27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
swine flu chekup 18547
மருத்துவ குறிப்பு

பரவும் பன்றிக்காய்ச்சல்… தொடரும் பதற்றம்… தீர்வு என்ன?

பன்றிக் காய்ச்சல் மீண்டும் தமிழகத்தில் வேகமாகப் பரவி வருவது பொதுமக்களிடம் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சட்டப்பேரவைக் கூட்டத்திலும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு உள்ளது. இந்தச் சூழ்நிலையில் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர் வேலூர், சேலம், திருத்தணி எனப் பல்வேறு பகுதிகளில் பன்றிக்காய்ச்சல் நோய் தாக்கிய நிலையில் நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். இதில் திருவள்ளூரில் ஒரு பெண் உட்பட தமிழகம் முழுதும் இதுவரை 4 பேர் பலியாகி உள்ளனர்.

பன்றிக்காய்ச்சல்

இந்த நிலையில்,சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில்,"தமிழக மக்கள் பன்றிக்காய்ச்சல் நோய் குறித்து பீதி அடையத் தேவை இல்லை. பன்றிக்காய்ச்சலைக் குணமாக்கும் ‘டேமி ப்ளூ’ மாத்திரைகள் போதிய அளவுக்கு மருத்துவமனைகளில் கைவசம் உள்ளன. 10 லட்சம் மாத்திரைகள் இருப்பில் உள்ளன. மேலும், ஏழு முக்கிய அரசு மருத்துவமனைகள் மற்றும் 14 தனியார் மருத்துவமனைகள் என்று 21 இடங்களில் பன்றிக்காய்ச்சல் குறித்து சோதனை செய்ய ஆய்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிகிச்சையளிக்கத் தேவையான வென்டிலேட்டர் கருவிகளும் தயார் நிலையில் உள்ளன. எனவே, காய்ச்சல் மற்றும் இருமல் ஏழு நாட்களுக்கும் மேலாகத் தொடர்ந்து இருந்தால் உடனடியாக அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சைப் பெற்றுக்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

சேலம் அம்மாப்பேட்டையில் ஒன்றரை வயது ஆண் குழந்தை, பன்றிக்காய்ச்சல் தாக்குதலுக்குப் பலியாகியுள்ளது. அந்தப் பகுதியில் பதற்றத்தை உண்டாக்கியுள்ளது. அதேபோல வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் இரண்டு பெண்கள் பன்றிக்காய்ச்சலால் இறந்ததாகத் தகவல் வந்துள்ளது. மேலும், அந்தப் பகுதியில் 25க்கும் மேற்பட்டவர்கள் பன்றிக்காய்ச்சல் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர் என்று கண்டறியப்பட்டு தீவிர சிகிச்சையில் இருக்கிறார்கள்.

பன்றிக்காய்ச்சல்

சென்னை தரமணி, வேளச்சேரி, தண்டையார்பேட்டை உள்ளிட்ட சில பகுதிகளில் பன்றிக்காய்ச்சல் தாக்குதல் உள்ளதாக அந்தப் பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர். இது, தொடர்பாக நம்மிடம் பேசிய தரமணி பகுதியைச் சேர்ந்த சிவகுமார் கூறுகையில்,"கடந்த 10-15 நாட்களாகவே எங்கள் பகுதியில் காய்ச்சல் பரவி உள்ளது. சளி, இருமல் திடீர் காய்ச்சல் என்று பலர் மருத்துவமனைகளில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். இது, பெரும்அளவில் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது" என்கிறார்.

இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் கேட்டோம். "பொதுவாக, கடந்த 2009-ம் வருடம்தான் பன்றிக்காய்ச்சல் ஒரு கொள்ளை நோயாகப் பரவத் தொடங்கியது. அரசு அப்போது முதலே தீவிர நடவடிக்கைகள் எடுத்து, இதைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. இப்போது இது ஒரு பருவகால நோயாக, குறிப்பிட்ட சீதோஷணத்தில் தோன்றுவதாக உள்ளது. சுகாதாரமின்மைதான் இது பரவ முக்கியக் காரணம். ஆனால், மக்கள் இது குறித்து அச்சப்பட வேண்டாம். பன்றிக்காய்ச்சல் குணப்படுத்தக்கூடியதே. மேலும், அரசிடம் இதை எதிர்கொள்வதற்குத் தேவையான மருந்துகள் உள்ளன" என்றார்.

