23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
p15a
மருத்துவ குறிப்பு

தடுப்பூசிகள் – கம்ப்ளீட் கைடு

தடுப்பு மருந்துகளால் மனித இனம் பெற்ற நன்மை சொல்லில் அடங்காதவை. தடுப்பூசிகள் போடாதவர்கள் தற்போது மிகமிகக் குறைவு என்றாலும், இத்தனை ஆண்டுகளாக, விழிப்புஉணர்வு ஏற்படுத்தியும் தடுப்பூசி குறித்த தவறான கருத்துகள் சமூகத்தில் உலவவே செய்கின்றன. ‘வந்த பின் அவதிப்படுவதைவிட வருமுன் காப்பதே மேல்’ என்ற அடிப்படையிலேயே இந்தத் தடுப்பு மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. தடுப்பூசி பற்றிய பொதுவான சில நம்பிக்கைகளையும் உண்மையையும் பற்றிப் பார்ப்போம்.

நம்பிக்கை 1: ஆரோக்கியமான, சுகாதார சூழலே தொற்றுநோய்களைத் தடுத்துவிடும். இதனால், தடுப்பூசி போடுவது தேவையற்றது.

உண்மை 1: எவ்வளவு சுத்தமாக, சுகாதாரமாக இருக்கிறோமோ, அந்த அளவுக்கு தொற்றுநோய்கள் ஏற்படுதற்கான வாய்ப்பு குறைகிறது. ஆனால், முற்றிலுமாக வாய்ப்பு இல்லை என்று சொல்வதற்கு இல்லை. சில தொற்றுநோய்கள் மிக வேகமாக பரவிப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. ஏதாவது ஒரு சூழலில் தொற்றுநோய்க் கிருமி பரவி பாதிப்பை ஏற்படுத்தலாம். மேலும், தடுப்பூசி அளித்ததன் மூலமே, போலியோ, பெரியம்மை உள்ளிட்ட பல வியாதிகளை இல்லாமல் செய்திருக்கிறோம். தடுப்பூசி அளிக்கத் தவறினால், இந்த பாதிப்புகள் மீண்டும் ஏற்படலாம்.

நம்பிக்கை 2: தடுப்பூசிகள் மோசமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். மேலும் உயிரிழப்பைக்கூட ஏற்படுத்தலாம். இதன் பக்கவிளைவுகளைப் பற்றி இன்னும்கூட முழுமையாக அறிந்திருக்கவில்லை.

உண்மை 2: இது முற்றிலும் தவறான கருத்து. தடுப்பூசிகள் மிகவும் பாதுகாப்பானவை. பொதுவாக, தடுப்பூசி, மருந்துகள் பலதரப்பட்ட பரிசோதனைகளுக்குப் பின்னர்தான் பயன்பாட்டுக்கு வருகிறது. தடுப்பூசிகளால் பக்கவிளைவுகளே இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால், அவை மிகமிகச்சிறிய பாதிப்பு மற்றும் தற்காலிகமானது. மெல்லிய காய்ச்சல், வலி போன்றவை ஏற்படலாம். அதுவும் ஒரு சில நாட்களில் சரியாகிவிடும். தடுப்பூசி அளிக்காததால், நோய் ஏற்பட்டு, அதனால் வரக்கூடிய விளைவுகளுடன் ஒப்பிடுகையில், இது ஒன்றும் பெரியதே இல்லை.

உதாரணத்துக்கு, போலியோவை எடுத்துக்கொள்வோம். போலியோ பாதிப்பு வந்தால் கால்கள் பாதிக்கப்பட்டு நடக்க முடியாத நிலை ஏற்படும். சில நோய்கள் உயிரிழப்பைக்கூட ஏற்படுத்தும். அதற்கு தடுப்பூசி, மருந்து போட்டுக்கொள்வதன் மூலம் நோய் பாதிப்பில் இருந்து தப்ப முடியும்.

நம்பிக்கை 3: நம் நாட்டில்தான் போலியோவை ஒழித்தாகிவிட்டதே. இனிமேல் எதற்கு போலியோ சொட்டு மருந்து போட வேண்டும்? ஒழிக்கப்பட்ட நோய்களுக்கான தடுப்பூசிகளைப் போடுவது தேவையற்றது.

