கிராமப்புறங்களில் வாழும் இந்தியர்களில் 6.3 கோடி பேருக்கு சுத்தமான நீர் என்பது எட்டாக் கனியாகத்தான் இருக்கிறது என்று வாட்டர் எய்டு (WaterAid) என்ற அறிக்கை கூறுகிறது. நாளை உலக தண்ணீர் தினம் பின்பற்றப்பட உள்ள நிலையில் இந்த அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அரசின் போதிய திட்டமின்மை, அதிகரிக்கும் தேவை, பெருகும் மக்கள் தொகை மற்றும் தண்ணீர் அதிகம் கோரும் விவசாயம் போன்ற காரணங்களால் கிராமப்புற பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கை கூறுகிறது.
இந்த பற்றாக்குறை மற்றும் சுத்தமான தண்ணீர் கிடைக்காத காரணத்தால் காலரா, மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் பரவுவது அதிகரித்துள்ளது. மேலும், ஊட்டச்சத்துக் குறைபாடும் கூடியுள்ளது என்ற அந்த அறிக்கை விளக்குகிறது.
உலகின் மிக வேகமாக பொருளாதார நாடுகளில் ஒன்றான இந்தியா, அனைத்து மக்களுக்கும் தண்ணீர் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது கடினம்தான் என்று அந்த அறிக்கை எடுத்துக் கூறுகிறது.
உலக அளவில், 66.3 கோடி பேருக்கு சுத்தமான தண்ணீர் இல்லாமல் இருப்பதாகவும் அதில் 52.2 கோடி பேர் கிராமப்புற பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று அந்த அறிக்கை கூறுகிறது.