“என் அம்மா எந்த நேரமும் எதையாவது பறிகொடுத்த மாதிரியே இருக்காங்க. எந்தக் குறையும் இல்லாமல் மரியாதையோடுதான் பார்த்துக்கிறேன். என்ன விஷயம்னு கேட்டாலும் சரியா பதில் சொல்றது இல்லை. என்ன செய்யறதுன்னே தெரியலை”
இந்த வசனத்தை உங்கள் அலுவலகத்திலோ, உறவிலோ கேட்டிருப்பீர்கள். ஏன் நீங்களேகூட சொல்லி இருப்பீர்கள். வேலைக்குச் செல்லும் ஆண், பெண் இருவருக்குமே இது பொருந்தும். இன்றைக்கு பெரும்பாலான வீடுகளில் இருக்கும் பிரச்னைதான் இது. பொருளாதார தேவைக்காக கணவன், மனைவி இருவருமே உலகமயமாக்கல் வாகனத்தில் பரபரப்புடன் பயணித்துக்கொண்டிருக்கிறோம். இதில், 60 வயதைத் தாண்டிய முதியவர்கள்… குறிப்பாக அம்மாக்கள், வீட்டின் அறிவிக்கப்படாத காவலாளிகளாக, நம் வீட்டின் உள்பக்க பூட்டுகளாக, பள்ளி முடிந்துவரும் நம் குழந்தைகளைக் கவனிக்கும் ஆயாக்களாக ஆகிவிட்டார்கள். வேலை முடிந்து அலுப்புடன் வரும் நமக்கு, அவர்களின் விட்டேத்தியான முகம், மேலும் அலுப்பையும் சலிப்பையும் உண்டாக்குகிறது. எரிச்சலுடன் நகர்ந்துவிடுகிறோம். ஆனால், சில நிமிடங்கள் ‘போகன்’ அரவிந்த்சாமியாக அந்த முதிய குழந்தைகளுக்குள் சென்றுவந்தால், அவர்களின் நியாயத்தைப் புரிந்துகொள்ளலாம். அந்தக் குழந்தைகளைக் குஷிப்படுத்த சின்னச் சின்னதாக சில வழிமுறைகளைப் பின்பற்றலாம்!
* காலையில் டிபன் செய்வதில் ஆரம்பித்து ஒவ்வொன்றுக்கும் அவர்களிடம் ஆலோசனை கேளுங்கள். ‘ஏதாவது செய்’ என்று அவர்கள் சலிப்புடன் சொன்னாலும், நீங்கள் முகத்தைத் திருப்பிவிடாமல் தொடர்ந்து கேளுங்கள். சில நாட்கள் அவர்களைப் பிரதான சமையல்காரராக்கி, நீங்கள் அவர்களுக்கு உதவியாளராக மாறுங்கள். இதில், குழந்தைகளையும் இணைத்துக்கொள்ளுங்கள். உதவி என்கிற பெயரில் குழந்தைகள் செய்யும் க்யூட்டான அசட்டுத்தனங்கள், அந்த இடத்தை கலகலப்பாக்கும்.
* பொருளாதார ரீதியாக நம்மைச் சார்ந்திருப்பதே, அவர்களை அதிகம் பாதிக்கிறது. வீட்டிலேயே இருந்து செய்யும் வகையிலான சிறிய கைத்தொழிலை உருவாக்கிக் கொடுங்கள். மருந்துக் கடைகளுக்கான காகிதப் பை, ஊறுகாய், வற்றல் தயாரிப்பு என எதுவாகவும் இருக்கலாம். வீட்டுக்கு அருகில் இருக்கும் தெரிந்த கடைகளில் கொடுத்து, மிகக் குறைந்த வருவாய் கிடைத்தாலும் போதும். நமக்குத்தான் அது சாதாரணம்; அவர்களுக்கு பெரும் பலம். ஓய்வு நேரத்தில் நீங்களும் அந்த வேலையில் உதவுங்கள். உங்களுக்கும் ஒரு ரிலாக்ஸாக இருக்கும்.
