை கப், முள்ளங்கி – கால் கிலோ (தோல் சீவி, நறுக்கவும்), மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, கடுகு, பெருங்காயத்தூள் – சிறிதளவு, வெங்காயம் – ஒன்று (பொடி யாக நறுக்கவும்), சாம்பார் பொடி – ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித்தழை – சிறிதளவு, எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வேர்க்கடலையை வேகவைத்து தனியாக வைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து… வெங்காயம், முள்ளங்கி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கி, சிறிதளவு தண்ணீர்விட்டு நன்றாக வேகவிடவும். இதனுடன் வேகவைத்த வேர்க்கடலை, சாம்பார் பொடி சேர்த்து மீண்டும் ஒரு கொதிவிட்டு இறக்கி கொத்த மல்லித்தழைத் தூவிப் பரிமாறவும்.

101p28

சாக்லேட் வேர்க்கடலை

தேவையானவை: வறுத்த முழு வேர்க்கடலை – 100 கிராம் (தோல் நீக்கவும்), கோகோ பவுடர் – 2 டீஸ்பூன், பொடித்த சர்க்கரை – 3 டீஸ்பூன், நெய் – ஒரு டீஸ்பூன், சோள மாவு (கார்ன்ஃப்ளார்) – அரை டீஸ்பூன்.

செய்முறை: அடிகனமான வாணலியில் நெய், சர்க்கரை, சோள மாவு, கோகோ பவுடர் சேர்த்துக் கரையவிடவும். கலவை நன்கு கெட்டியாகி வரும்போது வேர்க்கடலையைச் சேர்த்துக் கிளறி இறக்கவும். ஆறிய பின் பரிமாறவும்.

101p29

வேர்க்கடலை – வெங்காயக் குழம்பு

தேவையானவை: வேகவைத்த வேர்க்கடலை – அரை கப், தோலுரித்த சின்ன வெங்காயம் – அரை கப், புளிக்கரைசல் – தேவையான அளவு, மஞ்சள்தூள்- ஒரு சிட்டிகை, சாம்பார் பொடி – 2 டீஸ்பூன், கடுகு, வெந்தயம் – தலா கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – ஒன்று, இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், வெல்லம் – சிறிதளவு, கறிவேப்பிலை – சிறிதளவு, நல்லெண்ணெய் – 50 கிராம், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், இஞ்சி – பூண்டு விழுது, கறிவேப்பிலை தாளித்து, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். வதங்கியபின் உப்பு, மஞ்சள் தூள், சாம்பார் பொடி, புளிக்கரைசல், வெல்லம், வேர்க்கடலை சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கவும்.

101p30

வேர்க்கடலை ரைஸ்

தேவையானவை: வறுத்த வேர்க்கடலை – கால் கப் (தோல் நீக்கவும்), காய்ந்த மிளகாய் – 4, வடித்த சாதம் – ஒரு கப், தேங்காய் எண்ணெய் – 50 கிராம், கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: காய்ந்த மிளகாயை வறுத்துக்கொள்ளவும். வேர்க்கடலையுடன் காய்ந்த மிள காய், உப்பு சேர்த்து ஒன்றிரண் டாகப் பொடிக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, பெருங் காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து, பொடித்த வேர்க்கடலைக் கலவை, சாதம் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். பொரித்த அப்பளத்துடன் பரிமாறவும்.

101p31

வேர்க்கடலை மினி இட்லி

தேவையானவை: இட்லி மாவு – ஒரு கப், பச்சை வேர்க்கடலை – 25 கிராம், கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப் பிலை – சிறிதளவு, பச்சை மிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), எண்ணெய் – ஒரு டீஸ்பூன்.

செய்முறை: வேர்க் கடலையை வேகவிடவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, பெருங்காயத்தூள், கறி வேப்பிலை, பச்சை மிளகாய் தாளிக்கவும். மாவுடன் தாளித்த பொருள்கள், வேகவைத்த வேர்க் கடலை சேர்த்துக் கலக்கவும். மினி இட்லித்தட்டில் மாவை ஊற்றி இட்லிகளாக வேகவிட்டு எடுக்கவும்.

101p32

வேர்க்கடலை ஸ்ட்யூ

தேவையானவை: உருளைக்கிழங்கு – ஒன்று (வேகவைத்து, தோலுரித்து, மசிக்கவும்), கேரட் – ஒன்று (வேகவைத்து, சிறிய துண்டுகளாக நறுக்கவும்), பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்), பட்டை, லவங்கம், ஏலக்காய் – தலா ஒன்று, பச்சை வேர்க்கடலை – 50 கிராம், தேங்காய்த் துருவல் – 2 டீஸ்பூன், நெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பச்சை வேர்க்கடலையுடன் தேங்காய்த் துருவல் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டி பால் எடுக்கவும். வாணலியில் நெய் விட்டு பட்டை, லவங்கம், ஏலக்காய், பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும். இதனுடன் மசித்த உருளைக்கிழங்கு, கேரட், சிறிதளவு தண்ணீர், உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். பிறகு, அரைத்து வடிகட்டிய வேர்க்கடலை – தேங்காய்ப்பால் கலவையைச் சேர்த்துக் கலந்து இறக்கவும்.

Related posts

சூப்பரான முருங்கைக்கீரை வடை செய்வது எப்படி

nathan

மசாலா பூரி செய்வது எப்படி?

nathan

சுவையான மைசூர் போண்டா….

sangika

குழந்தைகளுக்கான காலிபிளவர் மசாலா தோசை

nathan

கொள்ளு சிமிலி உருண்டை

nathan

மாலை நேர டிபன் இடியாப்ப பிரியாணி

nathan

பனீர் நாண்

nathan

வாழைக்காய் பஜ்ஜி

nathan

30 வகை கறுப்பு – சிவப்பு (அரிசி) ரெசிபி tamil recipes

nathan