25.3 C
Chennai
Friday, Dec 27, 2024
1 1
மருத்துவ குறிப்பு

டெங்கு காய்ச்சல் – வைத்தியர் பொ.மனோகரன்

தற்போது நாட்டின் பலபாகங்களிலும் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகின்றது. கடந்த வருடத்தில் (2016) மட்டும் 54 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.

இது அதற்கு முந்தைய வருடத்துடன் (2015) ஒப்பிடும் போது இரண்டு மடங்காகும். இந்தவருடம் ஆரம்பித்து முதல் ஒரு மாதகாலம் நிறைவடைவதற்கு முன்பே 3000க்கும் மேற்பட்டோர் இந்நோய் அறிகுறிகளோடு இனங்காணப்பட்டுள்ளார்கள்.

இது இந்நோயின் தாக்கம் நாட்டில் அதிகரித்து வருவதைதெளிவாக உணர்த்துகின்றது. நுளம்புகளால் பரவும் இவ் வைரஸ் காய்ச்சலானது மழைக்காலங்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. சிறுவர்களும் இளையோரும் இந்நோயின் தாக்கத்திற்கு அதிகளவில் உட்பட்டாலும் இக்காய்ச்சல் வயது வேறுபாடின்றிஎல்லோரையும் பாதிக்கக் கூடியது.

இது பொதுவாக பெரும்பாலானோருக்கு சாதாரணகாய்ச்சல், தலையிடி, உடல் வலியுடன் ஏற்பட்டு 4 தொடக்கம் 5 நாட்களுக்குள் பூரணமாக குணமடைந்து விடும்.

ஆனால் சிலருக்கு இது டெங்கு குருதிப்பெருக்குநோய் எனப்படும் ஆபத்தான கட்டத்தை அடைந்து உயிருக்கும் ஆபத்தை விளைவிப்பதாக அமையலாம். ஆகவே இதனை ஆரம்பித்திலேயே கண்டறிவது அவசியமாகும்.

1

பொதுவாக பின்வரும் அறிகுறிகள் டெங்கு காய்ச்சலுடன் காணப்படும்.

  • தலையிடி (குறிப்பாக கண்களுக்கு பின்புறமாக ஏற்படும் வலி)
  • உடல் வலி அல்லது மூட்டு வலி
  • தோலில் சிவப்பு நிறமான புள்ளிகள் உருவாகுதல்
  • வாந்தி அல்லது பசியின்மை.
  • வயிற்று வலி. மேலும் இவற்றோடு சிலருக்கு இருமல்,தொண்டைநோ மற்றும் வயிற்றோட்டம் போன்றவையும் ஏற்படலாம்.

மேற்கூறியஅறிகுறிகள் முதல் 4 – 6 நாட்கள் வரை காணப்படலாம். சாதாரண டெங்கு காய்ச்சல் எனின் காய்ச்சல் விட்டபின்னர் நோயாளிக்கு மேற்கூறிய அறிகுறிகள் எல்லாம் படிப்படியாகக்குறைந்து அவர் உடல் நிலையில் முன்னேற்றமடைவார்.

ஆனால் ஒரு குறிப்பிட்ட ஒரு பகுதியினருக்கு சாதாரண டெங்கு காய்ச்சல், டெங்கு குருதிப்பெருக்கு காய்ச்சலாக மாறுவதுண்டு. மேலும் ஒருவருக்கு மீண்டும் மீண்டும் டெங்கு காய்ச்சல் தாக்கம் ஏற்படும் போது அவருக்கு டெங்கு குருதிப் பெருக்கு காய்ச்சல் ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் மிக அதிகம். டெங்கு குருதிப் பெருக்கு நோயின் போது நோயாளிக்கு மேற்கூறிய அறிகுறிகள் சற்று கடுமையாக காணப்படுவதுடன் குருதியில் குருதி சிறுதுணிக்கைகளின் (Platelets) அளவு அதிகளவு குறைவடைவதால் தோலில் அதிகளவு சிவப்புநிற புள்ளிகள் உருவாகுவதோடு முரசுகளில் இருந்து இரத்தக்கசிவும் ஏற்படுவதுண்டு. மேலும் இதன் போது நுரையீரலுக்குள்ளும் வயிற்றினுள்ளும் அதிகளவு குருதி நீர்க் கசிவும் ஏற்படலாம். இதனால் அதிகளவு நீரிழப்பு ஏற்பட்டு நோயாளின் குருதி அமுக்கம் குறைவடைந்து அவர் ஆபத்தான கட்டத்தை அடையலாம்.

2

குருதிநீர் கசியும் நிலையானது பொதுவாக காய்ச்சல் ஏற்பட்டு 3ஆவது நாளில் இருந்து 6ஆவது நாட்களுக்குள் ஏற்படுகின்றது. எனவே இக்காலப் பகுதியில் நோயாளியை நெருக்கமாக கண்காணிக்க வேண்டும்.

எனவே டெங்குக் காய்ச்சலுக்குரிய அறிகுறிகள் காணப்படுமாயின் நோயாளி அருகிலுள்ள வைத்தியர் ஒருவரின் உதவியைநாடி, தனக்கு ஏற்பட்டிருக்கும் காய்ச்சல் எவ்வகையானது என்பதை சோதித்து பார்க்க வேண்டும்.