உண்மை 3: அம்மை, போலியோ வருவதை முற்றிலும் தடுத்தி நிறுத்திவிட்டாலும் கிருமிகள் இன்னும் இருக்கலாம். இவை, உலகில் ஏதாவது ஒரு பகுதியில் இருக்கலாம். சர்வசாதாரணமாக எல்லைகளைக் கடந்து நாட்டுக்குள் நுழைந்து பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு அதிகம். ஒருவர், உலகில் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்குப் பயணிப்பதை தடுக்க முடியாது. அவர், முறையான தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ளாதவர் என்றால், அவர் மூலம் கிருமி பரவும். இதைத் தவிர்க்க, ஒவ்வொருவரும் முறையான தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வது அவசியம்.

நம்பிக்கை 4: குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். எனவே, கூட்டு தடுப்பூசி அல்லது தடுப்பு மருந்துகளை போடுவதால் பாதிப்பு ஏற்படலாம்.

உண்மை 4: குழந்தையின் உடல், ஒவ்வொருநாளும் ஆயிரக்கணக்கான பாக்டீரியா, வைரஸ் கிருமிகளை எதிர்த்துக்கொண்டுதான் இருக்கிறது. இதனால், தடுப்பூசி போடுவதால் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும் என்று சொல்வதில் உண்மைஇல்லை. முத்தடுப்பு, பென்டாவேலன்ட் போன்ற ஒன்றுக்கும் மேற்பட்ட நோய்களை எதிர்க்கும் தடுப்பூசியைப் போடுவதால் பாதிப்பு வராது. டெட்டனஸ், கக்குவான் இருமல், போலியோ போன்ற பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்பு, உடல் உறுப்புக்கள் செயல்திறன் பாதிப்பு போன்றவை ஏற்படுவதைத் தவிர்க்க, மருத்துவர் பரிந்துரை அடிப்படையில், இந்த தடுப்பூசிகளைக் கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும்.

நம்பிக்கை 5: காய்ச்சல், சளி போன்ற உடல்நலக் குறைபாடுகள் இருக்கும்போது குழந்தைக்கு தடுப்பூசி அளிக்கக் கூடாது.

உண்மை 5: சாதாரணக் காய்ச்சல், சளி இருக்கும்போது தடுப்பூசி போடுவதால் பாதிப்பு ஏற்படும் என்தற்கு இதுவரை மருத்துவரீதியான ஆய்வுகள் இல்லை. நாம் நினைப்பதைவிட, நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் ஆற்றல் மிக்கது என்பதை மக்கள் உணர்வதே இல்லை. அதேநேரத்தில், அதிகக் காய்ச்சல், தீவிர காதுத் தொற்று என்று பாதிப்பு இருக்கும்போது மருத்துவரே தடுப்பூசியை இப்போது போட வேண்டாம் என்று தெரிவிப்பார்.

நம்பிக்கை 6: தடுப்பூசியில் பாதரசம், பதப்படுத்திகள் உள்ளன. எனவே, அவை ஆபத்தானவை.

உண்மை 6: சில தடுப்பூசிகளில் பாதரசம் உள்ளது என்பது உண்மைதான். ஆனால், இவை எவ்வித பாதிப்பும் அற்றவை. எனவே, பாதரசம் கலந்துள்ளது என அச்சப்படத் தேவை இல்லை. மேலும், இந்த வகை மெத்தல் பாதரசத்தை நம்முடைய உடலே மிக எளிதாக வெளியேற்றிவிடும். அதனால், உடலில் தேங்கி பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்று பயப்படத் தேவையில்லை.

