பெண் குழந்தைகள் அம்மாவிடம் கற்றுக்கொள்ளும் பாடம்தான் அவர்களின் வாழ்க்கை முழுவதும் பின்தொடர்ந்து கொண்டிருக்கும். பெண் குழந்தைகளுக்கு கற்றுகொடுக்க வேண்டியதை பார்க்கலாம்.
காதலும்.. (இனக்)கவர்ச்சியும் – தெரிந்து கொள்வது எப்படி?
மழலை பருவத்தின்போது தங்கள் குழந்தைகளை வளர்ப்பதில் காட்டும் அக்கறையை, அவர்கள் வளர்ந்து ஆளாகும்போது காண்பிக்க பெரும்பாலான பெற்றோர் தவறி விடுகிறார்கள். சிறுவயதில் பெற்றோர் எத்தகைய பழக்க வழக்கங்களை சொல்லிக்கொடுக்கிறார்களோ அவைகள்தான் அவர்கள் பெரியவர்களாகும்போது அவர்கள் நடத்தையில் வெளிப்படும். அதிலும் பெண் குழந்தைகள் அம்மாவிடம் கற்றுக்கொள்ளும் பாடம்தான் அவர்களின் வாழ்க்கை முழுவதும் பின்தொடர்ந்து கொண்டிருக்கும். ஆகவே பெண் குழந்தைகளுக்கு முக்கிய விஷயங்களை அவசியம் கற்றுக்கொடுக்க வேண்டும்.
* கூட்டு குடும்ப வாழ்க்கை சிதைந்து போனது குழந்தை வளர்ப்பில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. தாத்தா-பாட்டியின் நேரடி கண்காணிப்பில் வளரும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து போய்விட்டது. பெற்றோரே குழந்தைகளுடன் செலவிடும் நேரம் குறைந்து கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளும் தங்கள் உறவினர்களிடம் செலவிடும் நேரமும் சுருங்கி போய்விட்டது. ஆகையால் உறவினர் களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், அவர்களுடன் எப்படி விட்டுக்கொடுத்து வாழ வேண்டும்? பெரியவர்கள், ஆசிரியர்கள், வெளிநபர்களிடம் எப்படி பேச வேண்டும்? அவர்களுக்கு எத்தகைய மரியாதை கொடுக்க வேண்டும் என்பதை சொல்லிக்கொடுக்க வேண்டியது அவசியம்.
* பிள்ளைகளின் நடத்தையில் தவறு இருந்தால் பக்குவமாக பேசி தவறை புரிய வைக்க வேண்டும். நற்குணங்கள், நற்சிந்தனைகளை அவர்கள் மனதில் விதைக்கும் விதத்தில் பெற்றோர் செயல்பட வேண்டும்.
* பெண் பிள்ளைகளுக்கு தங்கள் உடலைப் பற்றி எழும் சந்தேகங்களை தெளிவுப்படுத்த வேண்டும். அந்தந்த வயதில் அவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை அவசியம் சொல்லிக்கொடுக்க வேண்டும். அதிலும் டீன் ஏஜ் வயதில் பாலியல் சம்பந்தமான புரிதல்களையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும். அதைவிடுத்து ரகசியம் காக்க முற்படுவது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்திவிடும். அவர்களாகவே தெரிந்து கொள்ள முயற்சிக்கும்போது தவறுகள் நிகழ்ந்துவிடக்கூடும். தாயார் வெளிப்படையாக பேசி சந்தேகங்களை தெளிவுபடுத்தும்போது பிள்ளைகள் தெளிவாகி, சரியான பாதைக்கு செல்லும்.
* பருவ வயதில் வரும் இனக்கவர்ச்சி, காதல் சார்ந்த தவறான புரிதலாக மாறுவதற்கு இடம் கொடுத்துவிடக்கூடாது. பருவ வயதில் தோன்றும் காதல் எத்தகைய எதிர்மறை சிந்தனைகளை விதைக்கும், அதனால் படிப்பு எந்த அளவுக்கு பாதிப்புக்குள்ளாகும் என்பதை எடுத்துரைக்க வேண்டும்.
* காதல் என்பது எல்லா உயிர்களிடத்திலும் வியாபித்து இருக்கிறது என்பதை புரிய வைக்க வேண்டும். பதின்ம வயதில் தோன்றும் இனக்கவர்ச்சிக்கும், உண்மையான, முதிர்ச்சியான காதலுக்கும் உள்ள வேறுபாட்டை தெளிவுபடுத்த வேண்டும்.
* பிள்ளைகளின் கலை ஆற்றலையும், தனித்திறமைகளையும் ஊக்கப்படுத்த வேண்டும். அதில் சரியான வழியில் பயணிக்க உற்சாகப்படுத்த வேண்டும்.
* ஆண் பிள்ளைக்கும், பெண் பிள்ளைக்கும் இடையே பாகுபாடு காண்பிக்க கூடாது. வீட்டில் இருவரிடமும் வெவ்வேறுவிதமான அணுகுமுறையையும், கண்டிப்பையும் காட்டுவது தவறு. ஆணுக்கு இணையாக பெண்களும் சம உரிமை பெற்றவர்கள் என்பதை வீட்டிலேயே நிலைநாட்ட வேண்டும். பெண்மைக்கான சுயமரியாதையை எப்படி பெற வேண்டும், அதனை எப்படி தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதை கற்றுக் கொடுக்க வேண்டும்.
* தேவையற்ற செயல்கள் எவை, அவைகளை எப்படி தவிர்க்க வேண்டும் என்பதை சொல்லிக்கொடுக்க வேண்டும்.
* உறவுகளை சார்ந்திருந்து அவர்களின் இன்ப, துன்பங்களில் பங்கெடுக்கும் எண்ணத்தையும் உருவாக்க வேண்டும்.