29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
shutterstock 339676661 16570
மருத்துவ குறிப்பு

தலைவலி, உடல்வலிக்கு மாத்திரை சாப்பிடுபவர்கள் கவனிக்க!

மெடிக்கல் ஷாப்பில் போய் நின்று, `தலைவலி, உடல்வலி… மாத்திரை ஏதாவது கொடுங்க’ என்கிறார் கிராமத்துப் பெண்மணி ஒருவர்; `ஃபீவரிஷ்ஷா இருக்கு… பேரசிட்டமால் ஒண்ணு குடுங்களேன்’ என்கிறார் படித்த இளைஞர் ஒருவர். இந்த விஷயத்தில் இருவருக்கும் வித்தியாசம் எதுவும் இல்லை. நோய், உடல்நலக் குறைபாடு எதுவாக இருந்தாலும், மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எந்த மருந்தையும் சாப்பிடக் கூடாது. இது அலோபதி தொடங்கி இயற்கை வைத்தியம் வரை அத்தனைக்கும் பொருந்தும். சிலர், மருந்துக்கடையில் வேறு யாருக்காவது மாத்திரை, மருந்து வாங்குவார்கள். `முதுகுல வலி’ என்பார்கள். மருந்துக்கடைக்காரருக்கு, அந்த மருந்தைச் சாப்பிடப்போவது ஆணா, பெண்ணா, குழந்தையா, எத்தனை வயது என்று எதுவும் தெரியாது. ஆனாலும் மருந்தைக் கொடுத்துவிடுவார். அதனால் ஏற்படும் பக்கவிளைவுகளுக்கு அவர் பொறுப்பாக மாட்டார். பல நாடுகளில் டாக்டரின் மருந்துச்சீட்டு இல்லாமல் எந்த மருந்தையும் வாங்க முடியாது. தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டால் வாகனம் ஓட்டக் கூடாது. மீறி ஓட்டினால் அபராதம் விதிக்கிறார்கள் சில நாடுகளில்! ஆனால், இந்தியாவில் இப்படி எந்தக் கட்டுப்பாடும் இல்லாததே மருந்துக்கடைகளில் தானாக மருந்து வாங்கிச் சாப்பிடும் கூட்டம் அதிகரிப்பதற்கான காரணம்.

மாத்திரை

ஒரு காலத்தில், `பாட்டி வைத்தியம்’ என ஒரு வழக்கம் இருந்தது. `குழந்தை சாப்பிட மாட்டேனு அடம் பிடிக்குது’ என வந்து நிற்பார் தாய். அந்த வீட்டில் உள்ள பெண்மணி, `மாந்தமா இருக்கும்’ என்று சொல்லி, கைவைத்தியம் ஒன்றைப் பரிந்துரைப்பார். மாலைக்குள் குழந்தை அம்மா உருட்டிக்கொடுக்கும் கவளச் சோற்றை ஆசை ஆசையாகச் சாப்பிட ஆரம்பித்துவிடும். அந்த பாட்டி வைத்தியம்கூட தங்கள் அனுபவத்தில் கண்ட வைத்தியத்தை யாரோ யாருக்கோ சொல்லி, செவிவழியாகக் கற்றவைதான். ஆனாலும், அது சிறுசிறு உடல் பிரச்னைகளுக்கு தீர்வு தந்தது. பாட்டி வைத்தியம் வழக்கொழிந்து போனாலும், இன்றைக்கு வீட்டுக்கு ஒரு டாக்டர் இருக்கிறார் என்று அடித்தே சொல்லலாம். அதாவது, சின்னத் தீக்காயம் தொடங்கி, இதய நோய் வரைக்கும் ஆலோசனை சொல்பவர்கள்! இவர்கள் தங்கள் ஆலோசனைக்கு ஆதாரமாக வைத்திருப்பவை… சில மருத்துவப் புத்தகங்கள்; வார, மாத இதழ்களில் வெளியான மருத்துவத் துணுக்குச் செய்திகள்; யாரோ சொல்லிக் கேட்ட சிகிச்சை முறைகள்… முக்கியமாக கூகுள் தேடல்!

`டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு…!’ எனச் சொல்லிக்கொண்டு இணையத்தில் மேய்ந்து, பித்தப்பை கற்களுக்கான உணவுகளில் இருந்து, கேன்சருக்கான கீமோதெரப்பி வரை புள்ளிவிவரங்களை சேகரித்து வைத்திருப்பார்கள். பித்தப்பைக் கல்லா, சிறுநீரகக் கல்லா என்பது தெரியாமலேயே `கல்லுக்கு வாழைத்தண்டு கண்கண்ட மருந்துப்பா…’ என ஆலோசனை சொல்வார்கள். இவர்களிடம் இருந்து விலகி இருப்பதே நம் ஆரோக்கியத்துக்கு நல்லது. நேரடியாகச் சந்திக்கும்போதுதான் நோயாளிக்கு என்ன பிரச்னை என்பதை டாக்டரால் புரிந்துகொள்ள முடியும். நோயாளியின் வயது, உடல்நிலை, உடலின் நோய் எதிர்ப்பு சக்தி, நோயின் தாக்கம் எல்லாவற்றையும் கணக்கிட்டுத்தான் டாக்டர், நோயாளிக்குச் சரியான மருந்தைப் பரிந்துரைப்பார். அது எந்த மருந்தாக இருந்தாலும் சரி, மாத்திரையாக இருந்தாலும் சரி… தேவையில்லாமல் நம் உடலுக்குள் செல்லும்போது பல பிரச்னைகளை ஏற்படுத்திவிடும். வாந்தி, வயிற்றுப் புண் வரும்; சிறுநீரகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்; எலும்பு மஜ்ஜை பிரச்னையைக்கூட உண்டாக்கும்.

மருத்துவர்

வீட்டில் யாருக்கோ தலைவலி என்று மருத்துவர் ஒரு மருந்தை எழுதிக் கொடுத்திருப்பார். வீட்டில் யாருக்கு தலைவலி வந்தாலும், அதே மருந்தைச் சிலர் கொடுப்பார்கள். இதுவும் தவறு. அதேபோல, ரத்த அழுத்தம், சர்க்கரைநோய் பிரச்னைகளுக்கு வீட்டில் உள்ள ஒருவர் சாப்பிடும் மருந்தையே அனைவரும் சாப்பிடுவதும் தவறு. இது, மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பெரிய பிரச்னைகளுக்குக்கூட வழிவகுத்துவிடும். மாத்திரைகள் நான்கு வகை… சத்து மாத்திரை, கிருமிகளைக் கொல்பவை (Antibiotic), ஆன்டி அலர்ஜிக், வலி நிவாரணி! இவற்றில் எந்த மாத்திரையாக இருந்தாலும், தேவையில்லாமலோ அதிக அளவிலோ சாப்பிட்டால், பல பக்க விளைவுகள் ஏற்படும். சத்து மாத்திரைகள், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, வயிறு தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்துபவை. ஆன்டிபயாடிக், செரிமானக் கோளாறுகளையும் வயிற்றுப் பிரச்னைகளையும் உண்டாக்குபவை. ஆன்டி அலர்ஜிக், தூக்கம், மயக்கம், சோர்வைத் தருபவை. வலி நிவாரணிகள், வயிற்றுப் புண், சிறுநீரகப் பாதிப்பு, ரத்தம் உற்பத்தியாவதில் பிரச்னைகளை ஏற்படுத்துபவை.

சிலர் டாக்டரிடம் வரும்போதே, `டாக்டர்… எனக்கு வந்திருக்கிறது சாதாரண ஜுரம் மாதிரி தெரியலை. எதுக்கும் ஒரு பிளட் டெஸ்ட் எடுத்துப் பாத்துரலாமா?’ என்பார்கள். இல்லையென்றால், `போன தடவை குடுத்தீங்களே ஒரு மாத்திரை அது கேட்கவே மாட்டேங்குது… 500 எம்.ஜியா எழுதிக் குடுங்க டாக்டர்…’ என்பார்கள். இப்படி அதீத ஆர்வம், எதற்கெடுத்தாலும் சந்தேகம் என்பது சிகிச்சை கொடுக்கும் மருத்துவருக்குத்தான் சிக்கலை ஏற்படுத்தும். மருத்துவரிடம் சந்தேகம் கேட்பது இருக்கட்டும்… என்ன பிரச்னை, என்ன சிகிச்சை கொடுக்கிறார் என்பதை நோயாளிக்கு மருத்துவர் தெரிவிக்கவேண்டியதும் மருத்துவரின் கடமையே!

