குழந்தை பிறந்து 5 மாதங்களுக்குப் பின் தாய்ப்பாலுக்கு அடுத்தப்படியாக கொடுக்கக்கூடிய உணவுப் பொருள் தான் செர்லாக். இத்தகைய செர்லாக் பவுடரை வீட்டிலேயே செய்யலாம் என்பது தெரியுமா? அதுவும் அவல் மற்றும் பொட்டுக்கடலை கொண்டு எளிய முறையில் செர்லாக் செய்யலாம்.
இங்கு வீட்டிலேயே எப்படி செர்லாக் போன்ற பவுடரை தயாரிப்பது என்று கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பவுடரை சுடுநீர் சேர்த்து கலந்து குழந்தைக்கு கொடுக்கலாம். இருப்பினும் எந்த ஒரு உணவுப் பொருளை குழந்தைக்கு கொடுக்கும் முன்னும், மருத்துவரிடம் கலந்தாலோசியுங்கள்.
தேவையான பொருட்கள்: அவல் – 1 கப் பொட்டுக்கடலை – 1/4 கப்
செய்முறை: முதலில் அவலை ஒரு வாணலியில் போட்டு, மிதமான தீயில் மொறுமொறுவென்று நல்ல நறுமணம் வரும் வரை வறுக்க வேண்டும். ஆனால் அவலின் நிறம் மாறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பின் அதனை இறக்கி ஒரு அகன்ற தட்டில் போட்டு குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு நன்கு மென்மையாக பொடி செய்து கொள்ள வேண்டும். பின்பு அதே வாணலியை மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் பொட்டுக்கடலை சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வறுத்து இறக்கி, குளிர வைக்கவும். பிறகு அதனையும் மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும். பின் இரண்டையும் ஒன்றாக சேர்த்து கலந்து, சல்லடைக் கொண்டு ஒருமுறை சலித்துக் கொண்டு, காற்றுப் புகாத டப்பாவில் போட்டு, தேவையான பொழுது பயன்படுத்தவும்.