நம்பிக்கை 7: தடுப்பூசிகள், கற்றல் குறைபாடு, ஆட்டிசம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

உண்மை 7: இது முற்றிலும் தவறான கருத்து. எம்.எம்.ஆர் தடுப்பூசிக்கும் ஆட்டிசத்துக்கும் உள்ள தொடர்பு பற்றி, பிரிட்டிஷ் மருத்துவக் குழு ஒன்று மேற்கொண்ட பரிசோதனையில், தடுப்பூசிகள் மூலம் உடலின் எதிர்ப்புத்தன்மையை அதிகரித்துக்கொள்ள முடியுமே தவிர, கற்றல் குறைபாடுகளோ ஆட்டிசம் போன்ற பாதிப்புகளோ ஏற்பட வாய்ப்பு இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

நம்பிக்கை 8: தடுப்பூசிகள் நோய்களை 100 சதவிகிதம் தடுப்பது இல்லை.

உண்மை 8: இது ஒருவரின் உடல்நிலையைப் பொறுத்து மாறுபடுகிறது. பொதுவாக, தடுப்பூசிகள் சிறப்பாகவே செயல்படுகின்றன. மிகச்சிலருக்கு மட்டுமே தடுப்பூசி போட்ட பிறகும் பாதிப்பு ஏற்படுகிறது. ஆனால், இது மிக குறைவானவர்களுக்கே நேர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. யாருக்குமே தடுப்பூசி அளிக்கவில்லை என்றால் ஏற்படக்கூடிய பாதிப்பு மிகமிக அதிகமாக இருக்கும். இந்த ஒரு காரணத்துக்காகத்தான் தடுப்பூசி அனைவருக்கும் அளிக்கப்படுகிறது.

டீன் ஏஜ் மற்றும் முதியவர்களுக்கான தடுப்பூசி!

குழந்தைகளுக்கு இரண்டு வயது முடிவதற்குள், முறைப்படி தரவேண்டிய தடுப்பூசிகளைப் போட்டுவிட்டால், அந்தக் குழந்தைக்கு 15 வகைப்பட்ட கடுமையான குழந்தைப்பருவ நோய்கள் ஏற்படுவது இல்லை. மேலும், குழந்தையின் வயதுக்கு ஏற்ற வளர்ச்சியும் சரியாக இருக்கும்.

குழந்தைகள் மட்டும் இன்றி இளைய வயதினரும் முதியோரும்கூட தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள வேண்டியது கட்டாயம் என்றும், ஆண், பெண் இருபாலரும் மஞ்சள் காமாலை தடுப்பூசிகளையும், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் சின்னம்மை, அக்கி அம்மை, நிமோனியா, டிப்தீரியா, ஃப்ளு, கக்குவான் இருமல், டெட்டனஸ் ஆகிய நோய்களுக்கான தடுப்பூசிகளையும் போட்டுக்கொள்ள வேண்டியது அவசியம் என்றும் ‘உலக சுகாதார நிறுவனம்’ கூறுகிறது.

பொதுவான அறிகுறிகள்!

தடுப்பூசி போட்ட உடனே சிலருக்கு முகம் அல்லது தோல் சிவத்தல், லேசான காய்ச்சல், சோர்வு, ஊசி போட்ட இடத்தில் வலி, பசியின்மை போன்ற அறிகுறிகள் ஏற்படும். இவை பக்கவிளைவுகள் கிடையாது. தடுப்பூசி உடலினுள் சென்று செயல்புரிவதால், சிலரது உடல் இதுபோன்ற அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது.p15a

Related posts

காதலிக்கும் பெண்கள் கடைப்பிடிக்க வேண்டியவை

nathan

30 வயதிற்கு மேல் உள்ள பெண்களுக்கு இந்த பரிசோதனைகள் அவசியம்

nathan

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சீரகம்

nathan

அதிகரிக்கும் தனிப்படுக்கை தம்பதிகள்

nathan

தாய்மார்கள் பிறந்த குழந்தையை எப்படி கையாள்வது?

nathan

பெண்களின் நோய்களை குணப்படுத்தும் கசகசா லேகியம்

nathan

கர்-ப்பத்தைத் தடுக்க நீண்ட கால க-ருத்தடை சாதனம்

nathan

தெரிஞ்சிக்கங்க…இரட்டை மாஸ்க் போடுறீங்களா? இதையெல்லாம் கண்டிப்பா செய்யாதீங்க

nathan

பெண்களே கேமராக்கள் உள்ளது எச்சரிக்கையாக இருங்கள்

nathan