இளம்பருவத்தில் ஒருவர் கற்ற கல்வியும், பெற்ற பயிற்சிகளும் அவரது வாழ்வு சிறக்க நல்ல செயல்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என பெரியவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
இளமை… இனிமை… முதுமை…
இளம்பருவத்தில் ஒருவர் கற்ற கல்வியும், பெற்ற பயிற்சிகளும் அவரது வாழ்வு சிறக்கவும், பெருமையடையவும் காரணமாக அமைகின்றன. அதனால்தான், இளமையில் நல்ல செயல்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என பெரியவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
“தவமாய் தவமிருந்து பெற்ற பிள்ளை, தரணியில் சிறந்து விளங்க வேண்டும்” என்ற ஆசை எல்லா பெற்றவர்களுக்கும் உண்டு. குழந்தை பிறந்தவுடன் பெற்றோர்கள் ஆனந்தத்தில் திளைக்கிறார்கள். ஆனால், அந்தக் குழந்தை வளர்ந்து, பள்ளிக்குச் சென்று ‘டீன்ஏஜ்’ பருவத்தை நெருங்கியதும், சில பெற்றோர்களின் மகிழ்ச்சி விடைபெற்றுவிடுகிறது.
“பள்ளியில் படிக்கும்வரை என் சொல்லைக்கேட்டு என் பையன் நடந்தான். ஆனால், கல்லூரிக்குப் போனதும் அவன் அப்படியே மாறிவிட்டான். ‘அது வேண்டும், இது வேண்டும்’ என அடம்பிடிக்கிறான். அவன் விருப்பப்படி நாங்கள் நடக்காவிட்டால் கோபப்படுகிறான். ஏன்தான் இவன் இப்படி மாறிவிட்டானோ?” என காரணம் புரியாமல் தவிக்கும் பெற்றோர்கள் ஒருபுறம்.
“என்னை என் பெற்றோர்கள் பெற்றெடுத்து, வளர்த்தார்கள் என்பது உண்மைதான். அதற்காக நான் வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு அடிமையாக இருக்க முடியுமா? சொந்தமாக சிந்திக்கக்கூடாதா? என் விருப்பப்படி சுதந்திரமாக இருக்கக்கூடாதா?” என்று எரிச்சல் கலந்த வெறுப்பை உமிழும் இளைய உள்ளங்கள் மறுபுறம்.
ஏன் இந்த மாற்றங்கள்?
பெற்றோர்-பிள்ளைகள் உறவில் ஏன் இந்த விரிசல்கள்?
‘பெற்றோர்-பிள்ளைகள்’ பாசப்பிணைப்பில் உருவான நல்ல அமைப்புதான் ‘குடும்பம்’. குடும்ப வாழ்வில் மகிழ்ச்சியும், மனநிறைவும் இணையும் போதுதான் அந்தக் குடும்பம் சிறந்த குடும்பமாக மாறுகிறது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் பண்பாடும் வாழ்வு நெறிமுறைகளும் உள்ளன. இவை குடும்பத்திற்கு குடும்பம் மாறுபட்டதாக அமையும்.
ஒரே நிலத்தில் பயிரிடப்பட்ட பயிர்கள் ஒரே விதமான பலனைத் தரலாம். ஆனால், ஒரே குடும்பத்தில் பிறந்த குழந்தைகள், ஒரே மாதிரியான குணங்களோடு இருப்பதில்லை. ஒரு குடும்பத்தில் வளரும் குழந்தையின் குணத்தைப்போல, இன்னொரு குடும்பத்தில் வளரும் குழந்தையின் பண்புகள் அமைவதில்லை. இதனால், குழந்தைகளை வளர்ப்பதில் அதிக அக்கறையும், கவனமும் செலுத்த வேண்டியது பெற்றோர்களது கடமையாகும்.
இது அவசர உலகம். மிக வேகமாக இயங்கிக்கொண்டிருக்கும் இந்த உலகத்தில், கணவன்-மனைவி இருவரும் வேலைக்குச் சென்று பணம் சம்பாதித்தால்தான் குடும்பத்தை நடத்த முடியும் என்ற நிலை உருவாகிவிட்டது. அதுவும், குறிப்பாக நகர வாழ்க்கையில் ‘இரண்டு சம்பளம்’ இல்லையென்றால் அது ‘நரக வாழ்க்கை’யாக மாறும்நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், குடும்பத்திலுள்ள குழந்தைகள் வளரும்போது பெற்றோரின் பணத்தேவை அதிகமாகிறது. அதுவும், பெற்றோர்களைவிட, வளரும் குழந்தைகளின் தேவைகள் இப்போது அதிகமாகி விட்டது.
