இன்றைக்கு பெறோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளி, டியூஷன் மற்றும் பல பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்புகிறார்கள். அப்படி அனுப்பும் எல்லா இடங்களுக்கும் கழுகுபோல குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது மிகக்கடினம்.
Girl with mother
இதனால் குழந்தைகள் பயிற்சிக்கு செல்லும் இடங்களில் பாலியல் ரீதியான சீண்டல்களுக்கு ஆட்படுவது அதிகமாகிக்கொண்டே வருகிறது. ஆண், பெண் இருபால் குழந்தைகளுக்கு இதுப்போன்ற அச்சுறுத்தல்கள் தொடர்ந்தாலும், பெண் குழந்தைகளுக்கு இப்பாதிப்பு மிக அதிகமாக நடைபெறுவதை அடிக்கடி செய்திகளின் வாயிலாக அறியமுடிகிறது. இன்றைக்கு மிக முக்கியமான பிரச் னையாக உருவெடுத்திருக்கும், பாலியல் சீண்டல்களுக்கு எதிரான குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிபடுத்திக்கொள்ள பெற்றோர்கள் செய்ய வேண்டியவற்றை விளக்குகிறார் உளவியல் நிபுணரான முனைவர் நப்பின்னை.
என் பிள்ளை மார்க் வாங்கணும், பல கலைகளில், துறைகளில் சாதிக்கணும் என்று நினைப்பதைவிட, அப்பயிற்சி வகுப்புகளுக்கு குழந்தைகளை அனுப்பும் இடம், பயிற்சியாளர், அங்கு பணியாற்றுபவர்கள் பற்றியும், அந்த இடம் குழந்தையின் பாதுகாப்புக்கு உகந்ததுதான் என்பதை முழுமையாக தெரிந்துகொண்டு அதன் பின்னர் அனுப்புவது மிக மிக அவசியம். முதலில் சில காலங்களுக்கு வீட்டில் யாராவது ஒருவர் குழந்தைகளை அனுப்பி வைத்து, பின்னர் அழைத்துவர வரவேண்டும்.
உங்கள் குழந்தையை எந்த பயிற்சி வகுப்புகளுக்கு வேண்டுமானாலும் அவர்கள் விருப்பத்துடன் அனுப்பலாம். ஆனால் கட்டாயம் அவர்களுக்கு தற்காப்பு பயிற்சியை கற்றுக் கொடுப்பது எல்லாவற்றிலும் விட முக்கியம். அப்போதுதான் குழந்தையிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றால், உடனே அவரை எதிர்த்து குழந்தைகளால் தப்பிக்க முடியும்.
ஒவ்வொரு குழந்தையிடமும் தன் ஆண், பெண் நண்பர்களிடம், உறவினர்களிடம், ஆசிரியர்களிடம், பயிற்சியாளர்களிடம், சமூகத்தில் அன்றாடம் சந்திப்பவர்களிடம் எப்படி எந்த எல்லைக்குள் பழகுவது, நடந்துகொள்வது என்பது பற்றி கட்டாயம் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
இன்றைக்கு பாலியல் கல்வியை பலரும் தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதுதான், பெண் குழந்தைகள் மற்றும் இளம்பெண்களுக்கு எதிரான பாலியல் அச்சுறுத்தலுக்கு காரணமாக இருக்கிறது. பாலியல் கல்வியை பள்ளிகளில் கற்பிக்க அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் பெற்றோர்கள்தான் தங்கள் பிள்ளைகளுக்கு அவர்கள் வயது மற்றும் புரிந்துகொள்ளும் தன்மைக்கு ஏற்ப பாலியல் சார்ந்த விஷயங்களைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். எல்லாவற்றையும் சொல்லிக் கொடுக்கவேண்டும். ஒவ்வொரு வயதிலும் நடைபெறும் ஆண், பெண் குழந்தைகளின் உடல் ரீதியான மாற்றங்கள், எண்ணங்கள், அப்போது எதிர்பாலினத்தவரிடம் தானும் அவர்கள் உன்னிடமும் பழகும் தன்மை ஆகியவற்றை விளக்கிக் கூற வேண்டும். அப்போதுதான் ஒரு குழந்தை எதிர்பாலினத்தவர் ஒருவர் தன்னிடம் என்னக் கண்ணோட்டத்தில் பழகுகிறார் என்பதை யூகித்துக்கொண்டு, ஆபத்து வந்தால் தற்காத்துக்கொள்ள முடியும்.
school Girls
தாய், தந்தையைத் தவிர அல்லது தாய் தந்தையின் முன்னிலையில் பழக்கப்பட்ட நபர் அன்பு காட்டும் விதமாக உன் உடல் மீது கை வைக்கலாம். மாறாக எந்த சூழலிலும் ஒருவர் உன் தலைமீது, கன்னம் மீது, உடல் மீது கைவைப்பதை அனுமதிக்காதே. பெற்றோர் மற்றும் யாராக இருந்தாலும் உனக்கு விருப்பம் இல்லாமல் உன்னை தொடுவதை அனுமதிக்காதே. உனக்குப் பிடிக்கவில்லை எனில், உன் மீது ஒருவர் கைவைக்கும் போது உடனே அவர் கையை தட்டிவிடு, தூரமாக விலக்கிவிடு, மீறி ஒருவர் தன்னிடம் தவறாக நடந்துகொள்கிறார் என்றால் உடனே சத்தம் போடு, உடனே சுதாரித்துக்கொண்டு தப்பித்து அருகில் இருப்பவர்களிடம் சொல் எனச் சொல்ல வேண்டும்
இயல்புக்கு மாறாக அல்லது தாய்-தந்தை, அண்ணன்-தம்பி இவர்களைத் தவிர ஒருவர் தன்னிடம் அதிக உரிமை எடுத்துக்கொண்டு பழகுவது, உடலில் தொட்டுப் பேசுவது, அதிக உரிமைக்கொண்டு பரிசுப்பொருட்களை கொடுத்து ஒருவர் நெருங்கிப் பழகுவது, ஒருவர் அதீத அக்கறையுடன் பேசுவது இதுப்போன்ற சம்பவங்கள் நடந்தால் ஆரம்பக்கட்டத்திலேயே தங்களிடம் தெரிவிக்கும்படி பெற்றோர்கள் குழந்தைகளிடம் சொல்ல வேண்டும். பின்னர் சம்பந்தப்பட்ட நபரைப் பற்றி பெற்றோர்கள் விசாரித்து முன்னெச்சரிக்கையுடன் செயல்படலாம்.
