நான் பிரசவத்துக்குப் பிறகு கால்சியம் மாத்திரைகள் எடுக்கத் தவறிவிட்டேன். இதனால் பாதிப்பு ஏதேனும் வருமா? பாதிப்பு இருந்தால் அதனைச் சரிசெய்ய என்ன வழி?
– தேவி, தேனி.
டாக்டர் பி.வசந்தாமணி, விழுப்புரம் மாவட்ட மருத்துவக் கல்லூரி முதல்வர் மற்றும் மகப்பேறு மருத்துவர்.
பிரசவத்துக்குப் பிறகு வரும் அடுத்த ஆறு மாதங்களுக்கு அனைத்துப் பெண்களும் தொடர்ச்சி யாகக் கால்சியம், இரும்புச் சத்து மாத்திரைகளை எடுத்துக்கொள்வது அவசியம். தவறினால் முதுகெலும்பு, கை எலும்பு, கால் எலும்புகளில் தேய்மானம் உருவாகும். இதுபோன்ற பிரச்சினைகள் நூறில் 10 பேருக்கு ஏற்படலாம். 40 வயதுக்கு மேல் வரும் மூட்டுவலிப் பிரச்சினைகள் உடனடியாக வந்துவிடும். இதன் காரணமாகத் தாய்ப்பால் தரும் தாய்மார்களின் குழந்தைகளுக்கும் போதிய கால்சியம், இரும்புச் சத்து கிடைக்காமல் போய்விடும். குழந்தை பெற்ற பின்பு அனைத்துப் பெண்களும் சத்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இதனால் குழந்தைகளுக்குத் தாயின் பால் மூலம் கால்சியம், இரும்புச் சத்துகள் கிடைக்கும். குழந்தைகளுக்கு இந்தச் சத்துகள் குறைவாக இருந்தால் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் அவர்களுக்கான வைட்டமின் டி3 மருந்துகள் தரலாம்.
மாத்திரைகளை எடுக்கத் தவறியவர்கள் இனியாவது கட்டாயம் கால்சியம், இரும்புச் சத்து மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும். மாத்திரைகள் மட்டும் இல்லாமல் காலை, மாலை நேரங்களில் பால் உட்கொள்ள வேண்டும். மட்டன் சூப் போன்றவையும் சாப்பிடலாம். இதனால் ஹீமோகுளோபின் அதிகரிக்கும்.