இப்போது பரவலாக எல்லோருக்கும் உள்ள பிரச்னை தலைமுடி உதிர்வது. தலைமுடி உதிர்வதற்கு மிக முக்கிய காரணங்களுள் ஒன்று தலைமுடியில் வறட்சி ஏற்படுவது. வறண்ட கூந்தலினால் முடியில் உள்ள ஈரப்பசை குறைந்து தலைமுடி வலுவிழந்து உதிர்ந்துவிடுகிறது. அதனால் தலைமுடியைப் பராமரிக்க சில ஆலோசனைகளை வழங்குகிறார் அழகுக்கலை நிபுணர் ராஜம் முரளி!
தேங்காய் எண்ணெய்
* தினமும் தேங்காய் எண்ணெய் 6 முதல் 7 சொட்டுகள் வரை எடுத்து தலையில் தேய்த்து, வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரில் குளிக்கலாம்.
வெந்தயம்
*வெந்தயத்தைப் பொடி செய்து சூடான நீரில் கலந்து விழுதாக்கி அதை தலையில் தேய்த்து ஊற வைத்துக் குளித்தால் தலைமுடி பளபளப்பாகும்.
கரிசலாங்கன்னி
*கரிசலாங்கண்ணி கீரையை மிக்ஸியில் அரைத்து, அந்த விழுதை தலையில் தடவி அரை மணி நேரம் கழித்து ஷாம்பு போடாமல் குளித்து வரலாம். இப்படி வாரம் ஒருமுறை குளித்து வர, முடிகளுக்கு சத்து கிடைக்கும்.
இளநீர்
*இளநீர் வழுக்கையுடன் பாதியளவு எலுமிச்சைப் பழச்சாறு சேர்த்து குழைத்து, அரை மணிநேரம் தலையில் ஊற வைத்துக் குளித்தால் உடல் சூடு குறைந்து முடி பளபளப்பாகும்.
செம்பருத்தி
*செம்பருத்தி இலையை ஒரு பிடி எடுத்து தண்ணீரில் கொதிக்க வைத்து, அந்த தண்ணீரில் கடலை மாவு சேர்த்து தலையில் தடவி சிறிது நேரம் குளிக்கலாம்.
ஆலிவ் ஆயில்
* ஆலிவ் எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் மூன்றையும் ஒன்றாகக் கலந்து, தலையில் தேய்த்து ஊறவைத்து, ஒரு மணி நேரம் கழித்து ஷாம்பு போட்டு குளிக்கலாம்.
துவரம்பருப்பு
* புரதச்சத்து கூந்தலுக்கு முக்கியம். அதனால் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு மூன்றையும் அரை டீஸ்பூன் அளவு எடுத்துக் கொண்டு அதை தயிரில் கலந்து ஊறவைக்கவும். நன்கு ஊறிய பிறகு தயிரோடு கலந்து மிக்ஸியில் சேர்த்து அரைத்தெடுத்து, விழுதை தலையில் தேய்த்து குளித்து வந்தால் ஆரோக்கியமான கூந்தல் கிடைக்கும்.
மருதாணி
* மருதாணி, செம்பருத்தி இலை, கரிசலாங்கண்ணி, மூன்றையும் அரை பிடி அளவு எடுத்துக் கொண்டு நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அதை தலையில் 10 நிமிடங்கள் ஊற வைத்து, குளிக்கவும்.
செண்பகப்பூ
* 10 செண்பகப் பூக்களை உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இந்த பொடியை தேங்காய் எண்ணெயில் கலந்து 4 நாட்கள் வரை வைத்திருக்கவும். பிறகு தலையில் தடவி வர பூவின் வாசம், நம்முடைய மன அழுத்தத்தைக் குறைக்கும். தேவையற்ற மன அழுத்தங்களால் முடி உதிர்வு ஏற்படாது.
ஆவாரம்பூ
* ஆவாரம் பூ, அரை டீஸ்பூன் அளவு வெந்தயம், கடலைமாவு மூன்றையும் சேர்த்து அரைத்து தலையில் தேய்த்து குளிக்க பளபளப்பு கூடும்.
தேங்காய்ப்பால்
* தேங்காய்ப் பாலை அடுப்பில் வைத்து நன்கு காய்ச்சும்போது அதில் எண்ணெய் போல் உருவாகும். அதை எடுத்து தலையில் தேய்த்து 2 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு குளித்தால் கூந்தல் பட்டுப் போல மின்னும்.