வெயில் காலங்களில் முகத்துக்கு பவுடர், கிரீம் பயன்படுத்தினால் தோலின் தன்மை மாறி பளிச்சென்ற நிறத்துக்குப் பதிலாக கருப்பாக மாற வாய்ப்புள்ளது.
வெயில் காலங்களில் முகத்துக்கு பவுடர் – கிரீம் பயன்படுத்த வேண்டாம்
வெயில் காலங்களில் காலை 10 மணி முதல் பகல் 3 மணி வரை புற ஊதா கதிர்களின் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்த நேரங்களில் வெளியில் நடமாடுவதைத் தவிர்க்கலாம். வெளியில் செல்ல கட்டாயம் ஏற்பட்டால் உடலை மறைக்கும் ஆடைகளை அணிய வேண்டும். அடர் நிறத்தால் ஆன ஆடைகளைத் தவிர்த்து விட்டு வெளிர் நிற ஆடைகளை அணிய வேண்டும். குடையை பயன்படுத்திக் கொள்ளலாம். பருத்தி ஆடைகள் மிகவும் நல்லது.
வெயிலில் அதிகம் நடமாடும் போது தோலில் சிறிய அளவில் குரு ஏற்படும். இதற்கு மருத்துவரை அணுகி உரிய கிசிச்சை எடுத்துக் கொள்ளவேண்டும். முகத்துக்கு டால்கம் பவுடர், வேர்க்குரு பவுடர் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இவை தோலில் உள்ள நுண்ணிய துளைகளை மூடி வியர்வையை வெளியேற்றாமல் தவிர்த்துவிடும்.
அதேபோல், முகத்துக்கு பச்சைப் பயிறு, கடலை மாவு தடவுவதையும் தவிர்க்கலாம். சாதாரண தண்ணீரில் வழக்கமான சோப்பைப் பயன்படுத்தி குளித்தால் போதும். நீச்சல் குளத்தில் குளிப்பவர்கள் கண்டிப்பாக சாதாரண தண்ணீரில் குளிக்க வேண்டும். இறுக்கமான ஜீன்ஸ் ஆடைகளைத் தவிர்த்து காற்றோட்டமான ஆடைகளை அணிய வேண்டும். தொடை இடுக்கு, அக்குள் பகுதிகளில் அதிக ஈரப்பதம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஈரப்பதம் மற்றும் அதிக வெப்பம் காரணமாக தொடை இடுக்கு, அக்குள் பகுதியில் பாக்டீரியா, பூஞ்சான் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஈரப்பதமான துணிகளை உடுத்துவதை தவிர்க்க வேண்டும்.
வெயில் நேரத்தில் நாம் அணிந்திருக்கும் துணிகள், உள்ளாடைகள் ஈரமானால் வேறு துணிகளை மாற்றிக்கொள்ள வேண்டும். ஒவ்வொருவருக்கும் தோலின் தன்மை மாறுபடும். எனவே, அதற்கு ஏற்ப சன் கிரீம்களை பயன்படுத்தலாம்.
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பலர் தங்கள் முகத்துக்கு அழகு சேர்க்கும் அல்லது பளபளப்பாக வைத்திருக்க, விதவிதமாக விற்கப்படும் கிரீம்களை பயன்படுத்துகின்றனர். ஆரம்பத்தில் இது பளிச்சென்று இருப்பது போல காணப்படும்.
இந்தக் கிரீம்களை தொடர்ந்து பயன்படுத்தினால் தோலின் தன்மை மாறி பளிச்சென்ற நிறத்துக்குப் பதிலாக கருப்பாக மாற வாய்ப்புள்ளது. மேலும், தோலின் நோய் எதிர்ப்புச் சக்தியும் குறைந்துவிடும்.
சிலர் முகத்துக்கு அழகு கிரீம்களை பூசிக்கொண்டு இரவு முழுவதும் படுத்துவிட்டு மறுநாள் காலையில் சுத்தம் செய்வார்கள். இதுபோன்று செய்வது முற்றிலும் தவறானது. தோல் பாதிக்கப்படுவதுடன் ஒவ்வாமைப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
தினமும் 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். உணவில் நீர்சத்து நிறைந்த கீரைக்காய், சவ்சவ், சுரைக்காய், பீர்க்கங்காய் உள்ளிட்டவற்றை சேர்க்க வேண்டும். தர்பூசணி, மோர், கரும்புசாறு, கஞ்சி, கூழ், இளநீர், எலுமிச்சை பழம் ஜூஸ் பருகுவது நல்லது.