இன்று உலக அளவில் பிரபலமாகிவிட்டது, நம் பாரம்பர்ய ஆயுர்வேத எண்ணெய் சிகிச்சை. அந்தக் காலத்தில், குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை வாரத்துக்கு ஒரு முறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பார்கள். அதனாலேயே நோய்களை அண்டவிடாமல், மருந்து சாப்பிடாமல் நிம்மதியாக நகர்ந்தது அவர்கள் வாழ்க்கை. ஆனால், இந்தக் காலத்தில் பலரும் தலைக்கு எண்ணெய் தேய்ப்பதுகூட இல்லை. சிறு வயதிலேயே மூட்டுவலி தொடங்கி வரிசைகட்டுகின்றன நோய்கள்… குழந்தைப்பேறின்மை எனத் தொடர்கின்றன பிரச்னைகள். இவற்றுக்கெல்லாம் ஆயுர்வேத எண்ணெய் சிகிச்சை முறையில் அற்புதமான தீர்வுகள் கிடைக்கும் என்பதுதான் ஆச்சர்யமான உண்மை.
எண்ணெய்
எண்ணெய் சிகிச்சை என்றால் என்ன… அவற்றின் பலன்கள்.. எண்ணெய்க் குளியலின் அவசியம் என அத்தனையையும் விளக்கமாகப் பேசுகிறார் ஆயுர்வேத மருத்துவர் சவுரிராஜன்…ஆயுர்வேத மருத்துவர் சவுரிராஜன்.
எண்ணெய் சிகிச்சை என்றால் என்ன?
இயற்கையாகவே, நம் உடல் அமைப்பில் எண்ணெய்ப் பசை இருக்கும், இதைத்தான் `கொழுப்பு என்கிறோம். இந்தக் கொழுப்பு அல்லது எண்ணெய்ப் பசை, உடலின் இயக்கத்துக்கு முக்கியமாக, மூட்டுகளுக்கும், தசைகளுக்கும், நரம்புகளுக்கும் இன்றியமையாதது.
மனிதனின் எதிர்ப்புசக்தியின் அளவை இந்த எண்ணெயின் தன்மைதான் நிர்ணயிக்கிறது. உடலில் எண்ணெய்த் தன்மை குறையும்போது, எண்ணெய் அல்லது நெய்யால் வெளிப்புற சிகிச்சையாகவும், உட்புறச் சிகிச்சையாகவும் இந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது.. இதனை `ஸ்னேஹனம்’ (Snehana) என்பார்கள். வெளிப்புற சிகிச்சையான `ஸ்வேதனம்’ (மூலிகை நீராவிக் குளியல்) கொடுக்கும்போது, அதிகப் பயன் கிடைக்கும்.
ஆயுர்வேதத்தில் ஸ்னேஹனம், ஸ்வேதனம் இரண்டுமே `பூர்வகர்மா’ என்று அழைக்கப்படுகின்றன இதற்குப் பிறகு, பிரதான சிகிச்சையான பஞ்சகர்மாவைச் (ஐந்து வகையான சிகிச்சைகள்) செய்தால், எண்ணெய்த் தன்மை துரிதமாக நுண்ணிய செல்களைச் சென்றடையும்.
தொடர்ச்சியாக எண்ணெயால் உடல் முழுக்கத் தேய்க்கும்போது, உடலிலும் மூட்டுகளிலும் வழவழப்புத் தன்மை அதிகரிக்கும். இதனால், மூட்டுகளில் ஏற்படும் தேய்மானம் தவிர்க்கப்படும். உடலில் இருக்கும் எண்ணெய்த் தன்மை பராமரிக்கப்படும். எனவே, (ஆர்த்ரைட்டிஸ்) வயது சார்ந்த மூட்டு நோய்கள் மட்டும் அல்லாமல், எந்தவிதமான நோய்களும் நெருங்குவதற்கு 99 சதவிகிதம் வாய்ப்பில்லை.
எந்த நோய்களுக்கு சிகிச்சை?
உடலில் இருக்கும் மூன்று தோஷங்களும் (வாதம், பித்தம், கபம்) மாறுபட்டு இருக்கும்போது எண்ணெய் சிகிச்சை கொடுக்கலாம். குறிப்பாக, 80 வகையான வாத நோய்களுக்கு இந்தச் சிகிச்சை மிகவும் சிறந்தது. கழுத்துவலி (Cervical Spondylitis), இடுப்புவலி (Lumbar Spondylitis), முதுகுத்தண்டுவடத்தில் உள்ள வீக்கம் மற்றும் பிதுக்கம் உள்ள நோய்களுக்கு முகவாதம் (Facial Paralysis), சயாடிக்கா (இடுப்புப் பகுதியிலிருந்து கீழ் கால் வரை வலி பரவுதல் – Sciatica), முழங்கால் மூட்டுவலி, குதிகால்வலி, உடல் மரத்துப்போதல், தோள்பட்டை வலி (Frozen Shoulder), கை கால் விழுதல் (பக்கவாதம்), சர்வாங்க வாதம், நடுக்கம், தூக்கமின்மை, ரத்த அழுத்தம் (BP), முடிவளர்ச்சி பெற, குதிகால் வெடிப்பு, உள்ளங்கால், கை வெடிப்பு, சருமம் அழகு பெற எண்ணெய் சிகிச்சை சிறந்தது.
எண்ணெய் குளியல்
மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள், மலச்சிக்கல், கணுக்கால் பிடிப்பு, தசை இழுப்பு, நரம்புக் குடைச்சல், மலக்குடல் வெளிவருதல், முதுகுப்பிடிப்பு, விலாப்பிடிப்பு, தாடை வலி, குரல்வளை அடைப்பு, சுவையறியாமை, தலைவலி, நடுக்குவாதம், களைப்பு, மயக்கம், கொட்டாவி, ஆர்வமின்மை, வறட்சி, சொரசொரப்பு, உடல் கருமை நிறத்திலிருந்து செந்நிறமாக மாறுதல், மன அமைதியில்லாமல் இருத்தல் போன்ற நோய்களுக்கு இந்தச் சிகிச்சையைக் கொடுக்கலாம்.
பலன்கள் என்னென்ன?
உடல் வலிகள் தீரும். சிகிச்சைக்கு மூலிகை எண்ணெயைப் பயன்படுத்துவதால், முறிந்த எலும்புகள் விரைவில் கூடும். உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். ஆயுட்காலம் நீடிக்கும். தசைப் பிடிப்புகள் நீங்கி, தசைகள் உறுதிப்படும். தோல் பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். சுருக்கம் நீங்கும். தோல் பொலிவுபெறும். தோலின் கருமை குறைந்து, சீரான சருமமாக மாறும். முதுமையைத் தடுக்கும். ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். உடல் வெப்பத்தைச் சீராக்கும். உடல் மென்மையாகும். உடல் எரிச்சலைக் குறைக்கும். தாம்பத்திய உறவு மகிழ்ச்சி தரும். இந்தச் சிகிச்சையில், பல நோய்களுக்கும் பலவிதமான தைலங்கள் உள்ளன. ஒவ்வொரு நோய்க்கும் ஏற்ற தைலத்தைத் தேர்வுசெய்து, எண்ணெய்க் குளியலை முறைப்படி கற்றுத்தேர்ந்த மருத்துவர் அல்லது பயிற்சியாளர் செய்யும்போது நோய்கள் தீரும்.
எண்ணெய்
சாப்பிடவேண்டிய, தவிர்க்கவேண்டிய உணவுகள்…
இயற்கை கொடுத்த மூலிகைகள், பழங்கள், காய்கறிகள் அனைத்தையும் சாப்பிடலாம்.. ஆனால், யார் என்ன சாப்பிடலாம் என்பது, நோய்களின் தன்மையைப் பொறுத்து வேறுபடும்.
