29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
201608151312036625 Possible natural childbirth SECVPF
கர்ப்பிணி பெண்களுக்கு

சுகப்பிரசவம் சாத்தியமா?

இந்த நல்உலகுக்கு ஒரு புது உயிரைக் கூட்டி வருகிற தலைமுறை உருவாக்கத்தின் ஆதாரமே பிரசவம்தான். தனக்கென ஓர் உயிரை ஈன்றெடுக்கையில் ஏற்படும் வலி கூட சுகமான வலிதான். இரு தலைமுறைகளுக்கு முன் பெரும்பாலும் வீட்டிலேயேதான் குழந்தை பெற்றுக் கொண்டனர். குடும்பக் கட்டுப்பாட்டுக் கொள்கை மற்றும் கருத்தடைச் சாதனங்கள் இல்லாத அக்காலத்தில், 10 குழந்தைகளுக்கும் மேல் பெற்ற போதிலும், 80 வயது தாண்டி ஆரோக்கியமாக வாழும் பலர் இன்னமும் இருக்கிறார்கள். இதற்கு அடுத்த தலைமுறையினர்தான் பிரசவத்துக்கு மருத்துவமனைகளை நாடிச் சென்றனர்.

அவற்றில் பெரும்பான்மை சுகப்பிரசவம்தான். இந்தத் தலைமுறையில்தான் சுகப்பிரசவம் என்பதே அரிதாகி, சிசேரியன் நம் வாழ்வோடு இரண்டறக் கலந்து விட்டது. ‘வலியின்றி குழந்தை பெற உகந்த வழி சிசேரியன்தான்’ எனும் கருத்து பல கர்ப்பிணிகள் மனதில் பரப்பப்படுகிறது. ‘இயற்கைக்கு மாறான எதுவுமே நல்லதல்ல’ என்கிற விதியின் அடிப்படையில் பார்க்கும்போது சிசேரியன் என்பது தேவையைப் பொறுத்து மட்டுமே அமைய வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் பெரும்பாலும் சிசேரியனே என்றும், இதற்குப் பின் காசு பிடுங்கும் நோக்கம் இருப்பதாகவும் காலம் காலமாக குற்றச்சாட்டுகள் தொடர்கின்றன.

சிசேரியனுக்கு மருத்துவர்கள் மட்டும் காரணமல்ல… பல கர்ப்பிணிகளின் விருப்பத்தின் அடிப்படையிலேயேதான் சிசேரியன் மேற்கொள்ளப்படுகிறது. மற்றபடி சிக்கலான சூழ்நிலையின் போது மட்டுமே சிசேரியன் செய்யப்படுகிறது என்பது மருத்துவத் தரப்பு வாதம். பிரசவத்தின் போது நிகழும் மரணத்தைத் தவிர்ப்பதற்காகவே சிசேரியன் எனும் மருத்துவ முறை கண்டறியப்பட்டது.

இன்றோ ‘பிரசவமே சிசேரியன்தான்’ என்கிற நிலை இருப்பது ஏன்? சிசேரியன் பிரசவங்களின் அதிகரிப்புக்கு என்ன காரணம்?

தனியார் மருத்துவமனைகள் அதீத லாபத்துக்காக சிசேரியன் செய்கின்றனவா? மகப்பேறு மருத்துவர் ஜெயஸ்ரீ கஜராஜிடம் கேள்விகளைத் தொடுத்தோம்… “சிசேரியனை இங்கு எந்த மருத்துவரும் திணிப்பதில்லை. 35 வயது கடந்தவர்கள், சோதனைக்குழாய் மூலம் கர்ப்பம் தரித்தவர்கள், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளவர்கள் போன்ற ‘ஹை ரிஸ்க்’ கர்ப்பிணிகளுக்கு குழந்தை பெறுவதில் சிக்கல் நேரும்போது சிசேரியன் அவசியம். குறைந்த வயதுடைய, எவ்வித உடல் நலக்கோளாறுகளும் அற்ற ‘லோ ரிஸ்க்’ கர்ப்பிணிகளுக்கு தவிர்க்க முடியாத சூழலில் மட்டுமே சிசேரியன் செய்யப்படுகிறது.

