24.8 C
Chennai
Monday, Dec 23, 2024
ld45762
மருத்துவ குறிப்பு

துப்பட்டாவே ஆயுதம் ஆகும்!

பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வரும் இக்காலச் சூழலில் பெண்கள் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கான பயிற்சிகள் அத்தியாவசியம். தற்காப்புக்கலைகளிலேயே நமது மண் சார்ந்த கலை களரி. இது தற்காப்புக்கலை மட்டுமல்ல. நமது உடலியல் மற்றும் உளவியல் நலத்தை ஏற்படுத்துவது. எந்த ஆயுதங்களும் இல்லாமல் தங்களைத் தாக்க வருபவர்களிடம் எதிர்த்தாக்குதல் நடத்துவதற்கான களரிப் பயிற்சிகளை வழங்கி வருகிறார் கிரிதரன். பி.இ. கணிப்பொறி அறிவியல் படித்திருந்தாலும், நமது பாரம்பரிய கலையான களரி மீது கொண்ட தனிப்பட்ட ஆர்வம் காரணமாக ‘களரியில் ஷத்ரியா’ என்கிற பயிற்சி மையத்தை நிறுவியிருக்கிறார்.

”போர்த் தொழில் புரிவோரது வம்சாவழியில் வந்தவன் நான். அதனால் மரபு ரீதியாகவே எனக்கு போர்க்கலைகள் மீதான ஆர்வமும் திறனும் இருப்பதை உணர்கிறேன். பள்ளிக்கூட நாட்களிலிருந்தே களரி கற்று பயிற்சி செய்து வருகிறேன். இந்நிலையில் பி.இ. படித்து முடித்த பின் ஒரு நிறுவனத்தில் இணைந்து பணிபுரிய மனம் ஒப்பவில்லை. எனது ஆர்வம் முழுவதும் களரி மீதுதான் இருந்தது. களரியை பரவலாக எடுத்துச் செல்லும் பணியை மேற்கொள்ள வேண்டும் எனத் தோன்றியது. களரியை எடுத்துச் செல்வதற்கான தேவை இந்தச் சமூகத்தில் அதிகம் இருக்கிறது. இன்றைக்கு நமது வாழ்வியலே மாறிவிட்ட காரணத்தால்தான் நாம் பல நோய்களைச் சந்திக்கிறோம்.

நமது வாழ்வியலிலேயே கலந்திருந்த உடற்பயிற்சி இன்றைக்கு இல்லாமல் போய்விட்டதால் நாம் அவசியம் உடற்பயிற்சிகள் மூலம் உடலைத் தயார்படுத்த வேண்டியிருக்கிறது. இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளுக்கு ஜிம்மில் மேற்கொள்ளப்படும் உடற்பயிற்சிகள் உகந்ததல்ல. பலவிதமான ஆட்டக்கலை மற்றும் போர்க்கலைகளின் தாயாக இருப்பது களரிதான்! நாம் சொல்வதை உடல் கேட்க வேண்டும். அப்படியாக உடலை வைத்துக் கொள்வதன் மூலம் மனமும் ஆரோக்கியத்துடன் இருக்கும். இன்றைய இளைஞர்கள் குறிப்பாக இளம்பெண்களை பலப்படுத்த வேண்டியிருக்கிறது. உடல் ரீதியாக மட்டுமல்ல… மன ரீதியாகவும் கூட. களரி பயிற்சி மூலம் உடல் மற்றும் மனம் இரண்டையும் புத்துணர்ச்சியோடு வைத்துக் கொள்ளும்போது, எந்த கெட்ட பழக்கங்களுக்கும் அடிமையாகாமல் நலமான வாழ்வைச் சாத்தியப்படுத்தலாம்.