மேலும் 3 நாட்களுக்குமேல் காய்ச்சல் தொடர்ந்திருக்குமாயின் குருதிப் பரிசோதனை முழு குருதிக்கல எண்ணிக்கை (Full Blood Count) ஒன்றை செய்வது நன்று. இதனை பிரதான வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவிலும் செய்து கொள்ளமுடியும்.

அந்தவகையில் அவ் இரத்தப்பரிசோதனையில் குருதிச் சிறுதுணிக்கைகளின் அளவு பொதுவாக 150,000 இனைவிடவும் வெண் குருதித் துணிக்கைகளின் (WBC) அளவு 5000 இனைவிடவும் குறைவாக காணப்பட்டால் அந்நோயாளியின் ஏனைய அறிகுறிகளையும் அடிப்படையாக வைத்து, வெளிநோயாளர் பிரிவில் இருக்கும் வைத்தியர் அந்நோயாளியை மேலதிக சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையினுள் அனுமதிப்பார்.

டெங்கு காய்ச்சலுக்கு என்று பிரத்தியேகமான மருந்துகள் எவையுமில்லை. நோயாளி போதிளவு ஓய்வெடுத்துக்கொள்வதோடு, நீர்இழப்பை தடுப்பதற்கு அதிகளவு நீர் ஆகாரங்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும். வெறும் நீரை உட் கொள்வதற்கு பதிலாக இளநீர், பழச்சாறுகள், கஞ்சி போன்றவற்றை அடிக்கடி எடுத்துக் கொள்வது நன்று.

செயற்கையாக நிறமூட்டப்பட்ட குளிர்பானங்களை தவிர்த்துக்கொள்ள வேண்டும். போதுமான அளவு சிறுநீர் வெளியேறுகின்றதா என்பதையும் அவதானிக்க வேண்டும்.

அந்த வகையில் விடுதியில்அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளி உள்ளெடுக்கும் நீர் ஆகாரங்களின் அளவையும் வெளியேறும் சிறு நீரின் அளவையும் குறித்துக் கொள்ள வேண்டும். இதனை விட அதிகளவு நீர் இழப்பு ஏற்படும் நிலையில் நோயாளிக்கு ஊசி யினூடாக சேலைன் (Saline) உம் ஏனைய மருந்துகளும் கொடுக்கப்படும்.

நோயாளிக்கு காய்ச்சல் தொடர்ச்சியாக 24 மணி நேரத்திற்கு மேல் வராதவிடத்து, குருதிச் சிறு துணிக்கைகளின் அளவு முன்னேற்றம் அடையும் போது ஏனைய நோய் அறிகுறிகளும் முன்னேற்றம் அடையும் போதும் வைத்தியசாலையில் இருந்துவெளியேறலாம்.

ஆகவே இவ் டெங்கு நோயை கட்டுப்படுத்த ஒவ்வொருவரும் தமது சுற்றுச்சூழலை நுளம்புகள் பெருகாதவாறு பாதுகாத்தல் அவசியம். வீட்டை அண்டைய பகுதிகளில் மழைநீர் தேங்கி இருக்கக் கூடிய இடங்களை சுத்தம் செய்ய வேண்டும். உதாரணமாக யோகட்கப்புகளையும் தேங்காய்ச் சிரட்டைகளையும் வீட்டை அண்டிய பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கக்கூடியவாறு வீசுவதை தவிர்க்கவேண்டும்.

மேலும் தேவையற்ற பொலித்தீன் பாவனையை குறைத்துக்கொள்வதுடன் அவற்றை வீட்டைச் சுற்றிய பகுதிகளில் அலட்சியமாக வீசுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும் பீலிகளில் சேர்ந்திருக்கும் குப்பைகளை அகற்றி அவற்றை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அரசாங்கம் நாடளாவிய ரீதியில் டெங்குநோயை அழிக்க பல முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது. அவர்களுக்கு நாமும்
ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

ஒவ்வொருவரும் தமது சமூக கடமையை உணர்ந்து தமது சுற்றுச் சூழலை சுத்தமாக வைத்திருந்தால் நுளம்புப் பெருக்கத்தை கட்டுப்படுத்தி டெங்குநோயின் பரவலை தடுக்கலாம்.

வைத்தியர் பொ.மனோகரன்

Related posts

குழந்தைக்கு திட்டமிடும் தம்பதிகளின் கவனத்துக்கு 10 விஷயங்கள்!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்பமாக இருக்கும் போது அடிக்கடி ஸ்கேன் எடுக்கலாமா?

nathan

தெரிஞ்சிக்கங்க…பல் சொத்தைக்கும் பல் வலிக்கும் ஒரே எண்ணெய்யில் தீர்வு..

nathan

உங்கள் மகனிடம் சொல்லக் கூடாத 6 வாக்கியங்கள்!தெரிந்துகொள்வோமா?

nathan

வயாகரா பற்றி தெரியாத சில ரகசியங்கள்

nathan

தெரிஞ்சிக்கங்க… ஆஸ்துமாவில் இருந்து விடுபட உதவும் வீட்டு மருத்துவம்!

nathan

தெரிஞ்சிக்கங்க…பிரசவத்திற்கு செல்லும் கர்ப்பிணி பெண்களின் பையில் இருக்க வேண்டிய 12 பொருட்கள்!!!

nathan

உப்பு, கிராம்பு, எலுமிச்சை எல்லாம் வேண்டாம், பல்லு நல்லா இருக்க இதுவே போதும்!!!

nathan

இந்த உணவுகளை சாப்பிட்டா சிறுநீரகத்தில் கல் உருவாகும்…

nathan