சுற்றுலாவுக்கு கிளம்பிக்கொண்டிருக்கும் அல்லது அதற்காக தயாராகிக் கொண்டிருக்கும் நீங்கள் என்னென்ன விஷயங்களில் எல்லாம் கவனம் செலுத்த வேண்டும் என்று பார்க்கலாம்.
சுற்றுலா சுகமானதாக அமைய ஆலோசனைகள்
ஒவ்வொரு குடும்பத்தினரும் கோடைச் சுற்றுலாவுக்கு கிளம்பிக்கொண்டிருக்கும் அல்லது அதற்காக தயாராகிக் கொண்டிருக்கும் நேரம் இது. நாம் செல்லும் சுற்றுலா சுகமானதாக அமைய என்னென்ன விஷயங்களில் எல்லாம் கவனம் செலுத்த வேண்டும்? இதோ, சில ஆலோசனைகள்…
* முதலில், குடும்பத்துடன் செல்லும் கோடைச் சுற்றுலாவுக்குச் சரியான இடத்தைத் தேர்வு செய்யுங்கள். வெயில் கொதிக்கும் கடற் கரைத் தலங்கள் போன்றவற்றைவிட, குளுகுளு மலைவாசஸ்தலங்கள் கோடைச் சுற்றுலாவுக்கு ஏற்றவை. அதிலும், மக்கள் குவியும் பிரபல சுற்றுலாத்தலங்களாக இல்லாமல் இருந்தால் இன்னும் நலம். பிரசித்தி பெறாத இந்தத் தலங்களில் பார்ப்பதற்கான இடங்கள் குறைவாக இருக்கும்தான். ஆனால் அதுவே, நீங்கள் ரிலாக்ஸாக அமர்ந்து குளிர்ச் சூழலையும், அமைதியையும் அனுபவிப்பதற்கு வசதியாகவும் இருக்கும்.
* கோடைச் சுற்றுலாவின்போது சாலைப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது அல்லது இரவில் பயணம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளலாம். பகலில் சாலையில் பயணித்தால், வெயில் ஏறஏற எரிச்சலும் ஏறும். குறிப்பாக குழந்தைகள் சிணுங்க ஆரம்பிப்பார்கள்.
* சுற்றுலாத்தலமானாலும் அங்கு உச்சிவேளை நேரங்களில் திறந்தவெளியில் அலைவதை கூடியமட்டும் தவிர்க்கலாம். அந்த நேரங் களில் அங்குள்ள அருங்காட்சியகங்கள், பூங்காக்கள் போன்றவற்றில் பொழுதைக் கழிக்கலாம்.
* மென்மையான ஆடைகள், தொப்பிகள், குளிர்கண்ணாடிகள், குடைகள் போன்றவை சுற்றுலாவின்போது சூரியனின் தாக்கத்தில் இருந்து காக்கும். கறுப்பு போன்ற அடர்வண்ணங்கள் சூரியக் கதிர்களை ஈர்க்கும் என்பதால் நிறங்களிலும் கவனம் வையுங்கள். எப்போதும் கையில் தண்ணீர் பாட்டில் இருக்கட்டும்.
* சந்தோஷமாக சுற்றுலா செல்கிறோம் என்று புறப்பட்டுப் போய்விட்டு, முகம், உடம்பெல்லாம் வெயிலில் கறுத்துத் திரும்பவேண்டாம். மூன்று, நான்கு மணிநேரத்துக்கு ஒருமுறை சன்ஸ்கிரீன் போன்றவற்றை இட்டு உங்கள் சருமத்தைக் காத்துக்கொள்ளுங்கள்.
* சுற்றுலாத்தலங்களில் சாலையோரம் கிடைக்கும் காரசாரமான, எண்ணெய் வழியும் பதார்த்தங்களைப் பார்க்கும்போது சிறு சபலம் ஏற்படத்தான் செய்யும். ஆனால் சுகாதாரமும், சுற்றுலா சுகமாய் அமைய வயிறும் முக்கியம் என்பதை உணர்ந்து கட்டுப்பாட்டைப் பேணுங்கள். அதேவேளையில் அந்தந்த இடங்களில் கிடைக்கும் இளநீர், வெள்ளரி, தர்ப்பூசணி போன்ற ‘குளிர்ச்சி’ உணவுப்பொருட்களை தாராளமாய்ச் சாப்பிடலாம்.
* சுற்றுலா செல்லும் இடத்தில் அந்த ஊருக்கு பிரத்தியேகமான சில பொருட்களை வாங்கிக்கொள்ளலாம் என்றாலும், ‘ஷாப்பிங்’குக்கு அதிக முக்கியத்துவம் அளிக்காதீர்கள். பின்னர் அந்தப் பொருட்களையும் தூக்கிக்கொண்டு அலைவது கஷ்டமாக இருக்கும்.
* சில அத்தியாவசிய மருந்துகள், வாந்தி ஏற்படுவதைத் தடுக்கும் மாத்திரைகள், முதலுதவிச் சிகிச்சை உபகரணங்களை உடன் எடுத்துச் செல்லுங்கள்.
* கடைசியாக, கோடை விடுமுறை என்பது எல்லோரும் சுற்றுலாத் தலங்களை நோக்கிப் படையெடுக்கும் காலம். எனவே, ஓட்டல், போக்குவரத்துக்கான ஏற்பாடுகளை ‘பக்கா’வாகச் செய்துவிடுங்கள். அப்போதுதான் நிம்மதியாகப் புறப்பட்டுச் செல்ல முடியும்.