அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

பனிக்கால தொந்தரவுகளுக்கு துளசி!

Tulsi-27“துளசி, சந்தனம்… இன்னும் பல மூலிகைகள் அடங்கியது” என்று விளம்பரங்களில் பார்த்திருப்பீர்கள்… அழகுப் பொருட்களை உற்பத்தி செய்கிற நிறுவனங்களே சுவீகரித்துக் கொள்ளும் அளவுக்கு பல அழகு பலன்கள் நிரம்பியது துளசி!

முகத்திற்கு துளசி:

பற்களைத் தூய்மையாக்கி, பளிச்சிட வைப்பதில் துளசிக்கு பெரும் பங்கு உண்டு. சம்பா கோதுமையை வறுத்து அரைத்த பவுடர் ஒரு கப், துளசி பவுடர் – கால் கப், சர்க்கரை – கால் கப், பொடித்த பச்சைக் கற்பூரம் – 10 கிராம். இவற்றை தினமும் சேர்த்துக் கலந்து கொள்ளுங்கள்! இந்த பவுடரால் தினமும் பல் தேய்த்து வர, பல் கூச்சம், வாய் துர்நாற்றம், ஈறு வீக்கம் போன்றவை நீங்கி பற்கள் பளபளக்கும்.

பொதுவாக, குளிர்காலத்தில் பருக்கள் வராது. வந்தால் சீக்கிரத்தில் போகாது! இப்படி வரும் பருக்களை விரட்டியடிக்கிறது “துளசி பேக்”. சந்தனத்தூள், எலுமிச்சைச் சாறு, துளசிச் சாறு, வெட்டிவேர் பவுடர் தலா ஒரு டீஸ்பூன் எடுத்து, கலந்து, பருக்கள் மீது தடவி… ஐந்து நிமிடம் கழித்து கழுவுங்கள்! ஒரே வாரத்தில் பருக்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.

பனிக்காலத்தில் “மேக்கப்” போடும்போது, முகத்தில் நீர் கோர்த்துக் கொண்டு பொதபொதவென்று ஆகிவிடும். இதற்கும் தீர்வு இருக்கிறது.

10 துளசி இலையுடன், சுக்குப் பவுடர் 2 சிட்டிகை, லவங்கம் – 1. இவை மூன்றையும் நன்றாக அரைத்து, முகத்தில் தடவி கழுவுங்கள். பிறகு மேக்கப் போடுங்கள். இதனால், தோல் இறுக்கமாகும்.

கண்ணுக்குக் கீழே கருவளையம் தோன்றி கருமை படர்கிறதா? கவலையை விடுங்கள். துளசி இலையுடன், பத்து கிராம் வெள்ளரி விதை, சிறிது கஸ்தூரி மஞ்சள் கலந்து அரைத்து, கண்களைச் சுற்றிலும் பூசிக் கழுவுங்கள். தோல் மிருதுவாகி கருமை காணாமல் போய்விடும்.

கூந்தல் வறண்டு போய் வேதனை அளிக்கிறதா?

50 கிராம் துளசி இலை, 10 கிராம் மிளகு இவற்றை கால் கிலோ நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி வாரம் 2 முறை தலைக்குத் தேய்த்து, சீயக்காய் (அ) பயத்தமாவு போட்டு அலசுங்கள். கூந்தல் மிருதுவாகும். பொடுகும் வராது. புருவம், கண் இமைகளில் முடி இல்லாதவர்கள், இந்த எண்ணெயை அந்த இடங்களில் தடவினால், புசுபுசுவென முடி வளரும்.

பனிக்காலத்தில் ரொம்பவும் முடி கொட்டுமே…. என்ன செய்யலாம் என்கிறீர்களா?

தாமரை இலைச்சாறு, துளசிச் சாறு இரண்டையும் சம அளவு கலந்து, அடுப்பில் வைத்து, மிதமான தீயில் காய்ச்சி வடிகட்டுங்கள். இந்தச் சாற்றுடன் இரண்டு மடங்கு நல்லெண்ணெய் சேர்த்து அடுப்பில் வைத்துக் காய்ச்சுங்கள். இப்படி தயாரான எண்ணெயை தினமும் லேசாக சூடு செய்து, தலையில் தடவி வர, முடி கொட்டுவது முற்றிலும் நீங்குவதுடன் இளமைப் பிராயத்திலேயே ஏற்படுகிற வழுக்கையும் மறையும்.

தலை முடிக்கு நல்ல கண்டிஷனராகவும் இருக்கிறது துளசி. துளசி, செம்பருத்தி இலை இரண்டையும் சம அளவு எடுத்து, அதனுடன் சுத்தம் செய்த புங்கங்காய் தோல் – 4 கலந்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள். வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது, இந்த விழுதைத் தேய்த்து அலசுங்கள். கூந்தலுக்கு அருமையான கண்டிஷனர் இந்த சிகிச்சை.

கரடு முரடான சருமத்தை மிருதுவாக்குகிறது துளசி. பால் பவுடர், துளசி பவுடர் இரண்டும் தலா அரை டீஸ்பூன் எடுத்து இதனுடன் சந்தன பவுடர், கஸ்தூரி மஞ்சள் தலா கால் டீஸ்பூன் கலந்து கொள்ளுங்கள். இந்த பவுடருடன் பாலை சேர்த்து (வெயில் காலத்தில் தயிரை சேர்க்கவும்) நன்றாகக் குழைத்துக் கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை தினமும் முகம், கை, கால்களில் தேய்த்துக் குளிக்க… தோல் மிருதுவாகும். சருமத்துக்கு நல்ல நிறத்தையும் கொடுக்கும் இந்த பேஸ்ட்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button