வீட்டில் நாம் தூங்கும் முன்பு செய்ய வேண்டிய வேலைகள் என சில இருக்கின்றன. இவை நமது நாளைய காலை பொழுதை பரபரப்பு இன்றி துவக்க உதவும். பொதுவாகவே நாம், இரவு சாப்பிட்ட பாத்திரங்களை கழுவ மாட்டோம், மறுநாள் காலை எழுந்து கழுவிக் கொள்ளலாம் என்ற எண்ணம் இருக்கும்.
ஆனால், காலையில் எழுந்து இரவே கழுவி இருக்கலாம் என்ற எண்ணத்தோடு, குழந்தைகள் ஏதேனும் கேட்டால் கூட அவர்களை துட்டிக் கொண்டு, ரயில் இன்ஜின் புகைத்துக் கொண்டே ஓடுவது போல, நாமும் ஓடுவோம்.
இப்படி, காலை பொழுதிலேயே கடுப்புடன் துவக்குவதற்கு பதிலாக நீங்கள், இரவே செய்து முடிக்க வேண்டிய வேலைகள் சில இருக்கின்றன, அவற்றை பற்றி இனி காண்போம்….
பாத்திரங்கள் கழுவ வேண்டும்
சமைத்த பாத்திரங்களை இரவே நீங்கள் கழுவி வைத்துவிட வேண்டும். மற்றும் கழுவிய பாத்திரங்கள் தண்ணீர் இல்லாமல் துடைக்க வேண்டியதும் அவசியம் இல்லையெனில் நீங்கள் மறுநாள் காலை சமைக்கும் போது உணவோடு சேர்ந்து பாக்டீரியாக்களும் வெந்துக் கொண்டு இருக்கும். மற்றும் இது பாத்திரங்களில் வாடை இல்லாமல் இருக்க உதவும்.
ஸ்டவ்வை சுத்தம் செய்யுங்கள்
ஒவ்வொரு முறையும் சமைத்து முடித்தவுடனே ஸ்டவ்வை சுத்தம் செய்வதால், ஸ்டவ்வில் கரை படியாத படி பார்த்துக்கொள்ள முடியும். மற்றும் துடைக்கும் போது வினிகர் மற்றும் உப்பை வைத்து துடைத்தால் ஸ்டவ் புதிது போல காட்சியளிக்கும்.
கார்பெட்டை சுத்தம் செய்யுங்கள்
இரவு வீட்டை கூட்டும் போது, அப்போதே கார்பெட்டையும் சுத்தம் செய்துவிடுங்கள். பெரும்பாலும் அனைவரும் வாரம் ஓரிரு முறை தான் கார்பெட்டுகளை சுத்தம் செய்கிறார்கள். உண்மையில் வீட்டில் பரவயிருக்கும் தூசைவிட, கார்பெட்டில் அண்டியிருக்கும் தூசு தான் அதிகம், இதனால் தான் நிறைய தும்மல், சளி பிரச்சனைகள் ஏற்படுகிறது.
காலணிகளை அப்புறப் படுத்துங்கள்
மறக்காமல் சிதறிக்கிடக்கும் ஷூக்களை வீட்டின் வெளியில் சரியாக அடுக்கி வையுங்கள். காலை வேலைக்கு செல்லும் போது அவசர அவசரமாக பாலிஷ் செய்ய ஷூக்களை தேட வேண்டாம். இது, நீங்கள் காலை வேலைக்கு பரபரப்பு இல்லாமல் வேலைக்கு செல்ல உதவும்.
கழிவறை
இரவே கழிவறையை சுத்தம் செய்துவிடுங்கள். காலையில் எழுந்து கழிவறை கழுவுவது எல்லாம் உங்கள் நேரத்தை தின்றுவிடும், காலை வேலையை சரியாக செய்யவிடாது. மற்றும் காலையில் நிம்மதியாக காலைக்கடன் கழிக்க முடியாது. எனவே, இரவு தூங்கும் முன்னரே கழிவறையை சுத்தம் செய்துவிடுங்கள்.
படுக்கையை சுத்தம் செய்தல் மிக முக்கியமான ஒன்று, வீட்டை மொத்தம் சுத்தம் செய்துவிட்டு, உங்கள் படுக்கையை சுத்தம் செய்ய மறந்துவிட வேண்டாம். ஏனெனில், படுக்கையில் இருக்கும் தூசு தான், சுவாசிக்கும் போது உங்கள் உடலினுள் சென்று தேவையற்ற குடைச்சல்களை தருகின்றன.