பத்திரிகை உலகின் முதல் ரியாலிட்டி தொடர்
மூச்சுப் பயிற்சிகள் உடல் எடை குறைப்பிற்கு மிகவும் உதவும் என்பதால் என்ன எடை அழகே சீசன் 3 தோழிகளுக்கு பாடி ஃபோகஸ் உரிமையாளர் அம்பிகா சேகர், யோகா மாஸ்டர் முருகேஷ் மூலமாக மூச்சுப்பயிற்சி பயிற்றுவித்தார். மூச்சுப்பயிற்சி செய்வதற்கு முன், முதலில் சுவாசப் பாதையை சுத்தம் செய்ய வேண்டும். அதற்காக கபாலபாதி என்னும் முக்கிய க்ரியா பயிற்றுவிக்கப்பட்டது.
கபாலபாதி
பத்மாசனத்தில் நேராக முதுகுத்தண்டு வளையாமல் உட்காரவும். அடிவயிற்றுத் தசைகளைப் பயன்படுத்தி வேகமாக மூச்சை வெளியே விட வேண்டும். தொடர்ந்து இப்படி வெளிமூச்சு பயிற்சியை ஒரு நிமிடத்திற்கு குறைந்தது அறுபது முறை என்ற கணக்கில் செய்ய வேண்டும்.
பயன்கள்
இதைச் செய்வதால் ரத்தத்தில் உள்ள கார்பன்டை ஆக்ஸைடை வெளியேற்றுகிறது. மூளை செல்களைத் தூண்டி சுவாசப்பாதையை சுத்தம் செய்கிறது.
சந்திர அனுலோமம் : விலோமம்
வஜ்ஜிராசனத்தில் அமர்ந்து தலை, உடம்பு இரண்டும் ஒரே நேர்க்கோட்டில் அமையுமாறு நிமிர்ந்து உட்காரவும். வலது கை நாசிகா முத்திரையிலும், இடது கை ஆதி முத்திரையிலும் வைக்க வேண்டும். மூச்சை உள்ளிழுத்தலும் வெளிவிடலும் இடது நாசியின் மூலம் மட்டுமே நடைபெறுகிறது. வலது நாசி மூடப்பட்டே இருக்க வேண்டும். உள்சுவாசமும் வெளிசுவாசமும் ஒரே கால அளவினதாக இருபது நொடிகள் இருக்கட்டும். ஒரு முறை மூச்சை உள்ளிழுத்து பின் வெளிவிடுவது ஒரு சுற்றாகும். ஒருவர் 15-30 சுற்றுகள் செய்ய வேண்டும்.
சூர்யானுலோமம் : விலோமம்
இதில் மூச்சை உள்ளிழுத்தலும் வெளிவிடுதலும் வலது நாசியின் மூலம் மட்டுமே நடைபெறுகிறது. இடது நாசி மூடப்பட்டே இருக்க வேண்டும். இதுவும் உள்சுவாசமும், வெளிசுவாசமும் ஒரே கால அளவினதாக இருபது நொடிகள் இருக்க வேண்டும். இதையும் 15-30 சுற்றுகள் செய்ய வேண்டும்.
பயன்கள்
நாள் பட்ட ஜலதோஷம், இருமல், சைனஸ், மன இறுக்கம், தலைவலி, ஜீரணம் இவற்றை ஒழுங்கு செய்கிறது.
நாடி சுத்தி
பத்மாசனத்தில் நிமிர்ந்து அமரவும். இடது கை சின் முத்திரையிலும், வலது கை நாசிகா முத்திரையிலும் இருக்க வேண்டும். வலது பெருவிரலைக் கொண்டு வலது நாசியை அடைத்துக் ெகாண்டு மூச்சை மெதுவாக ஆழமாக எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் இடது நாசி வழியாக உள்ளிழுக்க வேண்டும். பின் வலது நாசியை விடுவித்து இடது நாசியை வலது கை சுண்டு விரலாலும் மோதிர விரலாலும் அடைக்கவும்.
வலது நாசியின் மூலம் மூச்சை வெளியேற்றவும். மீண்டும் வலது நாசியின் மூலம் மூச்சை உள்ளிழுக்கவும், பின் இடது நாசியின் மூலம் வெளியேற்றவும். இது ஒரு சுற்று நாடி சுத்தியாகும். இரு பக்கங்களிலும் மூச்சை உள்ளிழுத்தலும், வெளியிடலும் ஒரே கால அளவினதாக இருக்க வேண்டும். ஆரம்பத்தில் 9 சுற்றுகளாக ஆரம்பித்து பின் 30 சுற்றுகள் வரை செய்யலாம். அதிகாலை பிரம்ம முகூர்த்தம் இப்பயிற்சிகளுக்கு உகந்த நேரமாகும்.
பயன்கள்
ஒருவர் இதைத் ெதாடர்ந்து ஆறு மாதங்கள் பயிற்சி செய்வதால் நாடிகள் தூய்மையடைந்து உடலின் ஆதாரச் சக்கரங்கள் நன்கு இயக்கப்படுகிறது. இதனால் உடலின் அனைத்து உள்ளுறுப்புகளும் நன்கு இயங்கி கெட்டக் கொழுப்புகள் கரைந்து, உடல் எடை குறைவதற்கு மிகவும் உதவுகிறது.