பலருக்கும் ஆரஞ்சு பழம் விருப்பமான ஒன்று. மேலும் இது வாழைப்பழத்தைப் போன்று, அனைவரும் வாங்கி சாப்பிடும் வகையில் விலை குறைவில் தான் இருக்கும். இப்பழம் பல்வேறு உடல்நல நன்மைகளை தன்னுள் கொண்டிருப்பதோடு, அழகு நன்மைகளையும் கொண்டுள்ளது.
இதற்கு அதில் உள்ள சக்தி வாய்ந்த வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் தான் காரணம். எனவே அடுத்த முறை ஆரஞ்சு பழம் சாப்பிட்டால், அதை சாப்பிடுவதோடு, சிறிது முகத்திற்கும் பயன்படுத்துங்கள். இதனால் ஒரே வாரத்தில் முகத்தின் பொலிவு அதிகரிக்கும்.
சரி, இப்போது அந்த ஆரஞ்சு பழத்தைக் கொண்டு எப்படியெல்லாம் ஃபேஸ் மாஸ்க் போடலாம் என்று பார்ப்போம்.
ஆரஞ்சு + தேன் + மஞ்சள்
1 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு சாற்றுடன், 1 டீஸ்பூன் தேன் மற்றும் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15-30 நிமிடம் கழித்து, நன்கு காய்ந்துவிட்டால், குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
இந்த மாஸ்க் பாதிக்கப்பட்ட சரும செல்களைப் புதுப்பித்து, சோர்வுடன் இருக்கும் சருமத்தை புத்துணர்ச்சியாக்கும்.
தயிர் + ஆரஞ்சு
ஆரஞ்சு பழத்தின் தோலை நன்கு வெயிலில் உலர்த்தி பொடி செய்து, 1 டீஸ்பூன் ஆரஞ்சு பொடியுடன், 1 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 30 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.
இந்த ஃபேஸ் பேக் சருமத்திற்கு ஊட்டச்சத்துக்களை வழங்கி, சருமத்தின் மென்மைத்தன்மையை அதிகரிக்கும்.
பால் + ஆரஞ்சு பவுடர்
1 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு பவுடருடன் தேவையான அளவு பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் பால் கொண்டு முகத்தைத் துடைத்துவிட்டு, பிறகு இந்த ஃபேஸ் மாஸ்க்கைப் போட வேண்டும். மாஸ்க் நன்கு காய்ந்த பின் நீர் பயன்படுத்தி மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும்.
இந்த மாஸ்க் சருமத்துளைகளில் உள்ள அழுக்குகளை வெளியேற்றி, பருக்களைப் போக்கி, சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையைப் போக்கும்.
ஆரஞ்சு பவுடர்+ சந்தனப் பவுடர் + ரோஸ் வாட்டர்
1 டீஸ்பூன் ஆரஞ்சு பவுடருடன், 1 டீஸ்பூன் சந்தனப் பவுடர் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
இந்த ஃபேஸ் மாஸ்க் ப்ளீச்சிங் செய்வது போன்ற தோற்றத்தைத் தரும். இதனால் சருமத்தின் நிறமும் மேம்பட்டு காணப்படும்
ஆரஞ்சு + வால்நட்ஸ் பவுடர் + ஓட்ஸ் பொடி
1 டீஸ்பூன் வால்நட்ஸ் பவுடருடன், 1 டீஸ்பூன் ஓட்ஸ் பொடி மற்றும் ஆரஞ்சு ஜூஸ் சேர்த்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீர் பயன்படுத்தி மென்மையாக ஸ்கரப் செய்து கழுவ வேண்டும்.
இந்த ஃபேஸ் மாஸ்க் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, சரும பொலிவை அதிகரித்துக் காட்டும்.
ஆரஞ்சு + மில்க் க்ரீம்
1 டீஸ்பூன் ஆரஞ்சு பொடியுடன், 2 டேபிள் ஸ்பூன் மில்க் க்ரீம் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
இந்த செயலால் சருமத்தில் உள்ள கொலாஜென் அளவு ஊக்குவிக்கப்பட்டு, சருமத்தின் நெகிழ்வுத்தன்மை அதிகரித்து, முதுமைக் கோடுகள் மற்றும் சுருக்கங்கள் ஏற்படுவது தடுக்கப்படும்.