சில வேளைகளில் குழந்தைகள் தன் வயதில் தெரிந்து கொள்ள தேவையில்லாத விஷயங்கள் பலவற்றை தெரிந்து கொள்கிறார்கள். அவற்றை தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.
குழந்தைகள் தவறான விஷயங்களை கற்றுக்கொள்வதை தடுப்பது எப்படி?
குழந்தைகளுக்கு உலக அறிவை புகட்ட வேண்டியது பெற்றோர்களின் கடமையாகும். இப்பரந்த உலகை காணும் வண்ணம் குழந்தைகளுக்கு அறிவுக் கதவுகள் அனைத்தையும் திறந்து விட வேண்டும். அப்போதுதான் பிற்காலத்தில் குழந்தைகளால் பெற்றோர் துணையின்றி தனித்து இயங்க முடியும். ஆனால் சில வேளைகளில் குழந்தைகள் தன் வயதில் தெரிந்து கொள்ள தேவையில்லாத விஷயங்கள் பலவற்றை தெரிந்து கொள்கிறார்கள். வன்முறை உணர்வுகள், பாலியல் விஷயங்கள், தவறான நடத்தைகள், கொலை, கொள்ளை, கடத்தல் என பலவற்றை உதாரணமாகக் கூறலாம். தற்போது அடைந்துள்ள அறிவியல், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியினால் மிக எளிதாக குழந்தைகள் இவற்றை தெரிந்து கொள்கிறார்கள்.
இது போன்ற எதிர்மறை விளைவுகள் எதுவுமின்றி சரியான அறிவு வளர்ச்சிக்கு வித்திடுவது பெற்றோரின் கையில் தான் இருக்கிறது. பெற்றோர்கள் தங்கள் உள்ளுணர்வின் ஆசைகலை கட்டுப்படுத்தவும், தள்ளிப் போட்டு சிறிது நேரத்திற்கு பிறகு தீர்த்துக்கொள்ளவும் கற்றுக்கொள்ள வேண்டும். உதாரணமாக உறவினர் ஒருவரைப் பற்றி மிகக் கோபமாக பெற்றோர் விவாதிக்கும் போது குழந்தைகள் அருகில் இருந்து கவனித்தால் அவ்வுறவினர் மீது அவர்களும் குரோதத்தை வளர்த்துக்கொள்வார்கள். எனவே குழந்தைகள் அருகில் இருந்தால் சற்று நேரம் கழித்து அவர்கள் இல்லாத போது உறவினர் பற்றி பேசிக் கொள்ளலாம்.
குழந்தைகள் இருக்கும் போது தொலைக்காட்சி பார்க்கும் பெரியவர்கள் தேர்ந்தெடுத்த நல்ல நிகழ்ச்சிகளை ஓடவிட்டு அறிவை விருத்தியாக்கலாம். நாளிதழ்கள், மாத, வாராந்திர பத்திரிக்கைகளை தரமான, அறிவு வளர்ச்சிக்கு உதவக்கூடியவற்றை தேர்ந்தெடுத்து வாங்கி வீட்டில் போட வேண்டும். மழை காலத்துக்கு குடை; வெயில் காலத்திற்கு வெள்ளை சட்டை என சூழ்நிலைக்கேற்ப மாற்றி பயன்படுத்துவது போல் மேற்சொன்ன யாவற்றையும் குழந்தைகளின் அந்தந்த வயதுக்கேற்ப பொருத்தமானவைகளாக தேர்ந்தெடுத்து அறிமுகப்படுத்த வேண்டும்.