பாத வெடிப்பு நிரந்தரமாய் போக்க முடியாது. அவ்வப்போது வரும். ஆனால் அதனை பராமரித்துக் கொண்டிருந்தால் எப்போதும் தடுக்கலாம். அதுவும் குளிர்காலத்தில் வறட்சியின் காரணமாக பாத வெடிப்பு இன்னும் அதிகமாகிவிடும்.
அதிக நேரம் நின்று கொண்டிருக்கக் கூடாது. இதனால் பாதம் அழுந்தப்பட்டு கொழுப்பு படிவங்கள் உடைந்து சரும பிளவை உண்டாக்கிவிடும். எப்போதும் வெடிப்பில்லாத அழகான கால்களை பெற இந்த குறிப்புகளை பயன்படுத்துங்கள்.
வெள்ளை வினிகர் : வெள்ளை வினிகரை வெதுவெதுப்பான நீரில் கலந்து, அந்நீரில் கால்களை 20-25 நிமிடங்கள் ஊற வையுங்கள். பின் ஃப்யூமிக் கல்லினால் தேய்த்து கழுவினால், இறந்த செல்கள் நீங்கி, வெடிப்புகள் மறைந்து குதிகால் மென்மையாக பட்டுப் போன்று இருக்கும்.
தயிர் : தயிரில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஈரப்பதம் குதிகால் வெடிப்பை விரைவில் போக்கும். அதற்கு தயிரை வெள்ளை வினிகருடன் சேர்த்து கலந்து, அதனை குதிகாலில் தடவி நன்கு ஊற வைத்து, பின் தேய்த்து கழுவ வேண்டும்.
ஷியா வெண்ணெய் : வெள்ளை வினிகருடன் சிறிது வெதுவெதுப்பான நீர் மற்றும் கொக்கோ அல்லது ஷியா வெண்ணெய் சேர்த்து கலந்து, அந்த கலவையினுள் குதிகாலை ஊற வைத்து பின் தேய்த்து கழுவ வேண்டும். இதனாலும் குதிகால் வெடிப்பு மறையும்.
ஆப்பிள் சைடர் வினிகர் : ஆப்பிள் சைடர் வினிகரை வெதுவெதுப்பான நீரில் கலந்து, அதனுள் கால்களை ஊற வைத்து, தேய்த்து கழுவ வேண்டும் இதனால் அதில் உள்ள கிருமிகள் தாக்கம் குறைந்து வெடிப்பு குறையும்.
ஆலிவ் எண்ணெய் : ஆலிவ் ஆயிலை வினிகருடன் சேர்த்து கலந்து, குதிகால்களை மசாஜ் செய்து, சிறிது நேரம் கழித்து, ஃப்யூமிக் கல்லைக் கொண்டு தேய்த்து கழுவினால் வெடிப்பு மறையும். வினிகர் இறந்த செல்களை நீக்கி, ஆலிவ் ஆயில் வறட்சியை நீக்கும்.
அரிசி மாவு : அரிசி மாவில், தேன், ஆலிவ் ஆயில் மற்றும் வினிகர் சேர்த்து பேஸ்ட் செய்து, அதனை வறட்சியடைந்த பாதங்களில் தடவி உலர வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி தவறாமல் செய்து வந்தால், பாதங்கள் மென்மையாக, வெடிப்பின்றி இருக்கும்.
விளக்கெண்ணெய் : விளக்கெண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் சம அளவு கலந்து அதில் சுண்ணாம்பு சிறிது மற்றும் மஞ்சள் கலந்து பாதத்தில் பூசி வந்தால் ஒரு வாரத்தில் பாத வெடிப்பு மறையும்.
சாக்ஸ் அணிந்து கொள்ளுங்கள் : வீடுகளில் குளிர்ந்த தரையில் பாதம் பட்டுக் கொண்டிருந்தால் வெடிப்பு இன்னும் அதிகப்படுத்தும். ஆகவே வீட்டில் சாக்ஸ் அணிந்து கொள்ளுங்கள்.