தினமும் இரவு நேரத்தில் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நேரம் ஒதுக்கி அன்றைக்கு என்னவெல்லாம் நடந்தது, யார் எல்லாம் உன்னிடம் பழகினார்கள், சந்தோஷமான, அசாதாரண நிகழ்வுகள் எதாவது நடந்ததா என்பதை பொறுமையுடன் கேட்க வேண்டும்.
உனக்கு ஒரு பிரச்னை வந்தால் உடனடியாக எங்ககிட்ட வந்து சொல்லு, நீ எந்த தப்பும் பண்ணாதே. உன்மேல எந்த ஒரு தப்பும் இல்லாத பட்சத்தில் எந்த ஒரு விஷயத்துக்கும் பயப்படவேண்டிய அவசியமே இல்லை. தைரியமா இருன்னு குழந்தைகளுக்கு நியாயமான, நம்பகமான நம்பிக்கை ஊட்ட வேண்டும். அப்போதுதான் குழந்தைகள் எந்த ஒரு விஷயத்தையும் ஆரம்பக்கட்டத்திலேயே பெற்றோர்களிடம் வந்து தெரிவிப்பார்கள். அதற்கு பெற்றோர்கள் பிள்ளைகள் தங்களிடம் எல்லா விஷயங்களையும் ஒளிவு மறைவின்றி பேசும் அளவுக்கு நடந்துகொள்ள வேண்டும். மாறாக எதற்கெடுத்தாலும் பிள்ளைகளிடம் கோபப்படுவது, பிள்ளைகள் தெரியாமல் சிறு தவறு செய்தால் கூட அதனை பெரிதுபடுத்தி கண்டிப்பத்து தவற.
பல குழந்தைகள் தனக்கு பாலியல் ரீதியாக யாராவது துன்புறுத்தி இருந்தால் அதனை வெளிச்சொல்ல பயப்படுவார்கள். அதனால் தினமும் குழந்தையின் நடவடிக்கை, செயல்பாடு, உடல்நிலை, உணர்வுகளை கண்காணிக்க வேண்டும். இயல்புக்கு மாறாக பெண் குழந்தைகள் நடந்துகொள்கிறார்களா என்பதை கவனித்து அவ்வாறு இருந்தால் அதற்கான காரணங்களை கண்டறிந்து அதனை சரிசெய்ய வேண்டும்.
குழந்தைக்கு யாராவது ஒருவரால் பாலியல் ரீதியான பிரச்னை நடந்துவிட்டால், அதன்பின்னர் அக்குழந்தைக்கு அச்சம்பத்தில் இருந்து முழுமையாக வெளிவந்து பழைய படி இருக்கச் செய்ய வேண்டும். மாறாக நடந்த சம்பவத்தை நினைவுபடுத்தும்படியே நடந்து கொள்வது, அச்சம்பவத்தையே திரும்பத் திரும்ப சொல்லிக் காட்டுவது, மீண்டும் வெளியுலக அனுபவமும், பயிற்சி எதுவுமே கிடைக்காமல் செய்வது, சக நண்பர்களிடம் பழக விடாமல் செய்வதுதான் இன்னும் குழந்தைகளுக்கு பெரிய பாதிப்பை உண்டாக்கும். மாறாக காவல் நிலையம் செல்வது அவமானமாக பார்த்தால், மீண்டும் இதுப்போன்ற சிக்கல் அதே குழந்தைக்கோ அல்லது மற்ற குழந்தைக்கோ அதே நபரால் ஏற்படாது என்பதில் என்ன நிச்சயம். ஒருவேளை சம்மந்தபட்ட நபர் மீது நேரடியாக புகார் தெரிவிக்க அச்சப்பட்டால், மறைமுகமாக வேறு ஒருவர் மூலமாக சொல்லலாம்.
குறிப்பாக குழந்தைகளுக்கு எதிரான பல குற்றச் சம்பவங்கள் நன்றாக தெரிந்த நபர்களால்தான் அதிகமாக நடைபெறுகின்றன. அதனால் கூடுதல் கவனத்துடன், குழந்தையிடம் பழகுபவர்களைப் பற்றி தெரிந்துகொள்வதுடன், அவர்களின் பின்புலங்களை தெரிந்துகொள்வது மிக நல்லது. அவ்வப்போது குழந்தைகள் பயிற்சிக்கு செல்லும் இடங்களுக்கு சென்று பயிற்சியாளர், சக நண்பர்கள், அங்கிருக்கும் சூழல்கள் ஆரோக்கியமானதாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்வது நல்லது.