குழந்தையை நேரடியாக கவனித்து வளர்க்க இயலாத பெற்றோர்கள் குழந்தைகள் காப்பகம், ஆயாக்களின் பராமரிப்பு, தாத்தா பாட்டிகளின் கவனிப்பு என ஏதோ ஒரு வகையில் தாங்கள் பெற்ற பிள்ளையை வளர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். குழந்தையை வளர்க்கும் பொறுப்பை மற்றவர்களிடம் விட்டுவிட்டு, தங்களின் அலுவலகப் பணிகளில் அதிகமாக மூழ்கிவிடுகிறார்கள். பெற்றோர்களின் அன்புக்காக ஏங்கும் குழந்தைகளின் செயல்பாடு வித்தியாசமாக அமைகிறது.
இன்னும் சில குடும்பங்களில், வேலைக்குச் செல்லாமல், குழந்தையை வளர்ப்பதிலேயே முழு நேரத்தையும் அம்மா செலவிடுகிறாள். இதனால், இந்தக் குழந்தையின் மனநிலை வேறு விதமாக அமைகிறது. இவைதவிர, கிராமம்-நகரம், ஏழை-பணக்காரர் என்ற மாறுபட்ட சூழல்களில் வளர்க்கப்படும் குழந்தைகளின் மனோபாவம் வேறுபட்டதாகவும் இருக்கிறது.
முன்பெல்லாம் கூட்டுக்குடும்ப வாழ்க்கையில் தாத்தா பாட்டிகளின் அரவணைப்பில் பெரும்பாலான குழந்தைகள் வளர்ந்தன. குடும்பத்தின் பாரம்பரியத்தை காக்கும் விதத்தில் குழந்தைகளின் செயல்பாட்டை அமைப்பதில் இவர்கள் பெரும்பங்கு வகித்தார்கள். பெரியவர்களை மதிக்கவும், பெற்றோரைத் துதிக்கவும், நல்ல எண்ணங்களை மனதில் பதிக்கவும் இளம்வயதிலேயே குழந்தைகளுக்கு இவர்கள் கற்றுக்கொடுத்தார்கள். ஆனால், இதுபோன்ற சூழல் தனிக்குடும்ப வாழ்க்கையில் இல்லை.
காலையில் 8 மணிக்கு இறக்கை கட்டிப் பறந்த கணவன் வீடு திரும்பும்போது இரவு 8 மணி ஆகிவிடுகிறது. அலுவலகத்திற்குச் சென்ற மனைவியும் சோர்வுடனும், பதற்றத்துடனும் வீடு திரும்பும்போது குழந்தை மட்டும் தனியாக வீட்டில் இருக்கும் நிலை உருவாகிவிடுகிறது. தங்கள் பிரச்சினைகளையே தீர்க்க இயலாத கணவனும், மனைவியும், பிள்ளைகளின் பிரச்சினைப்பற்றி சிந்திப்பதற்கே நேரம் இல்லாத சூழலும் ஏற்படுகிறது.
வெளிநாடுகளில் இதுபோன்ற பிரச்சினையான குடும்ப வாழ்க்கையை சந்திப்பதற்கு ‘வெற்றிகரமான பெற்றோராகும் கலை’ (ஜிலீமீ Art of Successful Parenting) என பலவித பயிற்சி வகுப்புகளை திருமணமாகும் நபர்களுக்கும், இளம் தம்பதிகளுக்கும் நடத்துகிறார்கள். பெரும்பாலும், இந்தப் பயிற்சியை பெற்ற பின்புதான் குடும்ப வாழ்க்கையில் ஆணும் பெண்ணும் இணையும் திருமணம் நடைபெறுகிறது.
ஆனால் இந்தியாவில் இதுபோன்ற சிறந்த ‘பெற்றோராக்கும் பயிற்சிகள்’ பெரும்பாலும் நடத்தப்படுவதில்லை. தங்களுக்குக் கிடைத்த அனுபவங்களின் அடிப்படையிலேயே தங்கள் குடும்ப வாழ்க்கையை ஆணும், பெண்ணும் அமைத்துக்கொள்கிறார்கள். எனவே, குடும்ப வாழ்க்கையில் சிறந்த பெற்றோராக வாழ்வது எப்படி என்பது தெரியாமல் இளம் தம்பதியினர் தவிக்கிறார்கள்.