23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
ld4264
கர்ப்பிணி பெண்களுக்கு

கர்ப்பமாக இருக்கும் கண்மணிகளுக்கு..

டாக்டர் வசுமதி வேதாந்தம்

பிறக்கப் போகிற குழந்தை சிவப்பாக இருக்கவும்… போதுமான எடையுடன் இருக்கவும்…பிறவி மேதையாக இருக்கவும் ஆசைப்படுகிற அம்மாக்கள், அதற்காக எப்படியெல்லாமோ மெனக்கெடுவதைப் பார்க்கிறோம். பிறந்ததும் அந்தக் குழந்தை இந்த உலகத்தைப் பார்த்து ரசிக்கும்படி அதற்கு பார்வை நல்ல முறையில் இருக்க வேண்டுமே என்கிற கவலைகூட எந்தப் பெண்ணுக்கும் ஏற்படுவதில்லை.

கர்ப்பமாக இருக்கும்போது அந்தப் பெண்ணைப் பாதிக்கிற பல விஷயங்களுக்கு, பிறக்கப் போகிற குழந்தையின் பார்வைத் திறனுடன் நெருங்கிய தொடர்புள்ளதை பெரும்பாலானவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

1. ருபெல்லா என்கிற மணல்வாரி அம்மை வராமல் தடுக்க முன்பெல்லாம் எம்.எம்.ஆர். தடுப்பூசி போடும் பழக்கம் குறைவாக இருந்தது. அதனால் நிறைய பாதிப்புகளை கர்ப்பிணிகள் சந்தித்தார்கள். கர்ப்பமாக இருக்கும் போது ருபெல்லா வந்தால், ருபெல்லாவுக்கு காரணமான வைரஸ், தாயின் வயிற்றிலுள்ள குழந்தையின் கண்ணுக்குள் போகலாம்.

கண் கேமரா என்றால், உள்ளே இருக்கும் லென்ஸை ஃபோகஸிங் லென்ஸ் எனக் கற்பனை செய்து கொள்ளுங்கள். ருபெல்லா வைரஸானது இந்த லென்ஸுக்குள் போய் உட்கார்ந்து கொண்டு, பிறகு கண்புரை நோயாக மாறும். எனவே, குழந்தை பிறக்கும் போதே கண்புரை பிரச்னையுடன் பிறக்கும். கண்ணின் மொத்த அளவானது மிகச்சிறியதாக இருக்கும். இதை Microphthalmia என்கிறோம். கருவிழியில் வெள்ளைப் புள்ளிகள் தென்படும். இது தவிர ருபெல்லாவின் விளைவால் குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சியிலுமே பாதிப்புகள் இருக்கலாம். குழந்தையின் இதயம் பாதிக்கப்படலாம். கேட்கும் திறன் பாதிக்கப்படலாம். கல்லீரல் பெரிதாகலாம். குழந்தையின் வளர்ச்சியே குறையலாம். இதற்குப் பெயரே Congenital Rubella Syndrome (CRS).

2. பூனைகளை செல்லப் பிராணிகளாக வளர்க்கும் வீடுகளில் உள்ள கர்ப்பிணிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். பூனையின் மலத்தில் உள்ள Toxoplasma gondii என்கிற கிருமி, தாயின் நஞ்சுக்கொடி வழியே குழந்தையின் கண்களுக்குள் போய் விடும். அது குழந்தையின் உடல், கண்கள் எல்லாவற்றையும் பாதிக்கக்கூடியது. அதனால்தான் கர்ப்பிணிகள் பூனைகளின் அருகில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். வீட்டுப்பூனையாக இருந்தாலும் போகக்கூடாது.