பன்றிக்காய்ச்சல் தொற்று வராமல் தடுக்க என்ன செய்யவேண்டும்?

‘வருமுன் காப்போம்’ என்பதற்கு ஏற்ப பன்றிக் காய்ச்சல் நோய்த்தொற்று வராமல் நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். இதுகுறித்து டாக்டர் ரவீந்திரநாத்திடம் கேட்டோம். அவர் கூறுகையில், "அரசு சார்பில் முதல் வேலையாகத் தடுப்பூசி போடுவதைத் தீவிரமாகத் தொடங்கி நடத்த வேண்டும். அதன் முதல்கட்டமாக எந்தப் பகுதியில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு உள்ளதோ அங்கு தடுப்பூசி போடும் பணியை முடுக்கிவிட வேண்டும். அதன் தொடர்ச்சியாகப் பொதுமக்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் பணிகளை அரசு மேற்கொள்ள வேண்டும். பொது இடத்தில் சளி, எச்சில் துப்புதல் செய்தல் கூடாது, சுத்தமான ஆடைகளை அணிய வேண்டும் என்பன போன்ற விழிப்பு உணர்வு நடவடிக்கைகளை மக்களும் மேற்கொள்ளவேண்டும். ஏனெனில், மக்கள் கூட்டம் அதிகம் உள்ள பொது இடங்களில் இருமல், தும்மல் மூலம் பன்றிக் காய்ச்சல் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது" என்றார்.

பன்றிக்காய்ச்சல் தொற்று வராமல் தடுக்க வழிமுறை

மேலும் அவர் கூறுகையில்,"ஆண்டுதோறும் இது போன்ற பனி சீசனில் பன்றிக்காய்ச்சல் பீதி பரவி வருகிறது. உயிரிழப்பும் நடக்கிறது. இதனைத் தவிர்க்க தமிழக அரசு முன்வர வேண்டும். சுகாதாரத்துறையில் ஊழியர்கள் அதிகம் நியமிக்கப்பட வேண்டும். அரசு சார்பில் நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டும். முறையான மருத்துவ வசதிகள் மேம்பாடு மிகவும் அவசியம்" என்றும் தெரிவித்தார்.swine flu chekup 18547

Related posts

ஒரு மணிநேரம் பற்களை அலுமினியத்தாள் கொண்டு மூடினால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

கருப்பை நீர்கர்ட்டி, மாதவிடாய் பிரச்சனையை சரிசெய்யும் பத்த கோணாசனம்

nathan

கோபப்படறவங்களுக்கு இந்த ஒரு பழம் கொடுத்தா போதும். அப்டியே கூலாகிடுவாங்க தெரியுமா!

nathan

இரும்புச்சத்து அதிகமானால் என்ன ஆகும் தெரியுமா..?

nathan

மூட்டு வலிக்கு உடனடி நிவாரணம் – A home remedy for joint pain

nathan

மருத்துவர் கூறும் தகவல்கள்! பிரசவத்திற்குப் பின் பெண்களுக்கு 4 வாரம் வரை இரத்தப்போக்கு இருக்குமா?

nathan

மாதக்கடைசியில் பணம் இல்லாமல் அவதியா? இதோ ஐடியா

nathan

தெரிஞ்சிக்கங்க…மாரடைப்பை ஏற்படுத்தும் இரத்தத்தில் இருக்கும் கொழுப்பை இயற்கையாக கரைக்கலாம்!

nathan

தெரிஞ்சிக்கங்க…வைட்டமின்-D குறைபாட்டிற்கான பொதுவான காரணங்கள் யாவை?

nathan