பெண்கள் ஆணுக்கு நிகரானவர்கள் என்று சொல்வார்கள். உண்மையில் ஆண்களைவிடத் திறன் வாய்ந்தவர்கள் பெண்கள். எல்லாவற்றிலும் ஆண்களைக் காட்டிலும் சிறந்து விளங்கக்கூடிய ஆற்றல் பெண்களுக்கு இருக்கிறது. சரியான பயிற்சிகளை மேற்கொள்ளும்போது அப்படியொரு பலத்தைப் பெண்களாலும் பெற முடியும். பலம் குறைந்தவர்கள் மீதுதான் வன்முறை கையாளப்படுகிறது. பெண்களும் பலமடைந்து விட்டார்கள் என்றால் வன்முறைகளை எதிர்த்து நிற்கலாம். களரி போன்ற நமது வாழ்வியல் சார்ந்த கலையைக் கற்றுக்கொள்வதன் மூலம் உடல்நலம் மற்றும் தற்காப்பையும் உறுதிப்படுத்த முடியும்.

இந்த நோக்கத்தில்தான் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ‘களரியில் ஷத்ரியா’வைத் தொடங்கினேன். சென்னை வளசரவாக்கம், மயிலாப்பூர் மற்றும் ராமகிருஷ்ணா மாணவர் இல்லம் ஆகிய இடங்களில் பயிற்சி வழங்கி வருகிறேன். பயிற்சிக்குப் பின்னர் தங்களது வாழ்வியல் முறையே மாறிவிட்டதாகப்
பலரும் கூறுகின்றனர். இதை நான் தொழிலாகப் பார்க்கவில்லை. அதைப் பரவலாக்கம் செய்ய வேண்டும் என்பது மட்டுமே எனது குறிக்கோள். ஆகவே, களரிப் பயிற்சிக்கென கட்டணங்கள் எதையும் நிர்ணயிக்கவில்லை. இதில் லாப நோக்கு ஏதும் இல்லை” என்கிறவர், களரியின் செயல்முறைகளைப் பற்றிப் பேசுகிறார்.”யோகாப் பயிற்சி, உடற்பயிற்சி, குறுவடி (சிறிய கம்பு), நெடுவடி (நெடுங்கம்பு), ஈட்டி, வாள், கேடயம், வெட்டுக்கத்தி, சுருள்வாள் என பலவற்றையும் உள்ளடக்கியதுதான் களரி.

களரியில் துண்டு முறை எனும் ஒரு பாடம் உள்ளது. அதன்படி பெண்கள் தங்களது துப்பட்டாவைக் கொண்டே எதிராளியின் தாக்குதலைத் தடுத்து, வீழ்த்த முடியும். இயக்கம் இல்லாமல் நின்று கொண்டிருப்பவரை வீழ்த்துவதைவிட, இயக்கத்தில் இருப்பவரை வீழ்த்துவது சுலபமானது. அதற்கான சரியான வழிமுறைகளை மட்டும் பின்பற்றினால் போதுமானது. முறையான களரிப் பயிற்சி மேற்கொள்ளும் நிலையில் ஆயுதமே இல்லாமல் போர் புரியும் நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ளலாம்…” என்கிற கிரிதரன் அளிக்கும் செயல்முறை விளக்கத்தை படங்களில் காணலாம்.ld45762

Related posts

உறவு சார்ந்த பிரச்சினைகளில் பெண்ணையே குறிவைத்து தாக்குவது ஏன்?

nathan

சைனஸ் பிரச்சனைகளில் இருந்து விடுபட சூப்பர் டிப்ஸ்……

nathan

உங்கள் குறட்டை பிரச்சனையை நிரந்தரமாக தீர்க்க வேண்டுமா?

nathan

பெண்ணின் கருவளம் மிக்க நாட்களை கண்டறிவது எப்படி?

nathan

வாயுத்தொல்லை மற்றும் வாத நோய் இரண்டையும் விரட்ட இந்த ஒரே முலிகை போதும்!இத ட்ரை பண்ணி பாருங்க

nathan

கிட்னி கற்களுக்கு தொடர்ந்து மாத்திரை சாப்பிடுறீங்களா? கட்டாயம் இதை படியுங்கள்

nathan

கட்டிகளால் கவலை வேண்டாம்!மருத்துவர் கூறும் தகவல்கள்…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…தைராய்டு குணமாக இதை குடிச்சாலே போதும் !…

nathan

பெண்கள் மனஅழுத்தத்தில் இருந்து மீளும் வழி

nathan