வேறு வழியில்லாமல் பூனையின் அருகில் இருக்க வேண்டி வந்தாலும் பூனையின் கழிவுகளை அகற்றும்போது கிளவுஸ் அணிந்து கவனமாகச் செயல்பட வேண்டும். இந்தக் கிருமியானது குழந்தையின் கண்களில் உள்ள விழித்திரையை பாதிக்கும். தவிர, பிறக்கும்போதே காய்ச்சல், மூளைக்காய்ச்சல் போன்றவையும் குழந்தையை தாக்கலாம். பூனையால் ஏற்படக்கூடிய இந்த பாதிப்பு பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை என்பதால், அது குழந்தையின் கண்களை தாக்கியதும் பிறந்த போது தெரியாது. ருபெல்லாவாவது கர்ப்பிணியின் உடலில் சில அறிகுறிகளைக் காட்டும். இந்த டாக்ஸோபிளாஸ்மாசிஸ் கர்ப்பிணியிடம் எந்த அறிகுறிகளையுமே காட்டாது என்பதால் சந்தேகம் வர வாய்ப்பில்லை.

3. மூன்றாவது விஷயம்… கர்ப்பமாக இருக்கும்போது எடுத்துக் கொள்கிற மருந்துகள். சாதாரண காய்ச்சல், தலைவலிக்குக்கூட மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொள்ளக்கூடாது. புற்றுநோய், சிறுநீரகக் கோளாறுகள் போன்றவற்றுக்கு அளவுக்கதிகமாக மருந்துகள் எடுத்துக் கொண்ட கர்ப்பிணிகளும், குழந்தை பிறந்ததும் கண் மருத்துவரிடம் காட்ட வேண்டும். அம்மா எடுத்துக் கொள்கிற எல்லாமே நஞ்சுக் கொடி மூலம் அப்படியே குழந்தைக்கும் போகும். எனவே, அம்மா எடுத்துக் கொண்ட மருந்துகள், குழந்தையின் கண்களை, குறிப்பாக விழித்திரையை பாதித்திருக்கலாம்.

4. புகைப்பழக்கமும் மதுப்பழக்கமும் பெண்களிடமும் அதிகரித்து வருகிற நிலையில், அதுவும் பிறக்கப் போகிற குழந்தையின் பார்வையைப் பெரியளவில் பாதிக்கலாம்.

குழந்தை பிறந்ததும் உடனடியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள்…

ருபெல்லா தடுப்பூசியான எம்.எம்.ஆர். போடப்படாவிட்டாலோ, கர்ப்பமாக இருக்கும்போது காய்ச்சல் வந்திருந்தாலோ, பிரசவமான உடனேயே குழந்தையை கண் மருத்துவரிடம் காட்டிப் பரிசோதித்துக் கொள்ள வேண்டியது மிக முக்கியம்.

வீட்டில் பூனைகள் வளர்ப்போரும், குழந்தை பிறந்ததும் கண் மருத்துவரிடம் காட்ட வேண்டும். பிறக்கும் போதே குழந்தைக்குக் காய்ச்சலோ, வலிப்போ இருந்தாலும் கண் பரிசோதனை அவசியம்.

பிரசவ வலியால் நீண்ட நேரம் அவதிப்பட்டு குழந்தை பெற்ற பெண்களும், ஆயுதம் போட்டு குழந்தையை வெளியே எடுத்த பெண்களும் குழந்தை பிறந்ததும் கண் மருத்துவரிடம் காட்ட வேண்டும். கர்ப்பிணிப் பெண்கள் உணவில் பாதாம், வால்நட், குங்குமப்பூ, பொன்னாங்கண்ணிக்கீரை ஆகியவற்றை அதிகம் சேர்த்துக் கொண்டால் பிறக்கப் போகிற குழந்தையின் பார்வைத் திறன் மேம்படும்.
ld4264

Related posts

ஆண் அல்லது பெண் குழந்தையை விரும்பும் பெண்களுக்கான உணவுகள்

nathan

காபியை அடிக்கடி அன்றாடம் குடிப்பவர்கள் கட்டாயம் இத படிங்க!….

sangika

கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள்

nathan

கர்ப்பிணி பெண்கள் கவனத்திற்கு…

nathan

பிறந்த குழந்தைகளுக்கு வரப்பிரசாதம் தாய்ப்பால்

nathan

குழந்தைக்கு மசாஜ் செய்வது எப்படி?

nathan

பனிக்குட நீர் பற்றாக்குறையா?

nathan

குறைப்பிரசவத்தை தடுக்க மருத்துவ கண்காணிப்பு அவசியம்

nathan

கர்ப்ப காலத்தில் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக ஏற்படும் நீரிழிவு பிரச்சனை

nathan