26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
ld2478
கர்ப்பிணி பெண்களுக்கு

பிரசவ கால வலிகள்

பிரசவ தேதி நெருங்கும் போது, எப்போது வலி வரும் என எதிர்பார்ப்புடன் காத்திருப்பவர்களுக்கு, அதற்கு முன் வருகிற வலிகள் பீதியைக் கிளப்புபவை. கர்ப்பம் உறுதியானதில் தொடங்கி, பிரசவத்துக்கு முன்பு வரை எப்போது வேண்டுமானாலும் வரக் கூடிய இந்த வலிகளைப் பற்றியும், அவற்றுக்கான காரணங்கள் பற்றியும் விளக்கமாகச் சொல்கிறார் மருத்துவர் நிவேதிதா. ”முதல் ட்ரைமெஸ்டர் எனப்படுகிற கர்ப்பத்தின் முதல் 3 மாதங்களில் கர்ப்பமான 6 – 7வது வாரங்களில் வயிறு மற்றும் இடுப்பு வலி வரும்.

கர்ப்பப் பை விரிந்து கொடுப்பதால் வருகிற வலியாக இருக்கலாம். சில நேரங்களில் வெள்ளைப் படுதல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் போன்றவற்றுடன் வலியும் இருந்தால், அது சிறுநீர் தொற்றின் அறிகுறியாக இருக்கலாம். கர்ப்பப்பையும், சிறுநீர்பையும் அருகருகே இருப்பதால், ஒன்றை ஒன்று அழுத்துவதன் விளைவாக அடிக்கடி சிறுநீர் கழிப்பது சகஜம்தான். ஆனால், மேலே சொன்ன அறிகுறிகளுடன் வலி இருந்தால், அது சிறுநீர் தொற்றா எனப் பார்த்து, சிகிச்சைகள் எடுக்க வேண்டியது அவசியம்.

அதிக தண்ணீர் குடிப்பது, தேவைப்பட்டால் கல்ச்சர் டெஸ்ட் செய்து பார்த்து, கிருமியைக் கண்டுபிடித்து, அதற்கேற்ற மருத்துவம் செய்வது அவசியம். இரட்டை கர்ப்பப்பை இருந்தாலோ, கரு ஒட்டி வளர்வதில் பிரச்னைகள் இருந்தாலோ, கருக்குழாயில் கர்ப்பம் தரித்திருந்தாலோகூட வலி வரலாம். கரு முட்டையானது வெளியேறிய பிறகு அதன் கூட்டிலிருந்து வெளிவருவதுதான் புரொஜெஸ்ட்ரோன் என்கிற ஹார்மோன். அந்தக் கூட்டில் சில நேரங்களில் கட்டி வந்து, பெரிதாகி, வீங்கி, ரத்தம் கசியலாம். அப்போதும் வலி வரும். இவை தவிர கர்ப்பப்பை வாய்ப்புண், குடல் புண், வயிற்றுப் போக்கு போன்றவையும் வலிக்கான காரணங்களாக இருக்கலாம்.

இரண்டாவது ட்ரைமெஸ்டரான 4 முதல் 7 மாதங்களில் வருகிற வலியானது குறைப்பிரசவ வலிக்கான அறிகுறியாக இருக்கலாம். அடிவயிற்று வலியுடன், அதீத வெள்ளைப் போக்கும் இருந்தால், குறைப்பிரசவத்துக்கான எச்சரிக்கையாக இருக்கக்கூடும். அலட்சியம் செய்தால், பனிக்குடம் உடைந்து, கரு வெளியே வரவும் கூடும். ஆரம்பத்திலேயே உஷாராகி, உடனடி மருத்துவம் செய்வதன் மூலம் மட்டுமே குழந்தையைக் காப்பாற்ற முடியும். கர்ப்பப்பையின் வாயில் ஏற்படுகிற பாக்டீரியா தொற்றும் வலியை ஏற்படுத்தலாம்.

அந்தத் தொற்றை சரியாக்க சிறப்பு ஊசிகள் போடப்பட வேண்டியிருக்கும். சினைக் குழாயில் கட்டி உருவாகி, அது சுழன்று, முறுக்கிக் கொள்வதாலும் வலி வரலாம். இதை அவசர கால சிகிச்சையாகக் கருத்தில் கொண்டு, ஸ்கேன் மூலம் உறுதி செய்து, உடனடி மருத்துவம் செய்யப்பட வேண்டும். சில பெண்களுக்கு சிறுநீரகக் கல் காரணமாகவும் வலி இருக்கும். கடைசி 3 மாதங்களில் ஏற்படுகிற வலியும் அலட்சியப்படுத்தக் கூடியதல்ல. பொய் வலி என்றோ, பிரசவ வலி என்றோ அதை அலட்சியப்படுத்தக் கூடாது. வெள்ளைப்படுதல், விட்டு விட்டு வலி வருதல் போன்றவைகூட கவனிக்கப்பட வேண்டும்.

நஞ்சு பிரிவதால்கூட சிலருக்கு வலி வரும். வயிற்றுப் பகுதி இறுகுவது மாதிரியான உணர்வுடன், வலியும் தீவிரமாகும் போது, உடனடியாக கவனிக்காவிட்டால், குழந்தை வயிற்றுக்குள்ளேயே இறக்க நேரிடலாம். ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளவர்களும், ஒன்றுக்கு மேலான கர்ப்பம் சுமப்பவர்களும், ஏற்கனவே சிசேரியன் ஆனவர்களும், கர்ப்பப்பையில் கட்டி இருந்து அறுவை சிகிச்சை செய்தவர்களும் கடைசி 3 மாதங்களில் ஏற்படுகிற வலியை மிகுந்த கவனத்துடன் பார்க்க வேண்டும். அனுபவமற்றவர்களின் அலட்சியமான அறிவுரைகளைக் கேட்டு, பிரசவ காலத்து வலிகளை அலட்சியப்படுத்தாமல், உடனுக்குடன் மருத்துவ ஆலோசனைகளையும், தேவைப்பட்டால் சிகிச்சைகளையும் மேற்கொள்வதே தாய்க்கும், சேய்க்கும் பாதுகாப்பானது…” என்கிறார் மருத்துவர் நிவேதிதா.ld2478

Related posts

கர்ப்ப காலத்தில் எப்போது ஸ்கேன் எடுக்க வேண்டும்?

nathan

கருத்தரிப்பது பெண்ணின் உடல் நலனை சார்ந்தது

nathan

குறைவான எடையும் கருத்தரிப்பை பாதிக்கும்

nathan

குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளைப் பற்றிய சில வியப்பூட்டும் உண்மைகள்!

nathan

குழந்தையின் வளர்ச்சி!

nathan

கர்ப்பிணிகள் மது அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

nathan

கர்ப்ப காலத்தில் இரத்த சோகை வராமல் தடுக்க டிப்ஸ்

nathan

தூக்கம் வராமல் அவதிப்படும் கர்ப்பிணிகளுக்கு டிப்ஸ்

nathan

கர்ப்ப கால அழகுக்கு ஈடு உண்டோ!

nathan