மகப்பேறு மருத்துவர் குறித்துக் கொடுத்த தேதியில் 4 சதவிகித குழந்தைகள்தான் பிறக்கின்றன. அந்தக் கணக்கு முன்னரோ, பின்னரோ மாறுபட வாய்ப்பிருப்பதால், குழந்தை பிறக்கும் வரையிலும் காத்திருக்க வேண்டும். நமது முந்தைய தலைமுறைகளைப் போல இந்தத் தலைமுறைப் பெண்கள் இருக்கின்றனரா? வலியில்லாமல், காத்திருக்கத் தயாரில்லாமல் மருத்துவமனைக்கு வந்த சில மணி நேரங்களிலேயே குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என நினைப்பதால் சிசேரியன் செய்ய அவர்களே முன் வருகிறார்கள். விஞ்ஞான யுகம் என்று நாம் சொல்லிக் கொண்டாலும், இன்னமும் ஜோதிட நம்பிக்கையில் தேதி, நேரம் குறித்து கொண்டு அந்நேரத்தில் சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக் கொள்கின்றனர்.

திளிநிஷிமி எனும் மகப்பேறு மருத்துவ அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி 40 முதல் 50 சதவிகிதம் வரை சிசேரியன் நடப்பதாகவும், அதில் லோ ரிஸ்க் கர்ப்பிணிகள் 25 சதவிகிதம் பேர் சிசேரியன் செய்து குழந்தை பெறுகின்றனர் எனவும் தெரிவித்துள்ளது. General anaesthesia எனும் மயக்க ஊசி போட்டு அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை எடுப்பது அல்லது ஸ்பைனல் கார்டு ஊசி போட்டு, குறிப்பிட்ட இடத்தை மரத்துப் போகச் செய்து குழந்தையை எடுப்பது என 2 வகைகளில் சிசேரியன் செய்யப்படுகிறது. சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டவர்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப இரண்டு மாதங்கள் ஆகும். சுகப்பிரசவத்தின் போது பிரசவ அறைக்குள் கணவரும் அனுமதிக்கப்படுகிறார்.

சிசேரியன் செய்கையில் கணவருக்கு அனுமதி இல்லை. சுகப்பிரசவம் அடைய கர்ப்பிணிகளும் பல வழிகளைப் பின்பற்ற வேண்டும். ‘சுகப்பிரசவம் ஆக வேண்டும்’ என்பதற்கு மனதளவிலும் தயாராக வேண்டும். உடல் இயக்கம் தேவை என்பதால் கர்ப்பம் தரித்த நாளிலிருந்தே வீட்டு வேலை செய்தல் மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். கர்ப்ப காலம் தொட்டு பிரசவம் வரையிலும் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து கர்ப்பிணிகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அதில் பயிற்சி பெறுவது கூட நல்லது. சுகப்பிரசவத்துக்கு கர்ப்பிணிகள் மட்டுமல்ல… சுற்றுப்புறச் சூழலும் சிறப்பாக அமைய வேண்டும்.

சுகப்பிரசவத்துக்கு மகிழ்ச்சியான மனநிலையை உருவாக்கிக் கொடுத்தல் கூட ஒரு காரணமாக அமையும்” என்கிறார் டாக்டர் ஜெயஸ்ரீ கஜராஜ். மரபிலிருந்து தொடர்ந்து வந்த நமது பிரசவ முறை தடம் புரண்டு போனது குறித்து விளக்குகிறார் சித்த வர்ம மருத்துவர் பு.மா.சரவணன். ”முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை கருத்தரித்தலும் பிரசவித்தலும் வம்சா வளியின் தொடர்ச்சியாகவும் குடும்பத்தின் கொண்டாட்டமாகவும் பார்க்கப்பட்டது. அப்போது இருந்த கூட்டுக் குடும்ப அமைப்பு முறையில் உறுப்பினர்கள் எல்லோரும் கர்ப்பிணி மீது அக்கறை எடுத்துக் கொண்டனர்.

கர்ப்ப காலத்தில் ஏற்படும் வாந்தி, குமட்டல், ருசியின்மை போன்றவற்றுக்கு மாதுளை, சாத்துக்குடி, மாங்காய், சீரகத் தூளை தேனில் கலந்து சாப்பிடுதல், ஏழாவது மாதத்தில் வரும் பொய் வலி, சிறுநீர்தாரைத்தொற்று, மலச்சிக்கலைத் தவிர்க்க சீரகம் – சோம்பு கஷாயம் கொடுத்தல் போன்ற கை வைத்தியங்களை வீட்டிலிருந்த அனுபவம் மிக்க பெரியோர் செய்துவந்தனர். கர்ப்பிணிகள் பசிக்கும் போது உணவருந்தி, தவிக்கும்போது நீரருந்தி பிரசவம் வரையிலும் இயல்பாக வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்தனர். அப்பெண்ணுக்கு மனதளவில் மகிழ்ச்சி யளிக்கக்கூடிய சூழலை அக்குடும்பம் உருவாக்கித் தந்தது.