மருத்துவர் பரிந்துரை

இன்னொரு விஷயம்… காய்ச்சல் என்று மருத்துவரிடம் போகிறோம். அவர், குறிப்பிட்ட காலத்துக்கு (ஒரு கோர்ஸ்) சாப்பிடச் சொல்லி மருந்துகளைப் பரிந்துரைத்திருப்பார். சிலர் காய்ச்சல் குணமானவுடன் மருந்து சாப்பிடுவதை நிறுத்திவிடுவார்கள். இதுவும் தவறு. டாக்டர், கிருமிகளைக் கொல்வதற்காகவே மருந்து கொடுத்திருப்பார். இடையில் நிறுத்தினால், கிருமி வளரும்; மறுபடியும் அதே காய்ச்சல் வரும். அதோடு, அந்த மருந்துக்கு எதிராகச் செயல்படும் தன்மையையும் அந்தக் கிருமி பெற்றுவிடும். பல ஆண்டுகளாக மருத்துவர்-நோயாளி ஜோக்குகளை பத்திரிகைகள் வெளியிட்டு தீர்த்துவிட்டன. இப்படியான நகைச்சுவைகள் இன்றைக்கும் அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபிபோல் நிஜ வாழ்க்கையிலும் தொடர்ந்துகொண்டே இருப்பதுதான் சுவாரஸ்யமும் வருத்தமும் தரும் செய்தி. சுயவைத்தியம் என்பது மருத்துவரைத் தவிர வேறு யாரும் செய்துகொள்ளக் கூடாதது. அதிலும், சில சிகிச்சைகளை மருத்துவர், தனக்குத் தானே செய்துகொள்ளவும் முடியாது.

இப்படி நாம் ஒவ்வொருவருமே தெரிந்துகொள்ளவேண்டிய, பின்பற்றவேண்டியவை மருத்துவத்தில் அநேகம். ஒருவர் நெஞ்சு கரிக்கிறது என்று சொல்லி ஒரு டாக்டரிடம் போகிறார். டாக்டர் அவரை ஈ.சி.ஜி எடுக்கச் சொல்லி, அவருக்கு இதயத்தில் பிரச்னை இருப்பதை உறுதிசெய்கிறார். ஆனாலும், அந்த நபர், `ஒரு சோடா குடிச்சா சரியாப் போகும்’ என்று மருத்துவர் பரிந்துரைக்கும் சிகிச்சையை மறுத்துவிட்டு, பெட்டிக்கடைக்கு ஓடினால் என்ன ஆகும்? அதற்கு விலையாகக் கொடுக்க வேண்டியது அவருடைய உயிரை அல்லவா? பின்னங்கால் நரம்பில் வலியா? உடனே கூகுளில் தேடி சிகிச்சை எடுப்பது தவறு. நல்ல மருத்துவரை நாடிப் போவதே சரி. ஒருவேளை, அந்த நரம்புவலி பக்கவாதத்தில்கூட கொண்டுபோய் விட்டுவிடலாம். எனவே பொருத்தமான, நல்ல மருத்துவரிடம் சந்தேகங்களைக் கேட்பதும், சிகிச்சை பெறுவதும்தான் ஆரோக்கியம் காக்க உதவும்.shutterstock 339676661 16570

Related posts

மூளையைப் பாதிக்கும் 10 பழக்க வழக்கங்கள்

nathan

தெரிஞ்சிக்கங்க…வெள்ளையான பற்களை மஞ்சளாக மாற்றும் உணவுப் பொருட்கள்!!!

nathan

மாரடைப்பை தவிர்ப்பதற்கு நார்ச்சத்து உணவு ..அமெரிக்க விஞ்ஞானிகள்

nathan

கர்ப்ப காலத்தில் ஆன்டி பயாடிக் மருந்துகளை சாப்பிடலாமா?

nathan

தாங்க முடியாத தலைவலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்க சூப்பர் டிப்ஸ்….சூப்பரா பலன் தரும்!!

nathan

சிறுநீரகத்தில் கற்கள் உருவாகுவதை தடுக்கும் பீட்ரூட் -தெரிஞ்சிக்கங்க…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… கர்ப்ப காலத்தில் உண்டாகும் கால் வலிக்கு தீர்வு தான் என்ன?

nathan

மாதவிடாய்க்கு இடையூறாக அமையும் சில தினசரி பழக்கவழக்கங்கள்!!!

nathan

ஆஸ்ப்ரின் மாத்திரையை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan