உடல்பருமன் இன்று எல்லா வயதினருக்குமே மிகவும் சவாலான பிரச்னை. திரும்பிய பக்கமெல்லாம் உடற்பயிற்சிக் கூடங்கள், உடல்பருமனைக் குறைக்க தொலைக்காட்சி தொடங்கி பத்திரிகைகள் வரை விழிப்புஉணர்வு நிகழ்ச்சிகள், கட்டுரைகள், செய்திகள், துணுக்குகள்… ஆனாலும் இது குறைவதாக இல்லை. `கடுமையாக உடற்பயிற்சி செய்தும் பலருக்கும் எடையோ, பருமனோ குறையாமல் இருப்பதற்குக் காரணம் உணவுப் பழக்கம். குறைந்த அளவு கலோரிகள் கொண்ட உணவுகளைச் சாப்பிடுவதுதான் உடல் எடையைக் குறைக்க உதவும் உண்மையான ரகசியம்’ என்கிறார்கள் மருத்துவர்கள். `சரியான நேரத்துக்குச் சாப்பிடாதது, ஒரே நேரத்தில் அதிக அளவில் உணவைச் சாப்பிடுவது, இரவில் பீட்சா, பர்கர் போன்ற கொழுப்பு நிறைந்த ஜங்க் ஃபுட்களைச் சாப்பிடுவது, குளிர்ப்பானங்களைக் குடிப்பது போன்றவை உடல் எடை அதிகரிக்கக் காரணம்’ என்றும் எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். இந்தப் பிரச்னைக்குத் தீர்வு தரும் குறைந்த அளவு கலோரி கொண்ட உணவுகளும் இருக்கின்றன. அவை எவை… பார்க்கலாமா?
உடல்பருமன் குறைக்கும் ராகி தோசை
ராகி தோசை
கேழ்வரகு, தினை வகையைச் சேர்ந்தது. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்துகள் நிறைவாக உள்ளன. வழக்கமான தோசையைவிட கொஞ்சம் வித்தியாசமான சுவையாக இருப்பதோடு, கலோரிகள் குறைவாகவும் உள்ள உணவு. எனவே, காலை, மாலை உணவாக இதைச் சாப்பிடலாம்.
ஓட்ஸ் சிறுதானிய இட்லி
ஓட்ஸ் இட்லி
உளுத்தம் பருப்பையும் அரிசியையும் கொண்டு செய்யப்படும் இட்லி, உலக அளவில் மிகச் சிறப்பான காலை உணவு. இருந்தாலும், இதில் கலோரிகள் அதிகம் உள்ளது. ஆனால், ஓட்ஸில் குறைவான கலோரிகளே உள்ளன. மேலும், ஆன்டிஆக்ஸிடின்ட்கள் அதிக அளவில் உள்ளன. எனவே, உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு ஏற்ற காலை உணவு ஓட்ஸ் இட்லி. இதன் மூலம் சர்க்கரைநோய், உடல்பருமன் போன்றவற்றையும் கட்டுப்படுத்த முடியும்.
பருப்பு
பருப்பு
இந்தியாவில் கிராமம் முதல் நகரம் வரை அனைத்து வீட்டுச் சமையலிலும் பருப்பு இடம்பெறாமல் இருக்காது. பருப்பு, புரோட்டீன் சத்து நிறைந்தது. குறைந்த அளவே கலோரிகள் இருந்தாலும், சாப்பிட்ட பிறகு நிறைவாகச் சாப்பிட்ட திருப்தி கிடைக்கும். அதேநேரத்தில் ஆரோக்கியமானதும்கூட.
சிவப்பு கிட்னி பீன்ஸ்
இதில் அதிக அளவில் புரோட்டீன்கள் உள்ளன. கொழுப்புச் சத்து இல்லை. அதேநேரத்தில் தக்காளிக் குழம்பு போன்றவற்றுடன் சேர்த்துச் சாப்பிட்டால், அதிகப் பலன்கள் கிடைக்கும். இதில் அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்துகள் உள்ளன. உடல் எடை குறைக்கச் சிறந்த உணவு.
ரொட்டி
ரொட்டி
ரத்த சர்க்கரையை அதிகரிக்காத குறைந்த கிளைசெமிக் உள்ள (நாம் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரையின் அளவைக் கணக்கிடும் அளவுகோல் ‘கிளைசெமிக் இண்டெக்ஸ்’. இந்த அளவீடு அதிகமாகும்போது, ரத்தத்தில் உள்ள குளூக்கோஸ் அளவு அதிகரிக்கும்.) உணவுகளில் ஒன்று. எனவே, உடல் எடை குறைக்க உதவும்; உடலுக்கு ஆரோக்கியமானதும்கூட. வெள்ளை ரொட்டியைவிட, பழுப்பு ரொட்டியே சிறந்தது.
கூழ்
கூழ்
கேழ்வரகு கூழை காலை வேளையில் சாப்பிட்டு வந்தால், செரிமான பிரச்னைகள் தீரும். குறிப்பாக ராகி கூழ், உடல் கொழுப்பை கரைத்து, உடல் எடையையும் குறைக்க உதவும்.
தோக்ளா
குஜராத் மாநிலத்தின் பிரபலமான சிற்றுண்டி தோக்ளா (Dhoklas). பொட்டுக்கடலை மாவுடன் 4 மடங்கு அரிசி மாவு கலந்து இது தயாரிக்கப்படுகிறது. தமிழகத்தில் இது ஸ்வீட் ஸ்டால், பேக்கரிகளில் கிடைக்கும். இதுவும் குறைந்த அளவு கலோரி உள்ள உணவு. உடல்பருமனைக் குறைக்க ஏற்றது.
ரெய்த்தா
ரெய்த்தா
பொதுவாக ரெய்த்தா, சப்பாத்தி, பிரியாணி போன்றவற்றுக்கு சைடுடிஷ்ஷாகப் பயன்படுவது. ஆனால், இதுவே ஒரு சிற்றுண்டி போன்றதுதான். யோகர்ட் (Yogurt) உணவுக்கு சிறந்த மாற்று இது. இதனுடன் நறுக்கிய வெள்ளரிக்காய் மற்றும் கீரைகளைச் சேர்த்துச் சாப்பிடலாம். கூடுதல் சத்துகள் கிடைக்கும். உடல் எடை குறைக்கவும் உதவும்.