போன ஆண்டு சில தீர்மானங்களை அரைகுறையாகப் பின்பற்றி இருப்போம், சில தீர்மானங்களை மறந்திருப்போம். எனவே, இந்த ஆண்டு தீர்மானங்களை உறுதியாகப் பின்பற்ற சில யோசனைகள்…
தீர்மானங்கள்… சில விஷயங்கள்
புத்தாண்டு தொடங்கியிருக்கும் இவ்வேளையில், நீங்கள் சில தீர்மானங்களை மனதுக்குள் முன்மொழிந்திருப்பீர்கள். உங்கள் நிலையை முன்னேற்றும், மேம்படுத்தும் நோக்கில் இந்தத் தீர்மானங்களை நீங்கள் எடுத்திருப்பீர்கள்.
ஆனால், கடந்து போன ஆண்டின் தொடக்கத்தில் நீங்கள் எடுத்த சில தீர்மானங்கள் பற்றித் தற்போது யோசித்தால் சங்கடமாக இருக்கும்.
காரணம், சில தீர்மானங்களை அரைகுறையாகப் பின்பற்றி இருப்போம், சில தீர்மானங்களை போகிறபோக்கில் மறந்திருப்போம்.
எனவே, இந்த ஆண்டு தீர்மானங்களை உறுதியாகப் பின்பற்ற சில யோசனைகள்…
சாத்தியமானவை :
கூடியமட்டும், சாத்தியமானவை மட்டும் உங்கள் தீர்மானங்களாக அமையட்டும். மலையைப் புரட்டுவேன், வானவில்லை வளைப்பேன் என்கிற மாதிரியான அசாதாரண தீர்மானங்களை எடுத்துவிட்டு, பின்னர் அவற்றை காலாவதி ஆகவிடுவதை விட, சில எளிய, பயனுள்ள தீர்மானங்களை எடுப்பது நல்லது.
காலகட்டம் :
‘ஓராண்டு காலம் இருக்கிறதே… மெதுவாகப் பார்த்துக்கொள்ளலாம்’ என்றில்லாமல், ஒவ்வொரு தீர்மானத்துக்கும் ஒரு குறிப்பிட்ட கால எல்லையை நிர்ணயித்து, அதற்குள் நிறைவேற்ற முயற்சியுங்கள்.
வெளிப்படையாகக் கூறுங்கள் :
நாம் நமது தீர்மானங்களை வெளிப்படையாகக் கூறுவது பலன் தரும். ‘அப்படிச் சொன்னாய்… ஆனால், வழக்கம்போல்தானே நடக்கிறாய்?’ என்று பிறரின் கிண்டலுக்குப் பயந்துகொண்டாவது நமது தீர்மானங்களை பின்பற்ற முயல்வோம்.
மனத்திரையில் காணுங்கள் :
நாம் நமது லட்சியங்களை அன்றாடம் மனத்திரையில் அவை நிறைவேறிவிட்டதாகவே காட்சியாகக் காண்பது பலன் தரும் என்கிறார்கள், உளவியல் வல்லுநர்கள். நாம் அனுதினமும் மனதில் காணும் காட்சிகள், ஆழ்மனதில் பதிந்து போகின்றன. நாளடைவில் அவை நிஜமாக உருவெடுக்கின்றன என்ற கருத்தை பலரும் வலியுறுத்துகிறார்கள்.
ஒத்த எண்ணம் கொண்ட நண்பர்கள் :
நாம் நிறைவேற்ற எண்ணியிருக்கும் விஷயங்களை விரும்பும், அதேபோல தானும் தீர்மானம் செய்திருக்கிற நபர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். அது உங்கள் தீர்மானப் பாதையில் திடமாக நடைபோட உதவும், வழிகாட்டியாக இருக்கும். அலுப்பின் காரணமாக நாளடைவில் நாம் நமது தீர்மானத்தை கைவிடுவதையும் தடுக்கும்.
நினைவூட்டிகள் :
உங்கள் தீர்மானங்களை, உங்களது டைரி, கணினி முகப்புத்திரை, நீங்கள் அடிக்கடி பார்க்கும் இடங்களில் இட்டு வையுங்கள். அவை உங்களுக்கு உங்களது தீர்மானங்களை நினைவூட்டிக் கொண்டே இருக்கும்.
பரிசு வழங்கிக்கொள்ளுங்கள் :
ஒரு தீர்மானத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிவிட்டால், அதற்கு உங்களுக்கு நீங்களே குறிப்பிட்ட பரிசு வழங்குவதாக நிர்ணயித்துக்கொள்ளுங்கள். அது உங்களுக்கு தீர்மானங்களை நிறைவேற்ற ஊக்கம் தருவதாக அமையும்.
கடைசியாக, நமது சொந்த வாழ்க்கை சார்ந்த தீர்மானங்கள் தவிர, பொது நலன், சமூக நலன் சார்ந்த தீர்மானங்கள் ஒன்றிரண்டையும் எடுத்துக்கொள்ளலாம். அது, மகிழ்ச்சியோடு, மனநிறைவும் தரும்!