குழந்தை
* அவர்களது இளம் வயதில் அதிகம் சினிமா பார்த்தவராக இருந்திருக்கலாம். வயது காரணமாகவும், இன்றைய சினிமாக்கள் பிடிக்காததாலும் அதில் ஆர்வம் போய்விட்டிருக்கும். அவர்கள் பார்த்து ரசித்த படங்களின் டிவிடி-க்களை வாங்கிவந்து கொடுங்கள். சற்று நேரமாவது அவர்களோடு சேர்ந்து பார்த்து, அந்தப் படங்கள் வந்த நேரத்தில் நடந்த சுவாரஸ்யமான விஷயங்களைக் கேளுங்கள். அந்தப் படத்தில் வரும் நடிகர், நடிகைகள் உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருந்தாலும், அவர்கள் மூலமாக அப்போதுதான் கேள்விப்படுவது போலக் கேட்டுக்கொள்ளுங்கள்.
* வயதாகிவிட்டது, தனியாக அனுப்பினால் சமாளிப்பாரா என்றெல்லாம் ரொம்பவும் பயப்படாமல், சில இடங்களுக்குத் தனியாக அனுப்புங்கள். அவர் வயதுடைய அக்கம்பக்கம் அம்மாக்களோடு சேர்ந்து பிக்னிக், நிகழ்ச்சிகள் என வெளியே சென்று வரட்டும். திரும்பிய பிறகு, நடந்த விஷயங்களைப் பத்து நிமிடங்கள் ஒதுக்கிக் கேளுங்கள். நீங்கள் கேட்கப்போவது… அவர்கள் ஆட்டோக்காரரிடம் சாமர்த்தியமாகப் பேசியது, இடத்தைச் சரியாக கண்டுபிடித்தது என அவர்களின் திறமையை வெளிப்படுத்துவது போல இருக்க வேண்டும்.
* கோயில், உறவினர் நிகழ்ச்சிகள் என அவர்களுடன் செல்லும்போது, அந்த இடங்கள் பற்றி அவர்களுக்குத்தான் அதிகம் தெரியும் என்பது போல நிறைய சந்தேகங்களைக் கேளுங்கள். உதாரணமாக… ‘தேவர்கள் பார்க் கடலை கடைஞ்சப்போ’ என்றோ, ‘சைதாப்பேட்டையில முன்னாடி எல்லா வெளியூர் பஸ்ஸூம் வரும்’ என்றோ சொல்வதை, வியப்புடன் கேட்டுக்கொண்டு அவரை மேதாவி ஆக்குங்கள்.
* சின்ன வயதில் நீங்கள் செய்த அசட்டுத்தனங்கள், அம்மாவிடம் வாங்கிக் கட்டிக்கொண்ட விஷயங்கள், உங்களை அன்புடன் கவனித்துக்கொண்ட தருணங்கள் ஆகியவற்றை, உங்கள் குழந்தைகளிடம் சொல்லும் வாய்ப்பை அவர்களுக்கு ஏற்படுத்திக்கொடுங்கள்.
* இரவு நேரத்தில் அவர்களுடன் சேர்ந்து சாப்பிடுங்கள். அப்படிச் சாப்பிடும்போது இன்றைய பிரச்னைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, இனிமையான விஷயங்களைப் பேசுங்கள். அல்லது அவர்கள் குடும்ப தலைவியாக இருந்தபோது சந்தித்த சவால்களைப் பற்றி பேசுங்கள்.
மொத்தத்தில், நம் குழந்தைகளின் அறிவாற்றலை பாராட்டுவது, ரசிப்பது போல இந்த 60 வயது தாண்டிய குழந்தைகளின் அறிவாற்றலையும் சமயம் கிடைக்கும்போதெல்லாம் பாராட்டி ரசியுங்கள். எல்லோருக்குமே, தாங்கள் மற்றவர்களைவிட ஒரு படி மேலே என நினைப்பது பிடிக்கும். அந்த நினைப்பை எந்த ஈகோவும் இல்லாமல் அவர்களுக்குக் கொடுங்கள். நீங்கள் எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்தாலும், உங்களின் தாய் உங்களைவிட ஒரு படி மேலேதான்