கர்ப்பம் தரித்த ஏழாவது மாதத்தில் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்வு நடத்தப்பட்டு தாய் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள். ஒரு பெண்ணின் ஆசை, நிராசைகளை ஒரு தாய்தான் நன்கு அறிந்து வைத்திருப்பார் என்பதாலும், தாயிடமிருந்து தாய்மையைக் கற்றுக் கொள்வதற்காகவும்தான் தாய் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். மகிழ்ச்சிகரமான சூழலில் சுகப்பிரசவத்திலேயே குழந்தை பெற்றுக்கொண்டனர். இப்போது நாம் இயற்கை வாழ்வியலி லிருந்து முற்றிலுமாக விலகிப் போய்விட்டோம். முந்தைய தலைமுறைப் பெண்களிடம் உடல் உழைப்பு அதிகம் இருந்தது. அது இப்போது வெகுவாகக் குறைந்து விட்டது.

ஹார்மோன் உற்பத்திக்கும் உறுதியான எலும்புக்கும் பிரதானமாக இருப்பது வைட்டமின் டி. இதற்கு மூலக்கூறான சூரிய ஒளியை நகரங்களில் வாழும் கர்ப்பிணிகள் பலர் உள்வாங்குவதில்லை. ‘மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின் ஊறுபாடு இல்லை உயிர்க்கு’ என்ற குறளின் அடிப்படையில் நம் மண்ணுக்குப் பொருந்தாத மாறுபட்ட உணவு முறையும் இதற்கான காரணங்களில் ஒன்று. கார்பரேட் மருத்துவமனைகளின் வளர்ச்சியால், கருத்தரித்தல் முதல் பிரசவித்தல் வரை மருத்துவமனையை சார்ந்தே வாழ வேண்டிய நிலைமை இருப்பதால் கருத்தரித்தல் என்பது ஒரு நோயாக பார்க்கப்படக்கூடிய சூழல் நிலவுகிறது.

வலிக்கு பயந்தும் நல்ல நேரத்துக்காகவும் பல சிசேரியன்கள் நடைபெறுகின்றன. தனியார் மருத்துவமனைகள், சுகப்பிரசவத்தைக் காட்டிலும் சிசேரியனில்தான் அதிக வருவாய் கிடைக்கிறது என்கிற நோக்கோடு செய்வதும் உண்டு. நோய்த்தொற்று ஏற்பட்டிருத்தல், அதீத ரத்த அழுத்தம், சர்க்கரை உள்ளவர்கள், குறிப்பிட்ட நாட்களுக்கு முன்னரே பனிக்குடம் உடைந்து போதல், குழந்தையின் தலை திரும்பாதிருத்தல், கொடி சுற்றிக்கொள்ளுதல் போன்ற சூழ்நிலைகளில்தான் சிசேரியன் செய்யப்பட வேண்டும். இந்த அடிப்படையில் அணுகும்போது 90 சதவிகிதம் பேருக்கு சுகப்பிரசவத்துக்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. தேவையற்ற சிசேரியன் மூலம் பெண்ணின் உடல், மனம் இரண்டுமே பாதிப்புக்குள்ளாகின்றன. பருமன், இடுப்புவலி, மாதவிடாய் கோளாறுகள் வருவதோடு அறுவை சிகிச்சையில் பக்கவிளைவுகளும் ஏற்படும்” என்கிறார் டாக்டர் சரவணன்.201608151312036625 Possible natural childbirth SECVPF

Related posts

கர்ப்ப காலத்தில் ஏற்படும் மலச்சிக்கலுக்கான கை வைத்தியம்

nathan

பெண்கள் ஏன் சிசேரியன் பிரசவத்தை மேற்கொள்கிறார்கள் என்று தெரியுமா?

nathan

தூக்கம் வராமல் அவதிப்படும் கர்ப்பிணிகளுக்கு டிப்ஸ்

nathan

இரட்டைக் குழந்தையை சுமக்கும் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்

nathan

கர்ப்ப கால நீரிழிவு

nathan

பிரசவத்தினால் உண்டாகும் ஸ்ட்ரெச் மார்க்கை மறையச் செய்யும் மேங்கோ பட்டர் !!

nathan

கர்ப்பிணிகளுக்கு தண்டு கீரை பெஸ்ட்!

nathan

கர்ப்ப சோதனைக் கருவியைப்எப்போது பயன்படுத்துவது…?

nathan

கர்ப்பகாலத்தில் விமானப்பயணம் செய்யலாமா?

nathan