ஒவ்வொரு வகைத் தலைமுடிக்கும் ஒவ்வொரு வகை ஷாம்பு இருக்கிறது. எனவே, அவரவர் தலைமுடி எந்த வகையைச் சேர்ந்தது என்று முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.
உங்கள் கூந்தலுக்கான ஷாம்புவை எப்படித் தேர்வு செய்வது?
ஒருவருக்கு அழகு, வசீகரம், ஆளுமை, தன்னம்பிக்கையைத் தருவது தலைமுடி. 10, 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை, கருமையான கூந்தலுக்கு சிகைக்காய், வெந்தயம், காய்ந்த செம்பருத்திப் பூ என்று இயற்கையான பொருட்களைப் பயன்படுத்துவார்கள். ஆனால், இன்று கடைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் எண்ணற்ற ஷாம்புகளில் சிறந்தது எது. தனக்குப் பொருந்தமானது எது என்ற குழப்பம் பெரும்பாலானவர்களுக்கு உண்டு.
டிடர்ஜென்ட், எண்ணெய், புரோட்டின் போன்ற பல்வேறு கலவைகளால் தயாரிக்கப்படும் திரவநிலை சோப்தான் ஷாம்பு. சில நிறுவனங்கள் இதனுடன் வீரியமிக்க ரசாயனங்களையும் கலந்து விற்கின்றனர்.
ஒவ்வொரு வகைத் தலைமுடிக்கும் ஒவ்வொரு வகை ஷாம்பு இருக்கிறது. எனவே, அவரவர் தலைமுடி எந்த வகையைச் சேர்ந்தது என்று முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.
தலைமுடியில், வறண்ட, எண்ணெய் பசை, நார்மல் கூந்தல் எனப் பல வகை உள்ளன. எந்த வகையான கூந்தலுக்கு எந்த மாதிரியான ஷாம்பு சரியாக இருக்கும் என்று சரும மருத்துவர் ஆலோசனை பெற்று, அதன் அடிப்படையில் ஷாம்புவைத் தேர்ந்தெடுப்பது நல்லது.
எண்ணெய் பசைக் கூந்தலாக இருந்தால், மைல்டு ஷாம்பு பயன்படுத்தலாம்.
நார்மல் கூந்தல் உள்ளவர்களுக்கு பொடுகு, அரிப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் வரலாம். இவர்கள், மைல்டு டிடர்ஜென்ட் உள்ள ஷாம்புவைப் பயன்படுத்தலாம். இது, தலையில், ஈரப்பதத்தைத் தக்கவைக்க உதவும்.
வறண்ட கூந்தல் உள்ளவர்கள், டிடர்ஜென்ட் உள்ள ஷாம்பு பயன்படுத்தக் கூடாது. முடியின் ஈரப்பதத்தைத் தக்கவைக்க உதவும் ஷாம்பு பயன்படுத்த வேண்டும்.
பி.ஹெச் (pH) அளவு 5.5 இருக்கும் ஷாம்பு மிதமானது.
பொதுவாக, பி.ஹெச் அளவு 5 – 7 வரை இருக்கும் ஷாம்புவைப் பயன்படுத்தலாம். இதில், எந்த கூந்தலுக்கு, எது பொருந்தும் என மருத்துவரிடம் ஆலோசித்துப் பயன்படுத்த வேண்டும்.
பென்சாய்ல் (Benzoyl) இருக்கும் ஷாம்பு, ஓரளவுக்கு ஈரப்பதத்தைத் தரும். ஆனால், இந்த கெமிக்கலின் அளவு சரியான அளவில் இருக்க வேண்டும்.
ஷாம்புவில் புரோட்டின் இருந்தால், கூந்தலின் தரம் மேம்படும். அதன் நெகிழ்சித்தன்மை அதிகமாகும். கூந்தல் பார்க்க அழகாகத் தெரியும்.
சுருட்டை முடிக்கு, சிக்கு விழும் கூந்தலுக்கு எனப் பிரத்யேகமான ஷாம்புக்கள் உள்ளன.
மிகவும் வறட்சியான கூந்தலுக்கு இன்டென்ஸ் மாய்ஸ்சரைசிங் ஷாம்பு பயன்படுத்தலாம். இதில், தேங்காய் எண்ணெய், அவகேடோ எண்ணெய் கலந்திருக்கும்.
ஷாம்பு பாட்டிலில், அவகேடோ எண்ணெய், ஆலிவ், பாதாம், ரோஸ்பெர்ரி, சோயாபீன் போன்ற பல்வேறு எசன்ஷியல் எண்ணெய்கள் கலந்திருந்தால், அந்த ஷாம்புக்கள் நல்லது.