மற்றவர்கள் போல நாமும் வாழ்வில் முன்னேற முடியும் என்ற எண்ணம் தோன்றும்போது யார் மீதும் நமக்கு பொறாமை ஏற்படாது. பொறாமைக்குணம் யாரையும் விட்டுவைப்பதில்லை.
பொறாமை என்ற தீய குணத்தை அழிப்போம்
மனிதர்களின் நிம்மதிக்கு வேட்டு வைக்கும் குணங்களில் குறிப்பிடத்தக்கது பொறாமை. இந்த பொறாமைக்குணம் யாரையும் விட்டுவைப்பதில்லை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினர் இடையேயும் இந்த பொறாமைக்குணம் இருப்பதைக் காணலாம். குழந்தைகளிடம் தங்களை அறியாமல் பொறாமைக்குணம் இருக்கும்.
பெரியவர்களிடம் அவர்கள் அறிந்தே இந்தக்குணம் காணப்படும். இந்தப்பொறாமைக்குணம் ஒருவரது வாழ்க்கையில் துன்பங்களையும், துயரங்களையும் தந்துவிடக்கூடும். எனவே அறிந்தும் அறியாமலும் இந்த பொறாமைக்குணம் நம்மை அணுகாமல் இருக்க புத்திசாலித்தனத்துடன் நடந்துகொள்ள வேண்டும்.
குழந்தைகளைப் பொருத்த அளவில் தங்களது சகோதர சகோதரிகள் மீது பொறாமைக்குணம் ஏற்படுவதுண்டு. அப்பா எப்போதும் அக்காவுக்குத்தான் அதிக செல்லம் கொடுக்கிறார். தம்பி கேட்டால் எல்லாவற்றையும் அம்மா கொடுக்கிறார். நான் கேட்டால் மட்டும் தர மறுக்கிறார் என்று சில குழந்தைகள் நினைக்கலாம். இதேபோன்ற எண்ணம் சிறுவயதிலும், வாலிப வயதிலும் வளர்ந்து பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணமாக அமைகிறது.
பாதுகாப்பு
பொறாமைக்குணத்தின் பாதிப்பில் இருந்து நம்மை பாதுகாப்பது எப்படி? என்பதை இங்கே நாம் காண்போம்:
1) பொறாமை என்பதன் பொருளை முழுவதும் உணர்ந்து கொள்ள வேண்டும். எந்த ஒரு விஷயத்திலும் போட்டி இருக்கலாம். ஆனால் பொறாமை இருக்க கூடாது. ஓட்டப்பந்தயம் நடக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதில் கலந்துகொண்டு நாம் முதலில் வந்து வெற்றி பெற வேண்டும் என்ற போட்டி மனப்பான்மை இருக்கலாம். ஆனால் அடுத்தவன் ஜெயிக்கக் கூடாது, அவனை எப்படியாவது தள்ளிவிட்டு நாம் முதலில் வரவேண்டும் என்ற பொறாமைக்குணம் மட்டும் இருக்கக் கூடாது. நமக்கு கிடைக்காத ஒரு பொருள் அடுத்தவருக்கு கிடைக்க கூடாது என்று நினைப்பதும் பொறாமையின் ஒரு வடிவம் தான்.
2) இதுபோன்ற சூழ்நிலைகளை நாம் கவனமாக கையாள வேண்டும். பொறாமைக்குணம் ஏன் ஏற்படுகிறது, எதனால் ஏற்படுகிறது என்பதை கவனிக்க வேண்டும். பொறாமையின் அடிப்படையைக் கண்டுபிடித்து அதை அகற்ற முன்வரவேண்டும். உடல் ரீதியாக, மனரீதியாக, உணர்வுப்பூர்வமாக அல்லது சமூக ரீதியாக எந்த நிலையிலும் நாம் யார் மீதும் பொறாமை கொள்ளக்கூடாது. ஏன்என்றால் இதனால் பெரிய பாதிப்புகள் தான் ஏற்படும்.
உதாரணமாக, ஒருவர் மீது நாம் பொறாமை கொண்டால் உடனே நமது உடலில் இந்த மாற்றங்கள் ஏற்படுகின்றன. அவை: இதயதுடிப்பு அதிகரிக்கும், வியர்வை அதிகமாக வெளியேறும், அதிர்ச்சியில் உடல் துடிக்கும், உடலில் உள்ள தசைகள் இறுக்கம் அடையும்.
ஒருவர் மீது நாம் பொறாமை கொள்ளும்போது உணர்வு ரீதியாக கீழ்க்கண்ட மாற்றங்கள் ஏற்படும். அவை: துக்கம், கோபம், மன அழுத்தம், அவநம்பிக்கை மற்றும் அழுகை.
ஒருவரிடம் பொறாமைக்குணம் அதிகரிக்கும் போது அவரது மனதில் கீழ்க்கண்ட மாற்றங்கள் ஏற்படும். அவை: ஏக்கம், அன்பு செலுத்த யாருமே இல்லை என்ற மன நெருக்கடி, புறக்கணிப்பு, அதீத பாசம், அல்லது அதீத வெறுப்பு, உறவுகள், நட்புகளை துண்டித்து வாழும் நிலை போன்றவை ஏற்படும்.
பொறாமை கொண்ட மனிதர்கள் சமூகரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் அவர்கள் தங்களது மனைவி, குழந்தைகள், குடும்பம், நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து விலகும் ஆபத்து இருக்கிறது. சில நேரங்களில் அவர்களது பொறாமைக்குணம் காரணமாக யாருமே அவர்களுடன் பழக விரும்புவதும் இல்லை.
வெற்றி கொள்வது எப்படி?
பொறாமைக்குணத்தில் இருந்து ஒருவர் தன்னைத்தானே பாதுகாத்து அதில் இருந்து வெற்றி கொள்வது எப்படி?
எந்த ஒரு நபரின் மீதோ அல்லது பொருளின் மீதோ பொறாமைக்குணம் தோன்றுமானால் உடனே அந்தக்குணத்தை – மனதில் இருந்து அகற்ற முன்வர வேண்டும். பொறாமை கொள்வதனால் ஏற்படும் சாதக, பாதகங்களை அலசி ஆராய்ந்து உணர்ந்துகொள்ள வேண்டும்.
பொறாமைக்குணம் தோன்றும் போது அப்போது உங்கள் மனதில் என்ன தோன்றுகிறது என்பதை ஒரு காகிதத்தில் உடனே எழுதுங்கள். சில மணி நேரம் கழித்து அந்த பட்டியலில் உள்ளவற்றை படித்துப் பாருங்கள். அப்போது தான் பொறாமைக்குணம் எந்த அளவுக்கு உங்கள் உள்ளத்தில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்பது தெரியவரும்.
ஒருவரின் மீது பொறாமை தோன்றுகிறது என்றால் அது ஏன் வருகிறது என்பதை சிந்தித்துப்பாருங்கள். அவர் மீது ஏற்பட்ட பயமா? அல்லது கோபமா? அல்லது அவர் போல முன்னேற முடியவில்லை, நடந்துகொள்ள முடியவில்லை என்ற ஆதங்கமா?… இதில் எதன் காரணமாக பொறாமைக்குணம் தோன்றியது என்பதை கண்டுபிடியுங்கள். அதை ஆராய்ந்து அறிந்து அகற்றுவதன் மூலம் உங்கள் மனதில் உள்ள பொறாமைக்குணத்தை அகற்றமுடியும்.
பெற்றோர் அல்லது குடும்பத்தில் உள்ளவர்கள் மீது பொறாமைக்குணம் தோன்றினால் அதை வெளிப்படுத்தாமல் சம்பந்தப்பட்டவர்களிடம் மனம் விட்டுப்பேசுங்கள். மனம் விட்டு பேசினாலே பெரும்பாலான பிரச்சினைகள் தீர்ந்துவிடும்.
பொறாமைக்குணம் உங்கள் மனதில் தோன்றும் போதெல்லாம் உங்கள் தன்னம்பிக்கை திறனை வளர்த்துக்கொள்ளுங்கள். மற்றவர்கள் போல நாமும் வாழ்வில் முன்னேற முடியும் என்ற எண்ணம் தோன்றும்போது யார் மீதும் நமக்கு பொறாமை ஏற்படாது.