காலநிலையைக் கணக்கில்கொண்டும் உணவுகளைத் தேர்வுசெய்து உட்கொண்டால், நோய்களை எளிதாகத் தவிர்க்கலாம்..கோடைகாலத்தில் நீர்சத்துள்ள உணவுகளைச் சாப்பிட்டால், உடல் வெப்பத்தால் ஏற்படும் கட்டிகள், சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் போன்றவை வராமல் தடுக்கலாம். வெள்ளரிக்காய், தர்பூசணி, கிர்ணிப்பழம், நுங்கு போன்றவற்றை கோடையில் சாப்பிடுவது நல்லது.
மூலிகை மருத்துவத்தில், `சில காய்கறிகளை சேர்க்கக் கூடாது’ என்று சொல்வார்கள். அவை பாகற்காய், பூசணி, அகத்திக்கீரை போன்றவை. இவை, மருந்தின் வீரியத்தைக் குறைத்துவிடும் என்பதால், மூலிகை மருத்துவத்தில் தவிர்க்கப்படுகின்றன. இவற்றை மருந்து சாப்பிடும்போது மட்டும் தவிர்த்தால் போதும், நோய் குணமான பிறகு இவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம்.
காய்கறிகள், பழங்கள், மூலிகைகளில் தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் இருக்கின்றன; நம் உடலுக்குச் சக்தியைக் கொடுக்கின்றன. என்றாலும், சில நோய்கள் நம்மைத் தாக்கும்போது சிலவற்றைத் தவிர்ப்பதே நல்லது. உதாரணமாக, சிறுநீரகக் கற்கள் உருவாகிவிட்டால் தக்காளி, கீரை, பால் போன்றவற்றைத் தவிர்த்துவிட வேண்டும். ஏனென்றால், சிறுநீரகத்தில் படியும் கால்சியம் உப்புகள்தான் கற்களாக மாறுகின்றன. இவற்றைச் சாப்பிட்டால் கற்களின் அளவு அதிகரிக்கும். அதைத் தடுப்பதற்காகத்தான் ஆயுர்வேதத்தில் `பத்தியம்’ என்று கூறி இவற்றைத் தவிர்க்கச் சொல்கிறார்கள்.
கீரை பால்
சிறுநீரகத்தில் கற்கள் இருந்தால், வாழைத்தண்டை மாதத்துக்கு மூன்று முறை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். கற்கள் உடைந்து வெளிவந்துவிடும். வாழைத்தண்டு, முள்ளங்கி, கொள்ளு ஆகியவற்றைச் சாப்பிடுகிறவர்கள், சுத்தமான மற்றும் தேவையான அளவு தண்ணீர் குடிக்கிறவர்களுக்கு சிறுநீரகக் கற்கள் உருவாவதில்லை. சிறுநீரகக் கற்கள் இல்லை என்றால், சிறுநீர்ப் பாதை சுத்தமாகும். இவற்றை அடிக்கடியும் எடுத்துக்கொள்ளக் கூடாது. ‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.’
`தோல் தொடர்பான நோய்கள் இருப்பவர்கள் கத்திரிக்காய், மீன் போன்றவற்றைச் சாப்பிடக் கூடாது’ என்று சொல்வார்கள். ஏனென்றால், தோலில் நோய் இருக்கும்போது அரிப்பு அதிகமாக இருக்கும். மீன் மற்றும் கத்திரிக்காயில் ‘கரப்பான்’ என்று சொல்லக்கூடிய அரிப்புத்தன்மை அதிகமாக இருக்கும். இதனால், தோல்நோய்கள் குணமாகும் வரை இவற்றைச் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது. ஆனால், இதுவே இரும்புச்சத்து குறைவாக உள்ளவர்கள், கத்திரிக்காய் சாப்பிட்டால் மிகவும் நல்லது.
