உங்களுக்கு கொழுக்கட்டை ரொம்ப பிடிக்குமா? அவல் கொழுக்கட்டையை நீங்க சமைத்து சுவைத்திருக்கிறீர்களா? இல்லையெனில் இன்று அந்த அவல் கொழுக்கட்டையை செய்து சுவையுங்கள். இதை செய்வது மிகவும் சுலபம்.
இங்கு அந்த அவல் கொழுக்கட்டையின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்: அவல் – 1 கப் வெல்லம் – 1/2 கப் தண்ணீர் – 1 1/4 கப் தேங்காய் – 1/4 கப் (துருவியது) ஏலக்காய் பொடி – 1 டீஸ்பூன் நெய் – 2 டீஸ்பூன்
செய்முறை: முதலில் அவலை மிக்ஸியில் போட்டு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியில் வெல்லத்தை தட்டிப் போட்டு, 1/2 கப் தண்ணீர் ஊற்றி, வெல்லம் முற்றிலும் உருகியதும் இறக்கி, வடிகட்டிக் கொள்ள வேண்டும். பின்பு மீண்டும் அந்த வெல்லப் பாகுவை வாணலியில் ஊற்றி, மீதமுள்ள நீரை சேர்த்து கொதிக்க விட வேண்டும். கலவை கொதிக்க ஆரம்பித்ததும், அதில் தேங்காய், ஏலக்காய் பொடி மற்றும் நெய் சேர்த்து கிளறி, மெதுவாக பொடித்த அவலையும் சேர்த்து, கலவை ஓரளவு கெட்டியாகும் வரை கிளறி இறக்கி குளிர்ந்ததும், அதனை சிறு கொழுக்கட்டைகளாக பிடித்து, இட்லி தட்டில் வைக்க வேண்டும். பின் இட்லி பாத்திரத்தில் வைத்து, 7-8 நிமிடம் வேக வைத்து இறக்கினால், அவல் கொழுக்கட்டை ரெடி!!!