சிலர் பேச்சில் கேலியும்-கிண்டலும் கலந்து, போலியாக சிரித்தபடி பொய்யாக பாராட்டுவார்கள். பேச்சையும், பாவனைகளையும் வைத்தே அவர்களின் உள்ளுணர்வுகளை புரிந்து கொள்ளலாம்.
பெண்களே கேலி – கிண்டலுக்கு இலக்கானால்..
நல்ல காரியம் செய்தவர்களை பாராட்டுவதற்கு சிலருக்கு மனமே வராது. சிலரோ பேச்சில் கேலியும்-கிண்டலும் கலந்து, போலியாக சிரித்தபடி பொய்யாக பாராட்டுவார்கள். பேச்சையும், பாவனைகளையும் வைத்தே அவர்களின் உள்ளுணர்வுகளை புரிந்து கொள்ளலாம். ஒருசிலர் பாராட்ட மனமின்றி புலம்புவார்கள்.
‘நானும் எவ்வளவோ முயற்சி செய்தேன். என்னால் முடியவில்லை. உன்னால் எப்படித்தான் முடிந்ததோ?’ என்று விரக்தியை வெளிப்படுத்துவார்கள். அந்த மாதிரியான நேரங்களில் கேலி செய்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் ஒருபோதும் உணர்ச்சிவசப்பட்டுவிடக்கூடாது. நிதானத்தையும், பொறுமையையும் இழந்துவிடக் கூடாது.
மனதை சாந்தப்படுத்திக்கொண்டு, என்ன பேசப்போகிறோம் என்பதை யோசித்து பேச வேண்டும். அவர்களுடைய பேச்சையொட்டியே உங்களுடைய பதிலும் இருக்க வேண்டும். தேவையில்லாமல் விவாதம் செய்வதோ, சம்பந்தமே இல்லாமல் வேறொரு விஷயத்தை தொடர்புபடுத்தி பேசுவதோ கூடாது. அது இருவருக்கும் இடையே மனஸ்தாபத்தை ஏற்படுத்திவிடும்.
இருவரும் உதிர்க்கும் வார்த்தைகள் ஆரோக்கியமான விவாதமாகவே தொடர வேண்டும். மோதலுக்கோ, சண்டை, சச்சரவுகளுக்கோ இடம் கொடுத்துவிடக்கூடாது. அவர்களுடைய பேச்சு எல்லைமீறும் வகையில் இருந்தால் நாசூக்காக உணர்த்திவிட வேண்டும். அப்படிப்பட்டவர்களுடைய பேச்சை அலட்சியம் செய்துவிடுவதும் நல்லது.
ஒருசிலர் வேடிக்கையாக பேசுவார்கள். அவர்களுடைய பேச்சில் கேலியும்-கிண்டலும் வெளிப்பட்டாலும் நம்மை மனம் நோகும்படி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்காது. அப்படிப்பட்டவர்களின் பேச்சை பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. புன்னகைத்தபடியே நீங்களும் அவர்கள் மனம் நோகாதபடி கலகலப்பாக பேசி விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட வேண்டும்.