கொழுப்பு
உடலில் கொழுப்பு அதிகம் உள்ளவர்கள், அதிகக் கொழுப்பு சத்துடைய ஆட்டு இறைச்சி, முட்டையின் மஞ்சள் கரு, சமையல் எண்ணெய், முந்திரி மற்றும் பொரித்த உணவு வகைகளைத் தவிர்க்கலாம். இதனால், உடலில் கொழுப்புச்சத்து அதிகரிக்காமல் தடுக்கப்படும். `கொழுத்தவனுக்கு கொள்ளு கொடு; இளைத்தவனுக்கு எள்ளைக் கொடு’ என்று சொல்வார்கள். அதுபோல கொழுப்பு அதிகம் உள்ளவர்கள் கொள்ளு சுண்டல், கொள்ளு ரசம் மற்றும் உணவில் இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, புதினா போன்றவற்றைச் சேர்த்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு குறையும்.
ஆயில் மசாஜ்
ஆயில் மசாஜ்
அபியங்கம்: (ஆயில் மசாஜ்) மூலிகை எண்ணெயை மிதமாகச் சூடுசெய்த பிறகு, உடல் முழுவதும் 30 முதல் 40 நிமிடங்கள் வரை ஒரு நபரோ அல்லது இரண்டு நபரோ இரு பக்கமும் நின்றுகொண்டு ஒரே மாதிரியான அழுத்தத்துடனும் வேகத்துடனும் மசாஜ் செய்வது. இதை முறைப்படி பயிற்சி பெற்ற நிபுணர்கள், ஆயுர்வேத மருந்துவரின் மேற்பார்வையில் செய்வார்கள். நம்முடைய தசைகளுக்கும் மூட்டுகளுக்கும் ஏற்றாற்போலும், நோயாளியின் பலத்தைப் பொருத்தும், நோயின் பாதிப்பைக் கருத்தில்கொண்டும் ஏழு நாட்கள், 14 நாட்கள் மற்றும் 21 நாட்கள் தொடர்ச்சியாக சிகிச்சை செய்யப்படும். இதன்மூலம், உடலில் உள்ள பெரும்பாலான வாத, பித்த, கப நோய்கள் குணமாகும்.
ஏன் எண்ணெய்க் குளியல் அவசியம்?
வாரத்துக்கு ஒரு முறை எண்ணெய்க் குளியல் நல்லது. பெண்ணாக இருந்தால் வெள்ளிக்கிழமையிலும், ஆணாக இருந்தால் சனிக்கிழமையிலும் 100 மி.லி நல்லெண்ணெயையோ அல்லது தேங்காய் எண்ணெயையோ இளஞ்சூடு செய்து உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை தேய்க்கும்போது உடலில் உள்ள வாத தோஷம், பித்த தோஷம், கப தோஷம் சமநிலை அடையும். இதனால் உடல்களுக்கும், தசைகளுக்கும், நரம்பு மண்டலங்களுக்கும், மூட்டுகளுக்கும் எண்ணெய் சுரப்பு சரிவரக் கிடைக்கிறது. இதனால் உடல் இயக்கம் தடைபடாமல் நடக்கிறது. நோய் இல்லாமல் வாழ வழி கிடைக்கிறது.
நமது உடலில் தோல்தான் பிரதானமானது, பெரியது. இதைப் பாதுகாத்தாலே போதும்… நோய், நொடி இல்லாமல் வாழ முடியும். எண்ணெய் சிகிச்சை செய்வதால், உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இரு எலும்புகளுக்கு இடையே வழவழப்புத் தன்மை மேம்படும். இதனால் மூட்டுவலி வராமலும் தடுக்கலாம். சூரிய ஒளியில் உள்ள வைட்டமின் டி, தோல்களின் மூலமாக உடலில் உள்ள எலும்புகளுக்குக் கிடைப்பதால் எலும்புகள் உறுதியாகும்.
ஆரோக்கியம் காக்கலாம்
காரோ… பைக்கோ 2,000 கிலோ மீட்டர் ஓடிய பிறகு ஆயில் சர்வீஸ் செய்வது வழக்கம். அதன் மூலம், வண்டியின் இன்ஜின் பாதுகாக்கப்படும். அதேபோல எண்ணெய்க் குளியல் செய்யும்போது நம் உடலும், மூட்டுகளும், தசைகளும், நரம்பு மண்டலங்களும் பாதுகாக்கப்படும்.