பொதுவாக மாதவிடாய் சுழற்சி 28 முதல் 35 நாட்கள் இடைவெளிக்குள் இருப்பது அவசியம். இதே இடைவெளிக்குள் உங்களுக்கு அடுத்த மாதமும் மாதவிடாய் தோன்றினால் நீங்கள் ஆரோக்கியமாக இருப்பதாக அர்த்தம்.
உங்களின் உடல்நலம் பற்றி கூறும் மாதவிடாய்
பொதுவாக மாதவிடாய் சுழற்சி 28 முதல் 35 நாட்கள் இடைவெளிக்குள் இருப்பது அவசியம். இதனை சரியாக கணக்கிட மாதவிலக்கான முதல் நாளில் இருந்து கணக்கில் கொள்ளவும். இதே இடைவெளிக்குள் உங்களுக்கு அடுத்த மாதமும் மாதவிடாய் தோன்றினால் நீங்கள் ஆரோக்கியமாக இருப்பதாக அர்த்தம். இல்லையெனில் உடனடியாக மருத்துவரை அணுகவும்.
வயதிற்கு ஏற்றவாறு மாதவிடாய் காலம் மாறுபடும். பொதுவாக 3 நாட்களில் இருந்து 7 நாட்கள் வரை இருந்தால் அது சீரான காலம். அதிலும், 2 அல்லது 3 வது நாட்களில் அதிக உதிரப்போக்கு தோன்றும் அல்லது கூடுதல் நாட்கள் கூட உதிரப்போக்கு இருக்கலாம். அதனை கண்டு அஞ்ச தேவையில்லை.
மாதவிடாயின் போது சராசரியாக உதிரப்போக்கு அதிகமாக இருப்பதாக கருதுவீர்கள். ஆனால் உங்கள் உடலில் இருந்து ஒரு கப் உதிரம் மட்டுமே வெளியேறும். ஒரு நாளைக்கு 2 முதல் 3 சானிட்டரி நாப்கின்கள் பயன்படுத்தினால் அது சாதாரணம்.
அதற்கு மாறாக 6 முதல் 8 நாப்கின் வரை பயன்படுத்தினால் அது ரத்தசோகைக்கான அறிகுறி என கருதவும். அதேபோல் ஒரு நாளைக்கு ஒரே ஒரு நாப்கின் பயன்படுத்துவதும் சிக்கல் தான். உதிரப்போக்கில் மாற்றம் ஏற்பட்டால் அது ஏதேனும் மருந்துக்களின் பக்க விளைவாகவோ, தொற்றாகவோ அல்லது மூளை கட்டி ஏற்படுவதற்கான அறிகுறியாகக் கூட இருக்கலாம்.
பெண்கள் யாரும் மாதவிடாய் நிறம் குறித்து கவனிப்பதில்லை. அது மிகவும் முக்கியம். இளஞ்சிவப்பு நிறமாக இருக்கும் பட்சத்தில் அது சரியான மாதவிடாய் சுழற்சியை குறிக்கும். திடீரென்று கருஞ்சிவப்பாகவோ, கருப்பாகவோ இருந்தால் உடலில் ஹார்மோன் குறைபாடு உள்ளதற்கான அறிகுறி.
மாதவிடாயின் போது வலி ஏற்பட்டால் மருத்துவரை ஆலோசிப்பது நல்லது. ஓரிரு முறை வலி இருந்தால் கவலைக் கொள்ள வேண்டியதில்லை. ஆனால் அடுத்தடுத்த மாதவிடாயில் வலி இருந்தால் சிகிச்சை பெறுவது கட்டாயம்.
மாதவிடாய் இல்லாத நேரத்தில் உதிரப்போக்கு உள்ளதா என்பதை கவனிக்கவும். ஏனெனில் புண் அல்லது உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தால் மாதவிடாய் இல்லாத நேரத்தில் உதிரப்போக்கு ஏற்படும். எனவே பெண்கள் தங்களது மாதவிடாயை ஒரு பொருட்டாக எண்ணாமல் ஒவ்வொரு விஷயங்களையும் கருத்தில் கொள்வது அவசியம்.